Wednesday, April 23
Shadow

மீண்டும் இணைய உள்ள விஜய் – காஜல் அகர்வால் ஜோடி

தமிழ்த் திரையுலகத்தில் வெற்றிகரமான ஜோடி ஒன்று அமைந்தால் அடுத்தடுத்து சில படங்களில் மீண்டும் தொடர்வது வழக்கம்தான். தொடர்ந்து பல படங்களில் ஒரே ஜோடி நடித்த காலம் கூட இருந்தது. ஆனால், இப்போதோ ரசிகர்களுக்கு படத்திற்குப் படம் புது ஜோடிகளைப் பார்த்தால்தான் கொண்டாட்டம். இருந்தாலும் அந்த ‘ஜோடி’ ராசி முற்றிலுமாகப் போய்விடவில்லை. குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடர்வதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது விஜய் – காஜல் அகர்வால் ஜோடி மீண்டும் இணைய உள்ளதாகத் தெரிகிறது.

‘தெறி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் அட்லீ – விஜய் மீண்டும் இணைய உள்ள படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்த ‘துப்பாக்கி’ படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு அவர்கள் மீண்டும் இணைந்து நடித்த ‘ஜில்லா’ படமும் வெற்றியைப் பெற்றது. இப்போது தமிழ்த் திரையுலகில் ஹீரோயின்கள் பஞ்சம் அதிகமாக உள்ளதால் காஜல் அகர்வாலுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அஜித் ஜோடியாக தற்போது நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு தமிழில் வேறு வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஜீவா ஜோடியாக காஜல் நடித்துள்ள ‘கவலை வேண்டாம்’ விரைவில் வெளியாக உள்ளது.

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. அதனால் அட்லீ – விஜய் படம் பற்றிய அறிவிப்புகள் விரைவில்வெளியாகலாம்.

Leave a Reply