Saturday, October 12
Shadow

தலைவர்கள் என்ன கடவுள்களைவிட பெரியவர்களா? சர்ச்சை கிளப்பும் ’பகிரி’ இயக்குனர்

தமிழ் சினிமாவில் முதன்முறையாக மதுபானக்கடையில் வேலை செய்பவர்களை
பின்னணியாகக் கொண்டு ஒரு படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் நாயகன்,
நாயகி இருவரது குடும்பமுமே டாஸ்மாக் கடையில் பணிபுரிகிறார்கள்.

படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் மது அருந்தும் காட்சி வைத்தாலே அதற்கு
ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன இந்த சூழலில் இப்படி ஒரு ஐடியா எப்படி
உருவானது? படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணனிடம் கேட்டோம்.

‘’இன்றைய இளைஞர்கள் அரசாங்க வேலையையோ, அல்லது வொயிட் காலர் ஜாப்
எனப்படும் சொகுசான வேலையையோத் தான் அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். அதில்
டாஸ்மாக் பணியும் ஒன்று.

படத்தின் நாயகனும் நாயகியும் மதுபானக் கடையாக இருந்தாலும் இதுவும்
அரசாங்க வேலை தானே என்றுதான் இந்த வேலையில் சேர்கிறார்கள். கடை
கிடைக்கவில்லை என்பதால் தங்களது வீட்டையே டாஸ்மாக்காக மாற்றி வியாபாரம்
செய்வார்கள். அந்த வகையில் டாஸ்மாக் பணியாளர் ஒருவனின் காதல் கதை தான்
’பகிரி’.

இரு குடும்பத்து பெரியவர்களுமே குடிக்கு அடிமையானவர்கள். அதன்
விளைவுகளையும் படத்தில் விளக்கியுள்ளேன். நாம் குடிப்பதற்கோ குடியை
விற்பதற்கோ தயங்குவதில்லை. ஏனென்றால் குடி நம் வாழ்க்கையோடே
ஒன்றாகிவிட்டது.

படம் முழுக்க டாஸ்மாக்கும், குடியுமாக இருக்கும். ஆனால் படம்
முடியும்போது படத்தை பார்த்த இளைஞர்களுக்கு நாம் செய்வது சரியா? நமக்கு
சோறு போடும் விவசாயத்தை வெறுப்பது சரியா? என பல கேள்விகள் நிச்சயம்
எழும்.

முன்பெல்லாம் மதுபானக்கடையில் வேலை பார்க்க தயங்குவார்கள். ஆனால்
இப்போது இளைஞர்கள் மதுபானக்கடையில் பணிபுரிய விரும்புகிறார்கள்.இப்படி
ஒரு சூழ்நிலை ஏன் உருவானது என்பதும் படம் பார்ப்பவர்களுக்கு புரியும்.
இதனை விளக்கும்போது நிச்ச்யம் ஆட்சியாளர்களை வசனங்கள் குறிவைக்கும் என்பது
தெரியும். அதற்காக நான் எந்தவித சமரசமும் செய்துகொள்ளவில்லை.

படம் பார்த்தபிறகு சென்சார் அதிகாரிகளே என்னிடம் ‘படம் பார்க்க
நாங்கள் நேரம் குறைவாகத் தான் எடுத்துக்கொண்டோம். அதன்பின் எங்களை ஒரு
நீண்ட விவாதத்துக்கே அழைத்து சென்றுவிட்டது படம்’ என்றார்கள். இதே
விவாதம் படம் வெளியான பிறகு தமிழ்நாடு முழுக்க நடக்கும். ஏனென்றால் நான்
படத்தின் மூலம் கேட்டிருக்கும் கேள்விகள் எல்லாமே சாமானிய மக்கள்
ஒவ்வொருவரின் மனதுக்குள் இருக்கும் கேள்விகள் தான். அவற்றை சாமானிய
மக்களின் சார்பில் பதிவு செய்திருக்கிறேன்’’ என்றார்.

சென்சார் போர்டில் மிரட்டினார்களாமே?

அதிகாரிகள் அல்ல அது. கீழ்மட்டத்தில் உள்ள மெம்பர்கள் ‘இந்த படம்
ரிலீஸானால் உங்களைக் கொன்று விடுவார்கள்’ என்று நேரடியாகவே
எச்சரித்தார்கள். நான் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தேன்.

தவிர படத்தில் ஒரு காட்சியில் தமிழகத்தின் முக்கிய இரு தலைவர்கள்
வேடம் அணிந்தவர்கள் டாஸ்மாக்கில் வந்து சரக்கு கேட்டு கெஞ்சுவதுபோல ஒரு
காட்சி வரும். அதனை நீக்க சொன்னார்கள். நான் மறுத்தேன். மதுபானக்கடை என்ற
படத்தில் கடவுள் வேடம் அணிந்தவர்களே குடிப்பது போல காட்டினார்கள்.
தலைவர்கள் என்ன கடவுள்களை விட பெரியவர்களா? என்று கேட்டேன். ஆனால்
அதிகாரிகள் பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள்.

அந்த காட்சி உள்பட 18 காட்சிகளை வெட்டச் சொல்லிவிட்டார்கள். அப்படி
செய்தும் கூட படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தான் கொடுத்திருக்கிறார்கள்.
மக்களுக்கு நல்லது சொல்லும் ஒரு படத்தை எடுத்தால் இதுதான் நிலைமையா?
என்று வேதனையடைந்தேன். யு/ஏ சான்றிதழ் என்பதால் வரிவிலக்கு கிடைக்காது.
பரவாயில்லை. இளைஞர்கள் நல்வழி செல்ல வேண்டும் என்பதற்காக என் லாபத்தை
விட்டு தர முடிவு செய்துவிட்டேன்’’ என்றார்.

கலகலப்பான நகைச்சுவையுடன், இளைஞர்களுக்கான ஒரு மெஸேஜுடன்
தயாராகியிருக்கும் பகிரி படம் வரும் 16 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

பகிரி படத்தில் நாயகனாக பிரபு ரணவீரன் நடித்திருக்கிறார். இவர் விஜய்
டிவியின் ‘கனாக்காணும் காலங்கள் தொடரின் நாயகனாக நடித்தவர். நாயகி
ஷ்ரவியா. இவர் ஆந்திர வரவு.

ரவிமரியா, ஏ.வெங்கடேஷ், சரவண சுப்பையா, மாரிமுத்து, டி.பி. கஜேந்திரன்,
கே.ராஜன், பாலசேகரன் என பல இயக்குநர்கள் முக்கிய வேடமேற்று
நடித்துள்ளார்கள். திருமாவேலன், சூப்பர்குட் சுப்ரமணி மற்றும் பலரும்
நடித்துள்ளனர்.

இளைஞர்களை கவரும் வகையில் கமர்ஷியல் எண்டெர்டெய்னராக உருவாகி இருக்கும்
பகிரி படத்தை ‘மீரா ஜாக்கிரதை’, ’பைசா’ படங்களை வெளியிட்ட வொயிட்
ஸ்க்ரீன் சார்பில் எம். அந்தோணி எட்வர்ட் உலகம் முழுக்க வெளியிடுகிறார்.

Leave a Reply