பராரி திரை விமர்சனம்
எழில் பெரியவேடி இயக்கத்தில் அரிசங்கர், சங்கீதா ஆகியோர் நடித்துள்ள படம் பராரி. இப்படத்தின் கதைப்படி திருவண்ணாமலையில் வருடத்தில் எட்டு மாதங்கள் கரும்பு வெட்டுவதற்கு கூலி வேலைக்கு செல்லும் மக்கள் மீதி நான்கு மாதங்கள் பெங்களூருவில் உள்ள ஜூஸ் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிடுகின்றனர். இதுவே இவர்களது வாழ்க்கையாக உள்ளது. உள்ளூரில் உயர்சாதியினரால் காலங்காலமாக அடக்குமுறைக்கு ஆளாகின்றனர். நாயகன் ஊர் மக்கள். அங்குள்ள பாறை ஒன்றிக்கு இருதரப்பினருக்கும் பகை நீடித்து வருகிறது. இந்த நிலையில் ஜூஸ் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் இருதரப்பு மக்களும் அங்குள்ள கன்னட அமைப்பினரால் பிரச்சினை வருகிறது. இறுதியில் என்ன ஆனது என்பதே பராரி.
ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிக்க சாதியினர் இடையேயான பிரச்சினை என வழக்கமான சாதிய அடக்குமுறை படமாக தொடங்கி பெங்களூர் சென்றதும் இன, மொழி சண்டையாக மாறி விடுகிறது. நாயகன் அரிசங்கர் நன்றாக நடித்துள்ளார். ஆதிக்க சாதியை சேர்ந்த நாயகி தன்னை காதலிப்பதாக நெருங்கி வரும் போது எல்லாம் விலகிச் செல்கிறார். அடக்குமுறைக்கு எதிராக கோபம் கொள்வதாகட்டும் சில இடங்களில் விலகிச் செல்வதாகட்டும் கவனம் ஈர்க்கிறார். நாயகி சங்கீதா திருவண்ணாமலை பெண்ணாக அப்படியே பொருந்திப் போகிறார். நன்றாகவும் நடித்துள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
வில்லனாக புகழ் அப்படியே கர்நாடக இளைஞரை கண்முன் கொண்டு வந்துள்ளார். இங்கே நீங்கள் மேல் சாதி, கீழ் சாதி என்று அடித்துக் கொண்டாலும் தமிழகத்தை தாண்டினால் அவங்களுக்கு நீங்கள் எல்லோருமே ஒன்னுதான் என்பதை சிறப்பாக காட்டியுள்ளார் இயக்குனர். பாடல்கள் நன்று. ஸ்ரீதரின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை கண்முன் கொண்டு வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் சமீபத்திய படங்கள் சாதிய மைய படங்களாக வந்து கொண்டு இருக்கின்றன. அதற்கு பராரியும் விதிவிலக்கு அல்ல. பெங்களூரு ஜூஸ் கம்பெனி காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஆனாலும் எல்லாத்தையும் காட்டிவிட்டு இதுவெல்லாம் தப்பு என பாடம் எடுப்பது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. கிளைமாக்ஸ் காட்சியில் அத்தனை வன்முறை தேவையில்லாதது. இது எல்லாம் இருந்தால்தான் சிறந்த படம் என சொல்வார்கள் என இயக்குனர் நினைத்துவிட்டார் போல.
மொத்தத்தில் நல்ல கருத்தை இன்னும் கவனமாக , ஆழமாக பதிவு செய்திருந்தால் இன்னும் நல்ல படமாக வந்திருக்கும். பராரி – பரவாயில்லை. ரேட்டிங் 2.5/5