Thursday, June 1
Shadow

ரேசர் – திரைவிமர்சனம் ரேங்க் 2.5/5

 

நாயகன் அகில் சந்தோஷுக்கு சிறு வயது முதலே பைக் மற்றும் பைக் ரேஸ் மீது ஆர்வம் ஏற்படுகிறது. அதையடுத்து தான் ஒரு பைக் ரேசர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் பயணிக்கும் அவருக்கு குடும்பத்தில் இருந்து ஒத்துழைப்பு கிடைக்காமல் போகிறது. இருப்பினும் தனது லட்சியத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும், என்று பயணிப்பவர் தான் நினைத்தது போல் பைக் ரேசர் ஆனாரா? இல்லையா? என்பது தான் ’ரேசர்’ படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் அகில் சந்தோஷ் முதல் படம் போல் இல்லாமல் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார். தான் ஆசைப்பட்டதை தனது தந்தையிடம் கேட்டு அடம் பிடிப்பது, பிறகு அது கிடைக்காத பட்சத்தில் தன்னை சமாதனப்படுத்திக் கொண்டு பயணிப்பது என பக்கத்து வீட்டு பையன் போல் மிக இயல்பாக வலம் வருகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் லாவண்யா, குறைவான காட்சிகள் வந்தாலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.

 

பைக் மெக்கானிக்காக நடித்திருக்கும் ஆறு பாலா, லட்சியத்தோடு பயணித்து அதில் வெற்றி பெற முடியாமல் தவிப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நடித்திருப்பதோடு, அவர்களுக்கான நம்பிக்கையாகவும் ஜொலிக்கிறார்.

 

நாயகனின் தந்தை வேடத்தில் நடித்திருக்கும் மூர்த்தியின் வேடம் ஹீரோவுக்கு நிகராக கவனம் பெறுகிறது. வீட்டுக்கு ஒத்த பிள்ளையாக இருந்தாலும், அவனது ஆசைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், பிறகு மகனின் ஆசையை புரிந்துக்கொண்டு நிறைவேற்றுவது என்று நடிப்பில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

 

நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் சரத், நிர்மல் மற்றும் சதீஷ் ஆகியோரின் கதாபாத்திரமும், நடிப்பும் கவனம் பெறும்படி இருக்கிறது. அதிலும் அவர்களுடைய காமெடி காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைப்பதோடு படத்திற்கு கூடுதல் பலமாகவும் அமைந்திருக்கிறது.

 

வில்லனாக நடித்திருக்கும் அரவிந்த், நாயகனின் பயிற்சியாளராக நடித்திருக்கும் அனீஷ் மற்றும் அம்மாவாக நடித்திருக்கும் பார்வதி என அனைவரும் தங்கள் வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் பிரபாகர் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறார் என்பதை விட, பட்ஜெட்டுக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தனக்கு கிடைத்த குறைவான வசதிகளை வைத்துக்கொண்டு பைக் ரேஸ் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்க முயற்சித்திருக்கும் ஒளிப்பதிவாளர் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

 

இசையமைப்பாளர் பரத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

படத்தொகுப்பாளர் அஜித் என்.எம், படத்தை வேகமாக நகரும்படி தொகுத்திருப்பதோடு, காட்சிகளை சுருக்கமாக தொகுத்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.

 

விலையுர்ந்த விளையாட்டு போட்டியான பைக் ரேஸை மையமாக வைத்து ஒரு திரைப்படம் தயாரிப்பது என்றால் அதன் முதலீடும் மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும். ஆனால், இயக்குநர் சாட்ஸ் ரெக்ஸ், தனக்கு கிடைத்த சிறிய பட்ஜெட்டையும், சிறு வசதிகளையும் வைத்துக்கொண்டு இப்படி ஒரு படத்தை இயக்கியிருக்கும் அவரது முயற்சியை முதலில் பாராட்ட வேண்டும்.

 

பைக் ரேஸ் என்பதால், வெறும் போட்டியை மட்டுமே காட்சிப்படுத்தாமல், அத்தகைய ஒரு போட்டியில் ஈடுபட விரும்பும் ஒரு நடுத்தர குடும்பத்து இளைஞனின் மன போராட்டங்களை மிக அழுத்தமாகவும் அதே சமயம் ஜாலியாகவும் சொல்லி படத்தை ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் சாட்ஸ் ரெக்ஸ், தந்தை – மகன் இடையே நடக்கும் காட்சிகளை மிக இயல்பாக காட்சிப்படுத்தி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.

பைக் மற்றும் பைக் ரேஸ் மீது தனக்கு ஆர்வம் ஏற்பட்டது குறித்து நாயகன் சொல்லும் சிறு வயது பிளாஷ்பேக் காட்சிகளும், அதை தொடர்ந்து நாயகனின் நண்பன் சொல்லும், தாத்தாவுக்கு கிடைத்த பாதாம் பால் கதையும் ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கிறது.

 

பைக் ரேஸில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு சரியான களமும், அங்கீகாரமும் கிடைத்தால், சாலைகளில் பந்தயம் ஓட்ட மாட்டார்கள் என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கும் இயக்குநர், இத்தகைய விளையாட்டுகளில் பிள்ளைகள் என்ன தான் சாதித்தாலும், பெற்றோர்கள் அனுமதி என்பது அறிதான ஒன்று என்பதையும், அதற்கு காரணம் பணம் மட்டும் இன்றி இதில் இருக்கும் ஆபத்து என்பதையும் சொல்லிய விதம் சபாஷ் சொல்ல வைக்கிறது.

 

மொத்தத்தில், மிகப்பெரிய முயற்சியை மிக சாதாரணமாக கையாண்டிருக்கும் ‘ரேசர்’-க்கு வெற்றி நிச்சயம்