லந்தக்கூட்டு…அலும்ப ஏத்து…, அலப்பறையா… ஆட்டம் போட்டு…” என்னும் ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ கிரிக்கெட் அணியின் பாடல் வரிகளை கேட்கும் பொழுதே, நம் மனங்களில் மதுரை மண் வாசனை வீசுகிறது. விரைவில் நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்நாடு பிரிமீயர் லீக்’ கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் பல்வேறு சிறந்த அணிகளில் ஒன்றான ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ இன்று சென்னையில் தங்கள் அணியின் வீரர்களை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்திய அணியின் தலைச் சிறந்த ஆட்டக்காரரும், அதிரடி ஓப்பனிங் வீரருமான விரேந்தர் சேவாக் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த விழாவில், ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ அணியின் இயக்குனர் தயாநிதி அழகிரி, ‘மதுர மைக்கல்’ சிலம்பரசன், இசையமைப்பாளர் அனிரூத், அணியின் உரிமையாளர் ரபிஃக், இந்திய அணியின் முன்னாள் வீரர் எல். சிவராமகிருஷ்ணன், ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ அணியின் பாடலை இசையமைத்த இசையமைப்பாளர் தமன், அந்த பாடலுக்கு வரிகள் எழுதிய அருண்ராஜா காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை வெகு விமர்சையாக சிறப்பித்தனர்.
“தமிழ்நாடு பிரிமீயர் லீக்’ வெறும் ஒரு கிரிக்கெட் போட்டி என்பதையும் தாண்டி, மாநில அளவில் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு சிறந்த அடித்தளமாகவும் விளங்குகின்றது. இந்த ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ அணிக்காக நீங்கள் விளையாடும் ஆட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் காண இருக்கிறது…இதன் மூலம் நீங்கள் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பையும் பெறலாம்…” என்று ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ அணியின் வீரர்களை ஊக்குவிக்கும் விதத்தில் கூறினார் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக்.
‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ அணிக்காக இசையமைத்த இசையமைப்பாளர் தமன், தான் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர் என்றும், சச்சின் மற்றும் சேவாக் கூட்டணி ஆட்டத்தை பார்க்க பல இரவுகள் தூங்காமல் இருந்திருக்கிறார் என்றும் கூறினார். “நான் பத்து படங்களுக்கு இசையமைத்த மகிழ்ச்சியை, தற்போது இந்த ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ அணிக்காக இசையமைத்திருக்கும் “ஆட்டைக்கு ரெடியா’ பாடல் மூலம் பெற்று இருக்கிறேன். மதுரை மண்ணுக்காக இசையமைத்தது எனக்கு பெருமையாக இருக்கிறது…”என்றார் இசையமைப்பாளர் தமன்.
“கோத்தாரி குரூப்ஸ்’ நிறுவனத்திற்கும், எனக்கு இந்த மேடையில் பேச வாய்ப்பளித்த எனது சகோதரர் தயாநிதி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஆட்டைக்கு நான் ரெடி….” என்று உற்சாகத்துடன் கூறினார் இசையமைப்பாளர் அனிரூத்.
“ரயில் பயணத்தில் ‘வித் அவுட்’ என்னும் ஒன்று இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தியதே கிரிக்கெட் தான். மாநில அளவில் நான் பங்கேற்க இருக்கும் கிரிக்கெட் போட்டிக்காக, ரயிலில் பயணச்சீட்டு கூட இல்லாமல் நான் பயணித்து இருக்கிறேன். அந்த அளவிற்கு கிரிக்கெட் மீது எனக்கு எல்லையற்ற ஈர்ப்பு உண்டு. கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான் என போற்றப்படும் விரேந்தர் சேவாக் சாருடன் நான் இந்த மேடையில் நிற்பேன் என்று சிறிதளவும் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு வாய்ப்பை எனக்கு அளித்த என் நெருங்கிய நண்பர் தயாநிதி அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். ‘ஆட்டைக்கு ரெடியாக இருக்கும் ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ அணி என்றுமே “சிறப்பு”…என்று தனக்குரிய ஸ்டைலான பாணியில் கூறினார் ‘மதுரை மைக்கல்’ சிலம்பரசன்.
“என் வாழ்க்கையில் இரண்டே விஷயங்களை மட்டும் தான் நான் பெரிதாக நினைக்கிறன். ஒன்று கிரிக்கெட், மற்றொன்று என்னை வளர்த்து இந்த மேடையில் நின்று பேச வைத்திருக்கும் என்னுடைய மதுரை மண். இன்று இவை இரண்டும் இணையும் ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பது எனக்கு தருகிறது’ என்றார் தரை தயாநிதி.
அணியின் உரிமையாளர் கோத்தாரி நிறுவனத்தை சார்ந்த ரஃபி கூறும் போது ‘கோத்தாரி’ நிறுவனமானது மதுரையில் பிரத்தியேகமாக ஒரு ‘கிரிக்கெட் அகாடமியை’ நிறுவி உள்ளோம்.. வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படாத பல இளம் கிரிக்கெட் வீரர்களை இந்த கிரிக்கெட் அகாடமி வெளியே கொண்டு வரும். விரைவில் மதுரை மண்ணை சேர்ந்த ஒரு இளம் கிரிக்கெட் வீரரையாவது நம் இந்திய அணியில் பார்க்கலாம்…நடைபெற இருக்கும் ‘தமிழ்நாடு பிரிமீயர் லீக்’ கிரிக்கெட் போட்டியில் நிச்சயம் எங்களின் ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ அணி வெற்றி கோப்பையை கைப்பற்றும்….” என்று நம்பிக்கையுடன் கூறினார்.