Thursday, June 13
Shadow

சாமானியன் – திரைவிமர்சனம் Rank 3.5/5

 

நீண்ட காலத்துக்கு பிறகு மீண்டும் தமிழ்திரையில் மக்கள் நாயகன் ராமராஜன் திரைக்கு வருவது நமக்கு சந்தோசம் கொடுக்க போகிறதா இல்லை நம்மை சோதிக்க போகிறாரா என்று பார்ப்போம் .

ராமராஜன்,எம்.எஸ்,பாஸ்கர்,ராதாரவி,போஸ் வெங்கட்,சரவண சுப்பையா,கே.எஸ்.ரவிக்குமார்,மைம்கோபி, லியோ சிவகுமார்,நகிஸா சரண் வினோதினி,தீபா சங்கர்,சிம்ருதி வெங்கட்,மற்றும் பலர் நடிப்பில் இளையராஜா இசையில் ஆர்.ராகேஷ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் சாமானியன்

மதுரையில் இருந்து சென்னை வரும் நாயகன் ராமராஜன், தனியார் வங்கி ஒன்றில் நுழைந்து துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு முனையில் அங்கிருப்பவர்களை சிறை வைக்கிறார். அந்த வங்கியில் கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்க நகைகள் இருந்தாலும், அவற்றை எடுக்காமல், வங்கியின் உதவி மேலாளரிடம் இருந்து ரூ.2.75 லட்சம் கேட்பவர், வங்கி மேலாளரிடம் ரூ.3.50 லட்சத்திற்கான மூன்றாண்டுகள் வட்டியை மொத்தமாக கேட்கிறார். மூன்றாவதாக, வங்கியின் மற்றொரு அதிகாரி வசித்து வரும் வீட்டை காலி செய்து, மதுரையில் உள்ள இளம் தம்பதி மற்றும் அவர்களது குழந்தையை அழைத்து வந்து குடி வைக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கிறார்.

ராமராஜனின் நிபந்தனைகள் மிக எளிமையானவையாக இருந்தாலும், இதற்கு பின்னணியில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் காவல்துறை குழப்பமடைவதோடு, தமிழகமே இந்த விசயத்தை உற்று நோக்க ஆரம்பிக்கிறது. இந்த நிலையில், ராமராஜன் மதுரையில் இருந்து அழைத்து வர சொன்ன இடத்திற்கு காவல்துறை சென்று பார்க்கும் போது, அங்கு மூன்று சமாதிகள் மட்டுமே இருக்க, இறந்து போனவர்களுக்கும் ராமராஜனுக்கும் என்ன தொடர்பு, அவருடைய இத்தகைய செயலின் பின்னணி என்ன? என்பதை சாமானிய மக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கையாக சொல்வதே ‘சாமானியன்’.

விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கடந்து சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாயகனாக களம் இறங்கியிருக்கும் ராமராஜன், கதாநாயகி, காதல், பாடல் என்று கமர்ஷியல் நாயகனாக அல்லாமல், தற்போதைய வயதுக்கு ஏற்ற கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். “உன் டவுசரை அவிழ்த்துடுவோம்” என்று மிரட்டும் போலீஸுக்கு “என் வாழ்க்கை டவுசரோட தான் தொடங்கியது, இன்று வரை நல்லபடியாக போயிட்டு இருக்கு, அதனால் எனக்கு அது பெரிய விசயமே இல்லை” என்று ராமராஜன் கொடுக்கும் பதிலடிக்கு திரையரங்கில் விசில் சத்தம் காதை பிளக்கிறது. ராமராஜனுக்கு என்று தனி டிரெண்ட் இருந்தாலும், தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ற ஒரு கதையில், சங்கரநாராயணன் என்ற கதையின் நாயகனான கச்சிதமாக பொருந்திருப்பவர், தனக்கு கொடுப்பட்ட வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

ராமராஜனின் நண்பர்களாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ராதாரவி இருவரும் ராமராஜனுக்கு பக்கபலமாக இருப்பதோடு, தங்களது அனுபவமான நடிப்பு மூலம் திரைக்கதைக்கும் பலமாக பயணித்திருக்கிறார்கள்.

இளம் ஜோடிகளாக நடித்திருக்கும் லியோ சிவகுமார் மற்றும் லக்‌ஷா சரண் காதல் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். சொந்த வீடு என்ற கனவு நினைவான பிறகும், கடன் தொல்லையால் நிலைகுலைந்து போகும் இவர்களது வாழ்க்கை, பார்வையாளர்களை கண்கலங்க வைக்கிறது.

வங்கி அதிகாரியாக நடித்திருக்கும் போஸ் வெங்கட், கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக நடித்திருக்கும் மைம் கோபி, காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் அபர்ணதி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கஜராஜ், ஸ்ருமதி வெங்கட், வினோதினி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் படத்திற்கு பலமாக உள்ளார்கள்

இளையராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்டும் ரகமாக இருந்தாலும், இளையராஜா – ராமராஜன் கூட்டணியின் பழைய பாடல்கள் சில இடங்களில் இடம்பெற்றிருப்பது கொண்டாடும் விதமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் சி.அருள் செல்வன், கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்திருந்தாலும், கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படத்திற்கு பலமாக அமைந்திருக்கும். குறிப்பாக நாயகன் ராமராஜனை காட்டிய விதத்தில் அவர் எந்த மெனக்கெடலும் மேற்கொள்ளவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது.

வங்கி கடன் மூலம் அவதிப்படும் மக்களின் நிலையை மட்டும் இன்றி, கடன் என்ற பெயரில் பொதுமக்களிடம் பகல் கொள்ளையடிக்கும் வங்கிகளின் திருட்டுத்தனத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கில் கே.கார்த்திக் குமார் எழுதியிருக்கும் கதையை மிக நேர்த்தியாக கையாண்டிருக்கும் இயக்குநர் ராகேஷ், பழிவாங்கும் கதையாக சொன்னாலும், அதை வித்தியாசமான பாணியில் சொல்லி ரசிகர்களை படத்துடன் தொடர்புபடுத்தி விடுகிறார்.

சொந்த வீடு என்பது அனைவருக்குமான கனவு தான், ஆனால் அந்த கனவுக்காக கடன் வாங்கும் போது கொஞ்சம் யோசியுங்கள், என்ற மெசஜை மிக அழுத்தமாக சொல்லி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு எச்சரிக்கவும் செய்திருக்கும் இயக்குநர் அதை சாமானிய மக்கள் புரிந்துக்கொள்ளும்படி மிக தெளிவாக சொல்லியிருப்பதோடு, கமர்ஷியல் அம்சங்களை அளவாக கையாண்டு படத்தை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியும் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

மொத்தத்தில், இந்த ‘சாமானியன்’ நம்மை ஏமாற்றவில்லை ரசிக்க வைக்கிறான்

சாமானியன் – திரைவிமர்சனம்