Saturday, July 13
Shadow

சைரன் – திரை விமர்சனம் (பாசப்போராட்டம் ) Rank 4/5

ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் படத்தின் திரை விமர்சனம் !

 

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு மனதை வருடும் தந்தை மகளின் பாசப்பிணைப்பு தான் சைரன் ஒரு பக்கம் பாசத்துக்கு ஏங்கும் தந்தையாக ஜெயம்ரவி ஒருபக்கம் கடமை உணர்ச்சியின் கறார் போலீஸ் ஆக
கீர்த்தி சுரேஷ் இந்த இருவரின் நடிப்பில் நம்மை மிரட்டுகிறார்கள்.

அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் முற்றிலும் வித்தியாசமான ஒரு குடும்பத்தை அதுவும் தகப்பன் மகளின் பாசப்போராட்டத்தை மிக அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.படம் அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும் படமாக அமைதுள்ளார். இயக்குனர் முதல் படத்திலே முத்திரை பதித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் யோகிபாபு,சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் சைரன். செய்யாத கொலைக்கான சிறைக்கு சென்ற நாயகன் பரோலில் வந்து வழி வாங்கும் கதைதான் இந்த சைரன். படத்தின் கதைப்படி காஞ்சிபுரத்தை சேர்ந்த நாயகன் ஜெயம் ரவி செய்யாத கொலைக்கான ஆயுள்தண்டனை பெற்று 14 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். பரோலில் தனது மகளை பார்க்க ஊருக்கு வருகிறார். அப்பா கொலைகாரன் என்பதால் அவருடன் பேச மறுக்கிறார் பள்ளிக்குச் செல்லும் மகள். மனைவியும் இல்லை. இந்த நிலையில் ஊரில் அடுத்தடுத்து சாதிக் கட்சி தலைவர்கள் கொல்லப்படுகின்றனர். இதன் விசாரணையை இன்ஸ்பெக்டரான கீர்த்தி சுரேஷ் விசாரித்து வருகிறார். பரோலில் இருந்து வந்த ஜெயம் ரவி மீது கீர்த்தி சுரேஷுக்கு சந்தேகம் வருகிறது. உண்மையில் ஜெயம் ரவி தான் கொலை செய்தாரா? மகள் அவருடன் பேசினாரா? செய்யாத கொலைக்கு ஏன் ஜெயம் ரவி ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

படத்தின் தொடக்கத்திலேயே வழக்கமான ஜெயம் ரவியாக இல்லாமல் நடுத்தர வயது தோற்றத்தில் வந்து ஆச்சரியப்படுத்துகிறார். நடிப்பிலும் அதற்கேற்ப உணர்ச்சிகளை வரவழைத்து ரசிக்க வைக்கிறார். மகளிடம் பாசத்திற்காக ஏங்குவது, கீர்த்தி சுரேஷ் விசாரணையில் லாவகமாக தப்பிப்பது, அமைதியாக இருந்து போலீசை குழப்புவது என கிடைத்த இடத்தில் ஸ்கோர் செய்கிறார். அழுத்தமான நடிப்பை கொடுத்து கவர்கிறார். கீர்த்தி சுரேஷ் இன்ஸ்பெக்டராக ஆரம்பத்தில் ஒருமாதிரி தெரிந்தாலும் போகப் போக ஒன்றிவிடுகிறார். விசாரணை செய்யும் போதும் உயர் அதிகாரியிடம் அசிங்கப்படும்போதும் அவர் தரும் சின்ன சின்ன ரியாக்ஷன்கள் நன்று. அவருக்கு இது ஒரு பெயர் சொல்லும் படம். கான்ஸ்டபிளாக வரும் யோகி பாபு அங்கங்கே சிரிக்க வைக்கிறார். அழகம் பெருமாள், அஜய், சமுத்திரக்கனி ஆகியோர் டெம்ப்ளேட் வில்லன்கள்தான் என்றாலும் திரைக்கதை அவர்களை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. அனுபமா பரமேஸ்வரன் வாய் பேச முடியாத காது கேட்காத நர்ஸ்ஸாக வந்து அநியாயமாக இறந்து போகிறார். ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் ஓகே . சாம் சிஎஸ் பின்னணி இசை கொஞ்சம் நெருடவைக்கிறது.

எஸ்கே செல்வகுமாரின் ஒளிப்பதிவு மற்றும் ரூபனின் படத்தொகுப்பு நன்று. இயக்குனரின் தேவை அறிந்து பணியாற்றியுள்ளனர். அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் நல்ல கதையை புதுமையான திரைக்கதையால் பார்க்கும் படி படத்தை கொடுத்துள்ளார். . மொத்தத்தில் சைரன் – வெற்றி. ரேட்டிங் 4/5.