சந்தானம் – வைபவி ஷந்திலியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் பாடல், முக்கியமான காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சிக்காக, கடந்த சில நாட்களாக துபாயில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு, நேற்றுடன் நிறைவு பெற்றது. துபாய் பாலைவனங்களின் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது, ‘சர்வர் சுந்தரம்’ படக்குழுவினர் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. கெனன்யா பிலிம்ஸ் சார்பில் செல்வக்குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஆனந்த் பல்கியின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரன் நாகேஷ் பிஜேஷ். ஒளிப்பதிவாளர் பி கே வர்மா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என வலுவான தொழில் நுட்ப கலைஞர்களை ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு.
“படத்தின் கதைக்கேற்ப, சுட்டெரிக்கும் பாலைவனங்கள் தேவைப்பட்டது…. எனவே நாங்கள் துபாயை தேர்வு செய்தோம்… அவ்வளவு வெயிலிலும், எங்கள் படக்குழுவினர், சிறிதளவு கூட சோர்வு அடையாமல் உற்சாகத்துடன் பணியாற்றினார்….அதற்கு பக்கபலமாய் செயல்பட்டவர் சந்தானம். இத்தகைய சூழ்நிலையிலும் அவர் சுறுசுறுப்புடனும் , மிகுந்த உற்சாகத்துடனும் பணியாற்றியது பாராட்டுக்குரியது. எங்கள் படப்பிடிப்பை தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறோம்… தொழில் நுட்ப ரீதியாக ‘சர்வர் சுந்தரம்’ படத்தை மேலும் மெருகேற்றும் பணிகள் பாதி எட்டியுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் எங்கள் ‘சர்வர் சுந்தரம்’ படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்…” என்று நம்பிக்கையுடன் கூறினார் இயக்குனர் ஆனந்த் பல்கி