பரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை விஜயா வாஹினி புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. ஸ்ரீக்ரீன் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றி இருக்கிறது.
‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விஜய். இப்படத்தை அட்லீ இயக்கவிருக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தொழில்நுட்ப கலைஞர்களுடன் முறையாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகும் 62வது படத்தை செல்வராகவன் இயக்கவிருப்பதாகவும், சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து விசாரித்த போது, “ஒரு படம் முடிவடையும் தருவாயில் தான், தனது அடுத்த படம் குறித்து கவனம் செலுத்துவார் விஜய். அட்லீ படம் உறுதியாகி இருக்கிறது. அதற்குள் தனது அடுத்த படம் குறித்து விஜய் முடிவு செய்யவில்லை. ஆனால், பல்வேறு இயக்குநர்கள் கதை சொல்லியிருப்பது உண்மை. யார் இயக்குநர் என்பதை இன்னும் விஜய் முடிவு செய்யவில்லை” என்று தெரிவித்தார்கள்.