Tuesday, September 10
Shadow

சில நொடிகளில் – திரைவிமர்சனம் Rank 2/5

சில நொடிகளில் – திரைவிமர்சனம்

அறிந்தும் அறியாமலும் படம் தமிழ் சினிமாவுக்கு தயாரிப்பளராக வந்த புன்னகை பூ கீதா தயாரிப்பில் வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா மற்றும் யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் சில நொடிகளில். முழுக்க லண்டனில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது.

லண்டனில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார் ரிச்சர்ட் ரிஷி. இவரின் மனைவியாக வருகிறார் புன்னகை பூ கீதா. நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் உள்ளே நுழைகிறார் யாஷிகா.

யாஷிகாவும் ரிச்சர்டும் மிகவும் நெருக்கமாகிறார்கள். இவர்கள் இருவரும் நெருங்கி இருந்த போது யாஷிகா இறந்துவிடுகிறார். இதனால் செய்வதறியாது, யாஷிகாவின் பிணத்தை காட்டு பகுதியில் குழி தோண்டி மறைத்து விடுகிறார்.

அதன் பின், ரிச்சர்டின் கனவில் தொடர்ந்து யாஷிகாவின் நினைவுகள் வந்து செல்ல நிம்மதியான வாழ்க்கை ரிச்சர்டால் வாழ முடியவில்லை.

இந்த மனநிலையில் இருந்து ரிச்சர்ட் மீண்டு வந்தாரா இல்லையா.?? இதற்குள் நடந்த ட்விஸ்ட் காட்சிகள் என்ன என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதை அளவோடு செய்து முடித்துள்ளனர்.

படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் யாஷிகா இறந்தது போன்று காட்டிவிட்டு, அதன் பிறகு வரும் காட்சிகள் அனைத்தும் மீண்டும் மீண்டும் ஒரே காட்சியாக இழுத்துக் கொண்டே சென்றது கதையின் சுவாரஸ்யத்தை கெடுத்து விட்டது.

ரிச்சர்டின் கனவில் யாஷிகா வருகிறார் என்பதை தொடர்ந்து காட்டிக் கொண்டே இருந்தது படத்திற்கு பெரும் பலவீனம்.

க்ளைமாக்ஸ் காட்சிகளான கடைசி 15 நிமிடங்கள் மட்டுமே சுவாரஸ்யம்.. குறும்படமாக எடுக்க வேண்டிய கதை திரைபடமாக எடுத்து சில நொடிகளில் முடிக்க வேண்டியதை சில மணி நேரமாக எடுத்து நம்மை சோதித்து உள்ளனர்

சில நொடிகளில் – பல பல சோகங்கள்