Sunday, May 19
Shadow

சிங்கப்பூர் சலூன் திரை விமர்சனம்! ( அழகு ) Rank 4/5

நீண்ட நாடுகளுக்கு பிறகு ஒரு நல்ல நகைசுவை கலந்த கருத்து படமாக வெளிவந்து இருக்கும் படம் தான் சிங்கப்பூர் சலூன். ஒரு தரமான படம் என்று சொல்லலாம் திரையரங்குக்கு சென்று சிரித்து மகிழ்ந்து பார்க்கும் படம் அதே நேரத்தில் இயக்குனர் கோகுல் நகைசுவையில் மட்டும் இல்லை நல்ல கருத்து சொல்வதிலும் சிறந்த இயக்குனர் என்று கூறியிருக்கிறார். இன்றைய இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு பாலம் சொல்லி இருக்கார் என்றும் சொல்லலாம்.

ஆர்ஜே வாக இருந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து பின்னர் கதை நாயகனாக நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் சிங்கப்பூர் சலூன். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, சத்யராஜ், தலைவாசல் விஜய், ரோபோ சங்கர், லால், கிஷன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசை அமைத்துள்ளனர். வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

படத்தின் கதைப்படி ஆர்ஜே பாலாஜி தென்காசியில் தனது பெற்றோர் உயிர் நண்பன் உடன் வாழ்ந்து வருகிறார். அந்த ஊரில் லால் ஒரு சலூன் வைத்துள்ளார். அவரது முடி வெட்டும் அழகை பார்த்து தானும் எதிர்காலத்தில் மிகப் பெரிய சிகை அலங்கார நிபுணராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ப்ளஸ் டூ முடித்ததும் தனது ஆசையை அப்பாவிடம் சொல்ல அவரோ முதலில் டிகிரி முடி அதன்பிறகு பார்க்கலாம் என்கிறார். அப்பாவின் ஆசைக்காக இன்ஜினியரிங் முடிக்கிறார். அதன்பிறகும் அதையே தான் செய்வேன் என்று கூறி இந்தியாவின் நம்பர் ஒன் சலூனில் வேலைக்கு சேர்கிறார். பிறகு காதலியை திருமணம் செய்துகொண்டு தனது லட்சியமான மிகப் பெரிய சலூன் கடையை லோன் வாங்கி திறக்கிறார். திடீரென அந்த சலூன் கடைக்கு பிரச்சினை வருகிறது. அது என்ன பிரச்சினை? அதிலிருந்து நாயகன் மீண்டாரா இல்லையா என்பதை நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் கோகுல்.

ஆர்ஜே பாலாஜி இதற்கு முன் நடித்த படங்களை காட்டிலும் இதில் அதிக ஈடுபாட்டுடன் நடித்துள்ளார். மேலும் தனது வழக்கமான கேலி, கிண்டல் வசனங்களை அளவே குறைத்துவிட்டு கதைக்கு என்ன தேவையோ‌ அதனை மட்டும் கொடுத்துள்ளார். இதனால் சென்டிமென்ட் காட்சிகளிலும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. ஆர் ஜே பாலாஜிக்கு பிறகு படத்தில் ரசிக்க வைப்பவர் சத்யராஜ். படம் தொடங்கி அரைமணி நேரம் கழித்து திரையை ஆக்கிரமிக்கும் அவர் இடைவேளை வரை படத்தை கலகலப்பாக கொண்டு செல்கிறார். அவரது அலப்பறை படத்தை தாங்கிப் பிடிக்கிறது. அதுவும் இடைவேளைக்கு முன்னர் வரும் பார் காட்சி உங்கள் வயிற்றை பதம் பார்ப்பது நிச்சயம்.

லால் தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். சிறுவயது ஆர்ஜே பாலாஜி மற்றும் கிஷன் தாஸாக நடித்த சிறுவர்களின் நடிப்பும் நன்று.‌ கிஷன் தாஸ் உயிர்த் தோழனாக துணை நிற்கிறார். ரோபோ சங்கர் காமெடி சற்று ரசிக்க வைப்பது ஆச்சரியம். விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ஓகே. படத்துக்கு தேவையான பின்னணி இசையை கொடுத்துள்ளனர். அன்பான மனைவியாக வந்து செல்கிறார் மீனாட்சி சவுத்ரி. முதல் பாதியை கலகலப்பாக கொண்டு சென்ற இயக்குனர் இரண்டாம் பாதியில் இயற்கை மீதான அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் மவுலிவாக்கம் கட்டிட விபத்தை அழகாக திரைக்கதையில் இணைத்துள்ளார். இரண்டாம் பாதியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது. உள்ளத்தில் உறுதியும் உழைப்பும் இருந்தால்

சாதாரணமானவன்கூட சாதிக்கலாம் என்கிறது இந்த சிங்கப்பூர் சலூன். மொத்தத்தில் சிங்கப்பூர் சலூன் – அழகு.

 

மொத்தத்தில் சாதனை சொல்லு தான் சிங்கப்பூர் சலூன் ரேட்டிங் 4/5