Saturday, April 26
Shadow

சொல்லிவிடவா – திரை விமர்சனம்(சொல்லவே இல்லை) (2/5)

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிருபராக வேலை பார்க்கிறார் நாயகன் சந்தன் குமார். சதீஷும், பிளாக் பாண்டியும் அதே கம்பெனியில், கேமரா மேனாக பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல், மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் நிருபராக வேலை பார்க்கிறார் நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன். இவருக்கு உதவியாளராக யோகி பாபு வருகிறார்.

ஐஸ்வர்யா, அவளது தாத்தா விஸ்வநாத்துடன் வாழ்ந்து வருகிறார். ஐஸ்வர்யாவுக்கு பாதுகாவலராக சுஹாசினி வருகிறார். சுஹாசினியின் மகனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கார்கில் போர் நடக்கிறது. போரை நேரில் படம் பிடிப்பதற்காக இரு தொலைக்காட்சி நிறுவனங்களின் சார்பாக சந்தன் குமாரும், ஐஸ்வர்யாவும் டெல்லி செல்கிறார்கள்.

இவர்கள் இருவரும் தன்னுடைய உதவியாளர்களிடம் பொய் சொல்லி அழைத்து செல்கிறார்கள். டெல்லி சென்ற பின் உண்மை தெரிந்து சதீஷ், பிளாக் பாண்டி, யோகி பாபு அங்கிருந்து ஓடிவிடுகிறார்கள். அதே சமயம், சந்தன் குமாரின் கேமராவும் உடைந்து விடுகிறது. இந்நிலையில், ஒரு கேமராவை வைத்து இருவரும் மாறி மாறி வேலை பார்க்கலாம் என்று சந்தன் குமாரும், ஐஸ்வர்யாவும் ஒப்பந்தம் செய்துக் கொள்கிறார்கள்.

பின்னர் கார்கில் போரை படம் பிடிக்க சென்ற இருவருக்கும் இடையே காதல் வருகிறது. இறுதியில் கார்கில் போரை இருவரும் படம் பிடித்தார்களா? காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்கள்? சுஹாசினியின் மகனுடன் திருமணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகன் சந்தன் குமார் புதுமுகம் என்று தெரியாதளவிற்கு நடித்திருக்கிறார். இருந்தாலும் தமிழ் நடிகராக ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன் அழகாக வந்து போதுமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நடனத்தில் ஓரளவு ரசிக்க வைக்கிறார். மொட்டை ராஜேந்திரன், சதீஷ், யோகி பாபு, பிளாக் பாண்டி, சுஹாசினி படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

மகளை வைத்து காதல் படத்தை இயக்கி இருக்கும் அர்ஜுன் அதனை திறம்பட செயல்படுத்தியிருக்கிறார் என்று சொல்லலாம். இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். போர் நடக்கும் இடத்தில் காதல் என என்பது இயல்பானதாக இல்லை என்றாலும் ஓரளவுக்கு ரசிக்க வைத்திருக்கிறார். தனக்கு உரிய தேசப்பற்றை இப்படத்திலும் காண்பித்திருப்பது சிறப்பு. படத்தின் நீளம் அதிகமாக இருப்பது திரைக்கதைக்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

ஜெஸ்சி கிப்ட்டின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை ஓ.கே. வேணுகோபாலின் ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘சொல்லிவிடவா’ தெளிவாக சொல்லவில்லை.

Leave a Reply