Sunday, November 3
Shadow

சுசீந்திரனின் ‘ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..!

சமீபத்தில் வெளியான ‘கோலிசோடா-2’ படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வசீகரித்துள்ளவர் க்ரிஷா க்ரூப் . இதற்கு முன் அழகு குட்டி செல்லம், கூட்டாளி ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு ‘கோலிசோடா-2’ ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தந்திருக்கிறது என சிலாகிக்கிறார் க்ரிஷா க்ரூப் .பரதநாட்டியம் தனது உயிர் மூச்சு என்கிற க்ரிஷாவின் பூர்விகம் மலையாளம், வளர்ந்தது மும்பையில்.. என்றாலும் அழகாக தமிழ் பேசுகிறார் .

சில வருடங்களுக்கு முன்பே மலையாளத்தில் ஒரு படத்தில் அறிமுகமானாலும் சினிமாவை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே விஸ்காம் படித்துவிட்டு மீண்டும் திரையுலகில் நுழைந்திருக்கிறார்.

அந்த மலையாள படத்தை பார்த்துவிட்டுத்தான் ‘அழகு குட்டி செல்லம்’ பட வாய்ப்பு இவரை தேடிவந்ததாம். தொடர்ந்து ஆண்டனி இயக்கத்தில் சாலை என்கிற படத்தில் நடித்தார். அதன்பின் வந்த வாய்ப்புதான் ‘கோலிசோடா-2’

“விஜய் மில்டன் சார் என்னை முதலில் அழைத்தது வேறு ஒரு படத்திற்குத்தான்.. ஆனால் அப்படியே காட்சிகள் மாறி ‘கோலிசோடா-2’ படத்தை துவங்கி அதில் என்னை கதாநாயகியாகவும் ஆக்கிவிட்டார்.

கோலிசோடா முதல் பாகத்துக்கு மிகப்பெரிய ரசிகை நான்.. அதன் இரண்டாம் பாகத்தில் நான் நடித்தது என்னுடிய அதிர்ஷ்டம் தான். எனக்கு அடையாளம் தந்தது என்றால் அது ‘கோலிசோடா-2’ தான்” என உற்சாகமாக கூறுகிறார் க்ரிஷா க்ரூப் .

“இந்தப்படத்தில் சமுத்திரக்கனி சாருடன் நடித்தபோது சினிமா குறித்த நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது. மொட்டை மாடியிலிருந்து இருந்து குதிக்கும் காட்சியில் சற்று பயமாக இருந்தது. ஆனால் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் அந்த காட்சியில் ஒரு கீறல் கூட விழாமல் என்னையே நடிக்க வைத்தார்” என கோலிசோடா-2 அனுபவம் பகிர்கிறார் கிரிஷா. ‘

கோலிசோடா-2’ பார்த்துவிட்டு நடிப்பில் இவர் ரேவதியை ஞாபகப்படுத்துகிறார் என சில ஊடகங்கள் பாராட்டி வருவதால் இன்னும் உற்சாகமாகி இருக்கிறார் க்ரிஷா க்ரூப் . நடிப்பில் தனது ரோல் மாடல்கள் என்றால் ரேவதி, ஷபானா ஆஸ்மி, ஸ்மீதா பாட்டீல் ஆகியோரை குறிப்பிடுகிறார் க்ரிஷா.

தற்சமயம் சுசீந்திரன் இயக்கிவரும் ‘ஏஞ்சலினா ‘ படத்தில் டைட்டில் ரோலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் க்ரிஷா க்ரூப் .

“திடீரென ஒருநாள் சுசீந்திரன் சார் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. ஆடிஷனும் ஓகே ஆனது. இப்போதுவரை அவர், எப்படி என்னை இந்த கேரக்டருக்காக தேர்வு செய்தார் என்கிற விஷயம் கூட எனக்கு தெரியாது.

சுசீந்திரன் சாரின் வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை இரண்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும். எல்லோரும் காமெடி நடிகராக பார்த்த ஒருவரை அவர் வேறு கோணத்தில் காட்டியிருப்பார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பார்.

அவரது பிலிம் மேக்கிங் ஸ்டைலே புதிதாக இருக்கும்” என்கிற க்ரிஷா இந்தப்படத்தின் ரிலீஸுக்கு பின்னர்தான் வேறு படங்களை ஒப்புக்கொள்ள முடிவு செய்துள்ளாராம்..