சமீப காலமாகவே, ஒரு திரைப்படத்தின் முன்னோட்டம் எனப்படும் டீசர், திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் இன்றியமையாதது ஆகிவிட்டது…. ஒரு திரைப்படத்தின் தரம் எவ்வாறு இருக்கும் என்பதை அந்த படத்தின் டீசர் மூலம் ரசிகர்கள் தெரிந்து கொள்கிறார்கள் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. வெறும் ஒரு சில வினாடிகளில் ரசிகர்களை கவர வேண்டும் என்பது எல்லா இயக்குநர்களுக்குமே ஒரு சவாலான காரியம் தான்…ஆனால் அந்த செயலில், தன்னுடைய 65 நொடிகள் ஓடக்கூடிய ‘தப்பு தண்டா’ படத்தின் டீசர் மூலம் நிலையான வெற்றி பெற்று இருக்கிறார், அறிமுக இயக்குநரும், பழம்பெரும் இயக்குநரான பாலுமகேந்திராவின் சீடரும் ஆன ஸ்ரீகண்டன்.
மிக குறைந்த நாட்களில் பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து புதியதொரு சாதனையை படைத்திருக்கிறது ‘தப்பு தண்டா’ டீசர் என்று சொன்னால் அது மிகையாகி விடாது. “கடவுள் தான் உலகத்த ஆளுறான்…. ஆனா அந்த கடவுளையே ஆள்றது பணம் தான்….” என்று மைம் கோபியின் மிரட்டலான குரலில் ஆரம்பமாகும் ‘தப்பு தண்டா’ டீசர், ரசிகர்கள் ஒவ்வொருவரையும் தங்கள் இருக்கையின் நுணியில் சுவாரசியத்தோடு அமர செய்திருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.
“ரசிகர்களிடம் இருந்து தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வருவது, எங்கள் ஒட்டுமொத்த ‘தப்பு தண்டா’ படக்குழுவினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது…எங்களுக்கு உறுதுணையாய் இருக்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்…விரைவில் வெளியாக இருக்கும் எங்களின் ‘தப்பு தண்டா’ திரைப்படம் நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்யும்….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘தப்பு தண்டா’ படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான சத்யமூர்த்தி.