விநாயகர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போய் கொண்டிருக்கிறது.விநாயகரின் மகிமையையும், புகழையும் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்க்க ‘கணேஷ் 365’ என்னும் ஓவிய கண்காட்சியை கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி சென்னையில் உள்ள உள்ள ஆர்ட் ஹவுஸில் துவங்கினார், விரைவில் வெளியாக இருக்கும் மியாவ் படத்தின் தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கலராஜ். இந்த கண்காட்சியில் இடம்பெற்ற 365 ஓவியங்களும் விநாயகரின் 365 அவதாரங்களை குறிப்பிடும் வண்ணமாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களால் இந்த ஓவியங்கள் அனைத்தும் வரையப்பட்டிருப்பது மேலும் சிறப்பு. இந்த மாணவர்களை கௌரவிக்கும் விதமாக நேற்று ‘லைப் அகைன்’ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கௌதமி மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கினார்.
“கலை என்பது ஒரு தரப்பு மக்களுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது…உலகில் பிறந்த அனைத்து மக்களுக்கும் அது பொதுவானது…இப்படிப்பட்ட அற்புதமான ஓவியங்களை வரைந்த மாணவர்களுக்கு நான் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்…கலையின் முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணர்த்த ‘கணேஷ் 365′ என்னும் முயற்சியை எடுத்த வின்சென்ட் சாருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்…’ என்று கூறினார் ‘லைப் அகைன்’ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கௌதமி. இந்த ‘கணேஷ் 365’ ஓவியக்காட்சியின் மூலம் திரட்டப்படும் நிதியானது ‘லைப் அகைன்’ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.