Tuesday, April 23
Shadow

வருகின்ற 6 ஆம் தேதி அன்று வெளியாகின்றது ‘வனமகன்’ படத்தின் டீசர்

‘போகன்’ படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் புகழின் உச்சியில் வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி, வர்த்தக உலகில் மேலும் ஆழமாக கால் பதித்து வருகிறார். எப்போதும் தன்னுடைய உடலை கட்டுமஸ்தாக வைத்திருத்தல், தன்னுடைய திறமையால் புது புது வெற்றிகளை தேடி செல்வது, இவை இரண்டும் ஜெயம் ரவியின் சிறப்பம்சங்கள். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ‘வனமகன்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவுபெற உள்ளது. இந்த படத்தை ‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ சார்பில் தயாரித்து, இயக்கி இருக்கிறார் இயக்குநர் விஜய். இயற்கை தந்த கொடை காடு. அந்த காடு ஈன்றெடுத்த மகனை மையமாக கொண்டு உருவாகி வரும் ‘வனமகன்’ படத்தின் டீசர், வருகின்ற பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்று உறுதி அளித்துள்ளார் இயக்குநர்.

இயற்கையின் மகனை பற்றிய கதை என்பதால், இந்த படத்திற்கு ‘வனமகன்’ என்று தலைப்பு வைத்துள்ளோம். கற்காலத்திற்கு முன்பு இருந்தே, வெகுளித்தனம் என்பது வனப்பகுதியில் வாழும் மக்களின் இரத்தத்தில் கலந்து இருக்கின்றது. அதனால் தான் என்னவோ, அவர்களின் வெகுளித்தனம் நிறைந்த முகங்களை பார்க்கும் பொழுது, அதில் ஒரு கடவுளின் சாயலை அனைவராலும் உணர முடிகின்றது. அவர்களின் கள்ளம் கபடம் இல்லா சிரிப்பு, பசுமை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய கால மக்களை வெட்கப்பட வைக்கும் என்பதை வெகுவாகவே சொல்லலாம். அத்தகைய கள்ளம் கபடம் இல்லாத சிறப்பம்சத்தை தன்னுடைய புன்னகையில் மட்டுமின்றி உள்ளத்திலும் கொண்டவர் ஜெயம் ரவி. அவருடைய முந்தைய படங்களுக்கு அவர் எடுத்த முயற்சிகள், எந்தவிதமான பருவ நிலையையும் எதிர்கொள்ளும் அவரின் தைரியம், கட்டுமஸ்தான உடல் அமைப்பு, அடர்ந்த காட்டு பகுதிகளில் ஊடுருவி செல்லும் திறன் என எல்லா சிறப்பம்சங்களையும் பெற்று இருக்கும் ஜெயம் ரவி தான், நான் இந்த கதையை எழுதும் பொழுது என் மனதில் தோன்றியவர். இதுவரை ரசிகர்கள் கண்டிராத புத்தம் புதிய கதைக்களத்தை இந்த படத்தில் கையாண்டு இருக்கின்றோம்.

‘வனமகன்’ படத்தின் கதாநாயகியாக புதுமுகம் சாயீஷா சாய்கல் நடிக்கிறார். நாளுக்கு நாள் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகும் இந்த நிலையில், நிச்சயமாக புது புது திறமையாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். அந்த வகையில், சாயீஷா சாய்கலுக்கு திரையுலகில் சிறந்ததொரு எதிர்காலம் இருக்கின்றது என்பதை உறுதியாகவே சொல்லுவேன். முதல் முறையாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜோடு இணைந்து பணியாற்றுவது, சிறந்ததொரு அனுபவத்தை எனக்கு வழங்கி இருக்கின்றது. எங்கள் படத்தின் முக்கியமான காட்சிகளை வியட்நாம், கம்போடியா நாடுகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் படமாக்கி இருக்கின்றோம். ஒளிப்பதிவாளர் திருவின் எழில்மிகு காட்சிகள் அனைத்தும் எங்கள் படத்திற்கு மேலும் அற்புதம் சேர்த்துள்ளது. அதுமட்டுமின்றி சாதனை படைக்க கூடிய வேகத்தில் இந்த ‘வனமகன்’ படத்தின் படப்பிடிப்பை நாங்கள் நிறைவு செய்து இருக்கின்றோம். எங்கள் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களின் வேலைப்பாடுகளும், வனமகன் படத்தில் பிரதிபலிக்கும். அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கின்றேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் விஜய்.

Leave a Reply