இதுவரைக்கும் தமிழ் சினிமாவுல மாசமான பேய், மோசமான பேய், மட்டமான பேய் என பலவிதமான பேய்களை கண் முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறார்கள். இந்த படத்துல வர்ற ராசாத்தி பேய் எந்த வகையான பேய் என்று யோசிப்பதற்குள் படமே முடிந்துவிடுகிறது. திடீர்னு பாசத்த காட்டுது, திடீர்னு கொலைவெறியோட தாக்குது…. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்பா…!
அரக்கோணத்திலிருந்து சென்னை ஐப்பன் தாங்கலில் இருக்கும் ஒரு கல்யாண மண்டபத்திற்கு பெயிண்டிங் வேலை செய்ய வருகிறார்கள் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள் எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, சாம்ஸ். வந்தவர்கள் அந்த கல்யாண மண்டபத்தில் பேய் இருப்பது தெரியாமல் உள்ளே நுழைந்துவிட அதன்பிறகு நடக்கும் கலாட்டாக்களை நகைச்சுவை கலந்து கூறியிருக்கிறார்கள்.
தன் காதலனுடன் திருமணம் நடக்கவிருக்கிறது என்கிற சந்தோஷத்தில் இருக்கும் ஸ்ராவியாவை கொடூரமாக எரித்து கொலை செய்துவிடுகிறார்கள். இதனால் தனக்கு நடக்காத திருமணம் இனி யாருக்கும் இந்த கல்யாண மண்டபத்தில் நடக்க கூடாது என்று மண்டபத்தை காவல் காத்து வருகிறார். இது தெரியாமல் மண்டபத்திற்கு பெயிண்டிங் வேலைக்கு நடந்ததை தெரிந்து கொண்டபின் அலறி அடித்துக் கொண்டு ஊர் பக்கம் போயிருவாங்கன்னு பார்த்தா பேயை எதிர்த்து சாமர்த்தியமாக போராடுகிறார்கள்.
கல்யாணமே நடக்காத இந்த திருமண மண்டபத்தில் இளம் ஜோடிக்கு சந்தோஷமாக திருமணம் நடந்துவிட்டால் அந்த பேய்கள் அனைத்தும் ஆத்மா சாந்தி அடைந்துவிடும் என்று சாமியார் கூற, திருமண ஜோடியை தேடி அலைகிறார்கள், கடைசியில் வேற வழியில்லாமல் நாயகனே மணமகனாக வந்து நிற்கிறார். ராஜன் மவுலிக்கு ஜோடியாக சூசா குமார் நடித்திருக்கிறார். படத்தின் இரண்டாவது பாதியில் கதை முழுவதும் சூசா குமாரை மையப்படுத்தியே நகர்கிறது. இறுதியில் ராஜன் மவுலிக்கும், சூசா குமாருக்கும் அந்த மண்டபத்தில் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே க்ளைமேக்ஸ்.
நாயகனகா ராஜன் மவுலி யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். பேயாக வரும் ஸ்ராவியா அவரது முட்டை கண்ணை உருட்டி உருட்டி நம்மை பயத்தில் ஆழ்த்திவிடுகிறார். காதலனை திருமணம் செய்ய முடியாமல் இறந்துபோன சோகத்தையும், வேற யாருக்கும் இங்கு திருமணம் நடக்ககூடாது என்கிற கோபத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். சூசா குமாரும் அவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
படத்திற்கு பலம் சேர்க்கும் விதமாக பல நட்சத்திரங்கள் அவரவர் பங்கிற்கு முழு திறமையையும் வெளிப்படுத்தி நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். குறிப்பாக லிவிங்ஸ்டன், நிரோஷா மற்றும் எம்.எஸ்.பாஸ்கரும் ரசிக்க வைக்கிறார்கள்.
இசை தாஜ்நூர், பாடலுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லாத இந்த படத்தில் தன்னால் எந்த அளவுக்கு பின்னணி இசையில் பங்கெடுக்க முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார். வாழ்த்துகள்.
ஒளிப்பதிவாளர் கே.எஸ்.செல்வராஜ் இந்த மனுஷனை என்னன்னு சொல்றது அது கேமிராவா இல்ல கையில் இருக்குற குச்சியான்னு தெரியல் இந்த சுத்து சுத்துறாரு. படப்பிடிப்பின் பாதி நேரம் இவரை தரையில் படுக்க வைத்தே காட்சிகளை படமாக்கியிருப்பார்கள் போல.
இயக்குநர் புகழ்மணிக்கும் 13 என்கிற எண்ணுக்கும் அப்படி என்ன ராசின்னு தெரியல, 13 என்று பெயர் வைத்த முதல் படமும் வெற்றி இரண்டாவது படமான வெள்ளிக்கிழமை 13ம் தேதி படமும் அவருடைய வெற்றி லிஸ்டில் இணையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.