மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு திரைக்கு வந்திருக்கும் படம் தான் இந்த வென்று வருவான்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் பார்வையற்ற அம்மாவுடன் வசிக்கும் ஹீரோ வீரபாரதிக்கு தூக்குத்தண்டனை கிடைக்கிறது. எட்டு கொலைகளை செய்த வழக்கில் தான் அவருக்கு அந்த தூக்குத் தண்டனை.
ஊரே அவன் தான் அந்த எட்டு கொலைகளையும் செய்தான் என்று ஒருமித்த குரலில் சொல்ல, அவனது அம்மா மட்டும் அய்யா எம்புள்ள ரொம்ப நல்லவன்யா என்கிறாள். கூடவே காதலியும்…
எட்டு கொலைகளுக்கும் அவனுக்கும் சம்பந்தம் உண்டா? என்கிற உண்மையை இந்த உலகுக்குச் சொல்ல ஒரு பத்திரிகை நிருபர் அவருடைய கொலை வழக்கின் பின்னணியை முழுமையாக எழுத செல்கிறார்.
அப்போது அந்தக் கொலைக்கான பின்னணியில் அதிர்ச்சியான விஷயங்கள் கிடைக்கிறது. அது என்ன? தூக்கு தண்டனையிலிருந்து ஹீரோ தப்பித்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
ஒரே ஒரு கிராமத்துக்குள் நடக்கிற கதையை அந்த மண்ணில் இயல்பு மாறாமல் முடிந்த அளவுக்கு ரசிக்கும்படி இயக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் கே.விஜேந்திரன்.
ஹீரோ வீரபாரதியின் உடல்வாகு ராஜ்கிரண் அளவுக்கு இல்லை என்றாலும் நடிப்பில் அப்படியே என் ராசாவின் மனசிலே ராஜ்கிரணை நினைவுப்படுத்துகிறார்.
ஊரில் நடக்கிற அக்கிரமங்களையும், அநியாயங்களையும் தட்டிக் கேட்பதில் ஆரம்பித்து இந்த ஊரே தன்னை ஒரு கொலைகாரன் என்று சொல்லும் போது மனசு வலிக்க மக்களை பார்க்கிற பார்வையாகட்டும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்.
நாயகி சமீராவுக்கு சொல்லிக்கொள்ளும்படி படத்தில் ஸ்கோப் இல்லை என்றாலும் பாவாடை தாவணியில் அச்சு அசல் கிராமத்து பெண்ணாக ஆரம்பக் காட்சியிலேயே பசுமாட்டின் மடியில் பால் கறக்கும் அழகோடு எண்ட்ரி கொடுக்கிறார்.
இப்படி ஒரு கிராமத்து நாயகியை தமிழ்ப்படங்களில் பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது.
பார்வை தெரியாத அம்மாவாக நெகிழ வைக்கும் காட்சிகளில் நடித்திருக்கிறார் எலிசபெத். குறிப்பாக கிளைமாக்ஸில் அவர் பாடும் பாடல் வரிகளின் அர்த்தம் பொதிந்த பாடலாக மட்டுமில்லாமல் காட்சியோடு ஒன்றிப்போகவும் வைத்து விடுகிறது.
வையாபுரி, கிரேன் மனோகர், நெல்லை சிவா என காமெடிக்கு சில நடிகர்களை இறக்கி விட்டிருந்தாலும் சிரிப்பு தான் சுத்தமாக வந்தபாடில்லை. அந்த ஏரியாவில் இயக்குநர் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஜெயச்சந்திரனின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை அப்படியே திரையில் கொண்டு வர, முரளி கிருஷ்ணனின் இசையில் எல்லாப் பாடல்களின் வரிகளையும் இரைச்சல் சத்தம் இல்லாமல் ரசிக்க முடிகிறது.
அம்மா – மகன் பாசத்தை இன்னொரு கோணத்தில் அழகிய கிராமத்துப் பின்னணியில் பட்ஜெட்டுக்கேற்ற வகையில் ரசிக்கும் படி இயக்கித் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கே. விஜேந்திரன்.
கோடிகளில் எடுக்கப்படும் படங்களே பல நேரங்களில் ரசிக்க விடாமல் கடுப்பைக் கிளப்ப இது போன்ற பட்ஜெட் படங்கள் திரைக்கதையாக ரசிக்க வைப்பதில் நம்மை கட்டிப்போட்டு விடுகின்றன.