
பரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை விஜயா வாஹினி புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. ஸ்ரீக்ரீன் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றி இருக்கிறது. இன்று (அக்டோபர் 4) முதல் சென்னையில் பாடல் ஒன்றை படமாக்கி வருகிறது படக்குழு.
‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விஜய். இப்படத்தை அட்லீ இயக்கவிருக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தொழில்நுட்ப கலைஞர்களுடன் முறையாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகும் 62-வது படத்தை செல்வராகவன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், விஜய் தரப்பு இதனை மறுத்து வந்தது.
இக்கூட்டணி குறித்து விசாரித்த போது, “விநாயகர் சதுர்த்தி அன்று அன்னை இல்லத்தில் விஜய், செல்வராகவன் இருவரும் சந்தித்து கதை குறித்து விவாதித்தது உண்மை தான்.
ஆனால், இரண்டாம் பாதி கதையமைப்பைக் கொஞ்சம் மாற்றச் சொல்லியிருக்கிறார் விஜய். அனைத்து முடிவானவுடன் முறையாக அறிவிப்பார்கள். விஜய் படத்துக்கு முன்பாக சந்தானம் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் செல்வராகவன்.
விஜய் – செல்வராகவன் இணையும் படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது” என்று தெரிவித்தார்கள்.