‘துப்பறிவாளன்’ படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் விஷால். சமந்தா நாயகியாக நடித்துவரும் இப்படத்துக்கு ‘இரும்புத்திரை’ என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
யுவன் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விஷால் நாயகனாக நடித்து, தயாரித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் வில்லனாக ஆர்யாவை ஒப்பந்தம் செய்திருக்கிறது படக்குழு. இக்கதையைக் கேட்டவுடன் இதற்கு ஆர்யா சரியாக இருப்பார் என விஷாலே பேசி ஒப்பந்தம் செய்திருக்கிறார். தமிழில் ஆர்யா வில்லனாக நடிக்கும் முதல் படமாக ‘இரும்புத்திரை’ அமைந்திருக்கிறது.
‘கடம்பன்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாங்காக்கில் விரைவில் துவங்க இருக்கிறது. அதனை முடித்துவிட்டு, ‘இரும்புத்திரை’யில் கவனம் செலுத்தவிருக்கிறார் ஆர்யா.