
வா வாத்தியார் – எதிர்பார்ப்பை ஏமாற்றிய நலன் குமாரசாமியின் வீழ்ச்சி
‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ என இரண்டு கல்ட் படங்களை கொடுத்த நலன் குமாரசாமி, பல ஆண்டுகள் கழித்து திரும்பியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’. ஏகப்பட்ட தடங்கல்கள், ரிலீஸ் தள்ளிப்போன கதைகள், பெரிய நட்சத்திரப் பட்டாளம் – எல்லாவற்றையும் வைத்து பார்க்கும்போது இந்த படம் ஒரு ஸ்ட்ராங்க் கம்பேக் ஆக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே இருந்தது. ஆனால் திரையில் வந்த பிறகு அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் சுக்கு நூறாக்கி விட்டது ‘வா வாத்தியார்’.
எம்ஜிஆர் பக்தி, அரசியல் ஃபேண்டஸி, சமூக அநீதி, இரட்டை வேடம் என எல்லாவற்றையும் ஒரு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்த மாதிரியான குழப்பமான திரைக்கதை. ஒரு தெளிவான ஜானர் கூட இல்லை.
எம்ஜிஆரின் அவதாரமாக பேரனை வளர்க்கும் தாத்தா, சூழ்நிலையால் திருந்தும் ஹீரோ, அநீதிக்கு எதிராக போராடும் வாத்தியார் – இவை எல்லாம் காகிதத்தில் நன்றாக கேட்கலாம். ஆனால் திரையில் வந்தபோது எந்த எமோஷனும் கனெக்ட் ஆகவில்லை.
கார்த்தி – ஒரே ஆறுதல், அதுவும் முழுமையல்ல படத்தின் ஒரே பெரிய பலம் கார்த்தியின் உழைப்பு.
ராமேஸ்வரம், ராமச்சந்திரன் என இரண்டு கேரக்டர்களையும் அவர் மனதார முயற்சி செய்திருக்கிறார். ஆனால் கேரக்டர் எழுத்து பலவீனமாக இருப்பதால் அந்த உழைப்பு முழுமையாக வெளிப்படவில்லை. எம்ஜிஆராக மாறும் போது வரும் செயற்கைத்தனம், ஒட்டாத மேனரிஸங்கள் எல்லாம் அந்த பகுதியை காமெடி கலந்த பரோடி போல மாற்றி விடுகிறது. எம்ஜிஆர் என்ற பெயரை வைத்து ரசிகர்களின் நாஸ்டால்ஜியாவை தூண்டலாம் என்று நினைத்தது பெரிய தவறு.
நாயகி – வெறும் அலங்காரம்
க்ரித்தி ஷெட்டிக்கு இது முதல் தமிழ் படம். ஆனால் கேரக்டர் எழுதப்பட்ட விதம் அவரை ஒரு பாடல் காட்சிப் பொம்மையாக மட்டுமே மாற்றியுள்ளது. நடிக்கவும் இடமில்லை, கதையிலும் தாக்கம் இல்லை. “ஹீரோயின் இருக்கிறார்” என்று சொல்லுவதற்காக வைத்த மாதிரியான பாத்திரம்.
சத்யராஜ் – வீணடிக்கப்பட்ட வில்லன்
படத்தின் வில்லன் சத்யராஜ். ஒருகாலத்தில் பயமுறுத்தும் வில்லனாக, சக்திவாய்ந்த நடிகராக இருந்தவர். இங்கே அவருக்கு கொடுத்திருக்கும் கேரக்டர் முழுக்க கேலிக்கூத்தாக மாறியுள்ளது. மிரட்டல் இல்லை, கம்பீரம் இல்லை, மேக்கப்பும் காஸ்டியூமும் பார்த்தால் கருணைதான் வருகிறது. “யானை பசிக்கு சோளப்பொறி” என்ற பழமொழியை உண்மையிலேயே நிரூபிக்கும் வகையில் அவரை வீணடித்திருக்கிறார்கள்.
ராஜ்கிரண், ஆனந்த் ராஜ் – ஓவராக இழுத்த எம்ஜிஆர் பாசம்
ராஜ்கிரணின் எம்ஜிஆர் பக்தி காட்சிகள் ஆரம்பத்தில் கொஞ்சம் நெகிழ்ச்சி தரினாலும், அதை மீண்டும் மீண்டும் திணித்ததால் அலுப்பு வந்துவிடுகிறது. ஆனந்த் ராஜின் கேரக்டர் எம்ஜிஆர் ரசிகனின் வெறித்தனத்தை காட்ட முயன்றாலும், அது நாடகத்தனமாகத் தோன்றுகிறது.
மொத்தத்தில்…
‘வா வாத்தியார்’ என்பது ஒரு சீரியஸ் அரசியல்-சமூக படமா, ஒரு ஃபேண்டஸி படமா, ஒரு எம்ஜிஆர் ட்ரிப்யூட்டா, இல்லையா ஒரு மாஸ் கமர்ஷியல் படமா – இதிலேயே இயக்குநருக்கே தெளிவு இல்லை.
அதனால் தான் திரைக்கதையும் திசை தெரியாமல் அலைகிறது.
நலன் குமாரசாமி மீது இருந்த நம்பிக்கை இந்த படத்தில் பெரும் சோதனைக்கு உள்ளாகியுள்ளது. ஸ்டைல், நையாண்டி, கூர்மையான எழுத்து – ‘சூது கவ்வும்’ல பார்த்த அந்த இயக்குநரின் சாயல் எங்குமே இல்லை. பெரிய நடிகர்கள், பெரிய இசையமைப்பாளர், பெரிய தயாரிப்பு – எல்லாம் இருந்தும் உள்ளடக்கம் சோர்வடைந்தால் படம் எப்படிச் சரிந்துவிடும் என்பதற்கு ‘வா வாத்தியார்’ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
