Monday, March 2
Shadow

தாய் கிழவி’ – திரை விமர்சனம் Rank 4/5

‘தாய் கிழவி’ – பெண்களின் தன்னம்பிக்கையை உரக்கச் சொல்கிற சமூகப் பொறுப்புள்ள பொழுதுபோக்கு

வணிக அம்சங்களுடன் சமூகச் செய்தியையும் இணைத்து பேசும் படைப்புகள் தமிழ்சினிமாவில் அரிதாகவே உருவாகின்றன. அந்த வகையில், பெண்களின் கல்வி, பொருளாதார விழிப்புணர்வு, தனித்திறன், தன்னம்பிக்கை ஆகியவற்றின் அவசியத்தை நேர்த்தியாக வலியுறுத்தும் படமாக ‘தாய் கிழவி’ திகழ்கிறது. இது வெறும் பொழுதுபோக்கு திரைப்படமல்ல; காலத்தின் தேவையை உணர்த்தும் கருத்துப் பதிவு.

கதை கிராமத்து பின்னணியில் நகர்கிறது. வட்டிக்கு பணம் கொடுத்து வாழ்வாதாரம் உருவாக்கிய ராதிகா (பவுனுத்தாய்) தனது உழைப்பால் சொத்து சேர்த்துக் குடும்பத்தை முன்னேற்றியவர். ஆனால் சொத்து பிரச்சினையால் பிள்ளைகளிடமிருந்து பிரிந்த நிலையில் வாழ்கிறார். திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக படுக்கையிலே ஆகிவிடும் அவர், இதுவரை சேர்த்துவைத்த சொத்தைக் குறித்து மர்மம் நிலவுகிறது. அந்த சொத்தை கைப்பற்ற வேண்டும் என்ற பேராசையில் மகன்கள் தீவிரம் காட்டும் சூழல் உருவாகிறது. இந்த நிலைமையில் குடும்ப உறவுகள், பேராசை, பாசம், நகைச்சுவை, உணர்ச்சி ஆகியவை கலந்த காட்சிகள் மூலம் கதை முன்னேறுகிறது.

ராதிகாவாக நடித்திருக்கும் நடிகையின் மாற்றமான தோற்றம், மேக்கப், உடல் மொழி அனைத்தும் கவனிக்கத்தக்கவை. படத்தின் பெரும்பகுதியில் படுக்கையிலேயே தோன்றினாலும், கதை முழுவதையும் தனது கதாபாத்திரம் சுற்றி நகர்த்தும் வகையில் ஆற்றல்மிக்க நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கிராமத்து அதிகாரத்தன்மையும் உள்ளார்ந்த பலவீனங்களும் கலந்த அந்தப் பாத்திரம் நினைவில் நிற்கிறது.

மகன்களாக நடித்துள்ள சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் ஆகியோர் தனித்தனி குணாதிசயங்களுடன் இயல்பான நடிப்பை வழங்குகின்றனர். குறிப்பாக சிங்கம் புலியின் காமெடி கலந்த வெளிப்பாடு ரசிக்க வைக்கிறது. மருமகனாக வரும் முத்துகுமார், ‘ரெண்டு இட்லி’ என்கிற தனிச்சுவை கொண்ட கதாபாத்திரத்தில் நகைச்சுவை பங்களிப்பை சிறப்பாகச் செய்துள்ளார். மகளாக நடித்துள்ள ரேச்சல் ரெபேகா, தாயை நினைத்து உருகும் காட்சிகளில் உணர்ச்சி ஆழத்தை வெளிப்படுத்துகிறார். முனீஸ்காந்தின் பாத்திரமும் கதை ஓட்டத்தில் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. துணை கதாபாத்திரங்கள் அனைத்தும் இயல்பான நடிப்பால் படத்திற்கு நம்பகத்தன்மையை அளிக்கின்றன.

விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு கிராமத்து சூழலின் இயற்கை அழகை நுட்பமாகப் பதிவு செய்கிறது. செல்லதுரை ஆலங்குடியின் மேக்கப் பணியும் கதாபாத்திரங்களின் நம்பகத்தன்மையை உயர்த்துகிறது. நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை மற்றும் பின்னணி இசை, உணர்ச்சி தருணங்களை வலுப்படுத்தி படத்துக்கு கூடுதல் உயிரூட்டுகிறது.

எழுதி இயக்கிய சிவக்குமார் முருகேசன், வழக்கமான குடும்பக் கதையை எடுத்துக்கொண்டாலும் திரைக்கதையில் சுவாரஸ்யமான திருப்பங்களையும் நகைச்சுவை கலந்த அணுகுமுறையையும் இணைத்து சலிப்பில்லாமல் நகர்த்தியுள்ளார். சில இடங்களில் சிறிய தொய்வுகள் இருந்தாலும், பெண்களுக்கு கல்வியும் சேமிப்புத் திட்டங்களும் எவ்வளவு அவசியம் என்பதை பிரச்சாரத் தனமின்றி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், ‘தாய் கிழவி’ – பெண்களின் தன்னம்பிக்கைக்கும் சமூக விழிப்புணர்வுக்கும் குரல் கொடுக்கும், கருத்தும் கமெர்ஷியலும் இணைந்த ஒரு அர்த்தமுள்ள திரைப்படம். இன்றைய கால பெண்களுக்கு ஊக்கமளிக்கும் படைப்பாக இது நினைவில் நிற்கும்.