அஞ்சாமை திரைப்பட விமர்சனம்!
சுப்புராமன் இயக்கத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அஞ்சாமை. இப்படத்தின் கதைப்படி, திண்டுக்கலில் விவசாயியான விதார்த் தனது மனைவி வாணி போஜன் மற்றும் இரண்டு குழந்தைகள் உடன் வாழ்ந்து வருகிறார். அவரது மூத்த மகன் பள்ளியில் படிக்கும் போதே மருத்துவர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்து வருகிறார். அந்த நேரத்தில் மத்திய அரசு மருத்துவ கல்வியில் சேர நீட் என்ற பொது நுழைவுத் தேர்வை கொண்டு வருகிறது. இதன்பின் விதார்த்தின் மருத்துவ கனவு நிறைவேறியதா? நீட் தேர்வால் அவர்கள் சந்தித்த பிரச்சினைகள் என்ன என்பதே இப்படம்.
மத்திய அரசு நீட் தேர்வை கொண்டுவந்த போது தமிழகத்தில் மருத்துவக் கனவுடன் படித்து வந்த மாணவர்கள் எத்தனையோ பேர் அதில் வெற்றி பெற முடியாமல் தவித்தனர். சிலர் தற்கொலை செய்துகொண்டனர். மாணவர்களின் பெற்றொர்கள் சிலரும் உயிரிழந்தனர். அந்த வலியை படமாக காட்சியமைத்துள்ளார் இயக்குனர்.
விதார்த் ஏழை விவசாயியாக ஒரு அப்பாவாக அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார். மகனின் ஆசையை நிறைவேற்ற கடுமையாக உழைக்கும் நபராக நடித்து அனுதாபம் வர வைக்கிறார். நீட் தேர்வில் எப்படியாவது வெற்றிபெற்றாக வேண்டும் என்ற மாணவர்களின் மன் அழுத்தத்தை சிறப்பான காட்சிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இடைவேளை காட்சி பார்ப்போர் கண்களில் நிச்சயம் கண்ணீர் வரவழைக்கும். வாணி போஜன் அம்மாவாக நன்றாக நடித்துள்ளார். போலீசாக வரும் ரகுமான் மாணவனுக்காக வேலையை உதறிவிட்டு வக்கீலாக மாறுவது நம்பும்படியாக இல்லை என்றாலும் நீதிமன்றத்தில் அவர் கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றும் நியாமானவை. மகனாக நடித்திருக்கும் க்ரித்திக் மோகனின் நடிப்பும் அபாரம்.
நீட் தேர்வு தேவையா இல்லையா என்றெல்லாம் அதற்குள் போகாமல் நீட் தேர்வை செயல்படுத்தும் போது செய்யப்பட வேண்டிய வழிமுறைகளை சரியாக செய்ய வேண்டும் என்று படம் சொல்கிறது. தமிழகத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவருக்கு ஜெய்ப்பூரில் மையம் ஒதுக்கியதால் அந்த மாணவனும் அவனது அப்பாவும் எத்தனை துயரங்களை அனுபவிக்கின்றனர் என்ற காட்சியமைப்பு நம்மை கலங்க வைக்கிறது. இதுபோலத்தானே உண்மையில் நடந்திருக்கும் என்று நினைக்கும் போது வலிக்கிறது. இரண்டாம் பாதி முழுக்க நீதிமன்றத்துக்குள் நடப்பதால் சற்று அயற்சி ஏற்படுகிறது.
மத்திய மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகள் மீது தொடுக்கப்பட்ட அம்பாக இந்த படத்தை நினைக்க தோன்றுகிறது. படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ இதுபோன்ற விழிப்புணர்வு படங்கள் தொடர்ந்து வர வேண்டும். மொத்தத்தில் அஞ்சாமை – உண்மை. ரேட்டிங் 3.5/5.