Sunday, May 19
Shadow

அயோத்தி திரை விமர்சனம் Rank 4/5

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்துள்ளன. நிறைய கதைக்களத்துடன் நமக்கு கதை சொல்லியுள்ளன. ஆனால் இப்படி‌ஒரு கதைக்களம் இதுவரை சொல்லப்படவில்லை என்றே சொல்லலாம். அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரும் ஒரு வட இந்திய குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படம். அதில் மனிதநேயம், மதநல்லிணக்கத்தை சொல்லி ஆச்சரியப்படுத்தியுள்ளார் இயக்குனர் மந்திர மூர்த்தி.

அயோத்தியில் வசித்து வருகிறது யஷ்பால் ஷர்மாவின் குடும்பம். மனைவி, மகள் , மகனுடன் வாழ்ந்து வரும் யாஷ்பால் கோபக்காரன், திமிர் பிடித்தவன், இரக்கமற்றவன். ஒருநாள் குடும்பத்துடன் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கு சாமி கும்பிட‌ வருகிறார்கள். ரயிலில் மதுரை வந்து அங்கிருந்து ராமேஸ்வரம் வாடகை காரில் செல்கின்றனர். செல்லும்வழியில் யாஷ்பால் செய்யும் பிரச்சினைகளில் கார் விபத்துக்கள்ளாகிறது. இந்த விபத்தில் நாயகியின் அம்மா உயிரிழக்கிறார். உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல வேண்டும் ஆனால் பிரேத பரிசோதனை செய்ய யாஷ்பால் மறுக்கிறார். கார் டிரைவரின் நண்பரான சசிகுமார் நாயகியின் குடும்பத்திற்கு உதவ முன் வருகிறார். இறுதியில் பிரேத பரிசோதனை நடந்ததா? உடல் அயோத்தி கொண்டு செல்லப்பட்டதா? என்பதே இப்படத்தின் கதை.

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதைக்களத்தில் ஒரு படம் வந்துள்ளது. தான் நடிக்கும் படத்தில் எல்லாம் நட்பு, காதல் என ஒரே ட்ராக்கில் சுத்தி வரும் சசிகுமாருக்கு யாருமே எதிர்பாராத வேடம் மற்றும் படம். இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கே முதலில் அவருக்கு வாழ்த்துகள். நாயகி ப்ரியா அஸ்ராணி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அம்மாவிடம் பாசமாக உருகுவதாகட்டும் தந்தையிடம் வெடித்து தனது கோபத்தை வெளிப்படுத்துவதாகட்டும் அசத்தியுள்ளார். சசிகுமாரின் நண்பராக புகழ். காமெடி செய்யாமல் குணச்சித்திர வேடத்தில் நன்றாக நடித்துள்ளார். தீபாவளி தினமான அன்று காசிக்கு செல்ல ஒரே ஒரு விமானம் தான் இருக்கிறது. எல்லா அரசு அலுவலகங்களும் விடுமுறை. இதனால் இறந்த உடலை விமானத்தில் கொண்டு செல்ல நிறைய நடைமுறை சிக்கல் இருப்பதால் சசிகுமார் தனது நண்பர்களின் மூலம் பெரும் முயற்சி எடுக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சியில் சசிகுமாரின் ஒற்றை வார்த்தை படத்தின்‌ மதிப்பை வேறு தளத்திற்கு கொண்டு சென்று விட்டது. மனிதநேயம் மற்றும் மதநல்லிணக்கத்தை இதைவிட வேறு எப்படியும் சொல்ல முடியாது. ஆனாலும் சில சினிமாத்தனமான காட்சிகள் இருக்கின்றன. ஆனாலும் அது பெரிதாக தெரியவில்லை. போலீஸ் ஸ்டேஷனில் வரும் பாட்டு தேவையில்லாதது. இயக்குனர் மந்திர மூர்த்தி மிகப் பெரிய இயக்குனராக நிச்சயம் வருவார் . என்.ஆர்.ரகுநந்தனின் இசை சில இடங்களில் பரவாயில்லை. நல்ல படம் ஆனால் என்ன தவறான நேரத்தில் வெளியாகியுள்ளது தான் வருத்தம். தவறாமல் கட்டாயம் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டிய படம் .