
‘பாய்’ திரைப்பட விமர்சனம்
ஆதவா ஈஸ்வரா, நிகிஷா , தீரஜ் கெர்,ஓபிலி என். கிருஷ்ணா,சீமான் அப்பாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார்.
இப்படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.படத்தொகுப்பு செய்துள்ளார் இத்ரிஸ்.
கே.ஆர்.எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
‘தீவிரவாதத்துக்கு எந்த மதமும் பொறுப்பல்ல ‘என்ற வரிகளுடன்தான் படம் தொடங்குகிறது.
படம் தொடங்கி முதல் காட்சியிலேயே ஆகாஷ்வாணி செய்திகளில் குண்டு வெடிப்பு பற்றிய செய்தி இடம் பெறுகிறது.
நாட்டின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்துவது, மக்களைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி அதில் சுகம் காண்பது, வன்முறையில் சாகச உணர்வை அடைவது,பணத்துக்காக இந்தச் செயல்களைச் செய்வது என்ற நோக்கில் நாடெங்கும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன.இதன் பின்னணியில் இருப்பது ஒரு நாசக்கார கும்பல்.பணத்திற்கு எதையும் செய்யும் பலவீனர்களை ஸ்லீப்பர் செல்லாக பயன்படுத்தி இந்தக் குற்ற செயல்களைச் செய்கிறார்கள்.இவர்களுக்கு எந்த மதமும் பொருட்டல்ல; மனித உயிர்கள் தான் குறி.
அதன்படி டெல்லி, மும்பை, கல்கத்தா, ஹைதராபாத் போன்ற இடங்களில் இந்த வேலைகளில் ஈடுபடுகிறார்கள். சில இடங்களில் அவர்களின் சதித் திட்டம் முறியடிக்கப்படுகிறது. அவர்களது அடுத்த இலக்காகத் தமிழ்நாடு இருக்கிறது.குறிப்பாகப் பெரிய தொழில் நகரமாக இருக்கும் கோயம்புத்தூரைக் குறி வைக்கிறார்கள்.
இந்த சதிச் செயல்களின் மூளை எங்கே இருக்கிறது? யார் இயக்குவது என்று செயல்படுத்துபவர்களுக்குத் தெரியாது .மேலிடத்துக் கட்டளைப்படி அவர்கள் இயங்குவார்கள்.அவ்வளவுதான்.இந்த வலைப் பின்னலின் நுனியைக் கண்டுபிடிப்பது காவல்துறைக்குச் சிரமமாக இருக்கிறது.
மர்மமான இந்த ரகசியத் திட்டங்களின் மூளையாக செயல்படுகிறார் நாயகன் ஆதவா ஈஸ்வரா. அவர் கோவையில் வசிக்கிறார்.
அவருக்கு அவசரமாக மொபைல் போனில் குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.அதன்படி அவர் செயல்பட வேண்டும்.
அவரது மனைவி ஊரில் இல்லை. எனவே சற்றுச் சுதந்திரமாக இயங்குகிறார்.திடீரென்று ஊருக்குச் சென்ற அவரது மனைவி வீட்டுக்கு வருவதாகப் போனில் கூறியதும் பதற்றமாகிறார்.தனது செயல்பாடுகள் மனைவிக்குத் தெரியக்கூடாது என்று டிபார்ட்மெண்டல் ஸ்டோரிலிருந்து வேகமாக வீட்டுக்கு ஓடி வருகிறார்.
வீடு சென்று பார்த்தவருக்கு ஓர் அதிர்ச்சி. வீட்டுக்குள் அவரது படுக்கை அறையில் ஆணும், பெண்ணும் என ஒரு ஜோடி உல்லாசமாக இருக்கிறார்கள்.இந்த உலகத்தில் யாருமே இல்லை என்கிற அளவிற்கு அவர்கள் அவ்வளவு சுதந்திரமாக இருக்கிறார்கள்.அதைப் பார்த்து ஆதவா ஈஸ்வரா அதிர்ச்சியும் கோபமும் அடைகிறார்.அவளோ “என்னை ஒன்றும் செய்யாதே” என்கிறாள். துப்பாக்கியை எடுக்கிறார் ஆதவா ஈஸ்வரா.அவர்கள் யார்? அவர்கள் எப்படி அந்த வீட்டுக்குள் வந்தார்கள்? அவரது மனைவி எங்கே? பத்து நிமிடங்களில் வருவதாகக் கூறியவர் ஏன் வரவில்லை? ஸ்லீப்பர் செல்லின் நாசக்கார செயல்களின் அடுத்த திட்டங்கள் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதிலைச் சொல்வது தான் 121 நிமிடங்கள் கொண்ட ‘பாய்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக விக்ரம் பாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதவா ஈஸ்வரா,ஆறடி உயரம் ஆஜானு பாகுவான தோற்றம் என்று கம்பீரமாக வருகிறார்.அவரது கட்டுமஸ்தான உடல் தோற்றம் ஒரு ஆக்சன் கதாநாயகனுக்குரியதாகப் பொருந்தியுள்ளது.அவர் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாலும் எப்போதும் யார் மீதும் எரிச்சல் பட்டு கெட்ட வார்த்தைகள் பேசியபடி பலகாட்சிகளில் ஒரே மாதிரியான முகபாவனைகளையே வெளிப்படுத்துகிறார். அவரை மேலும் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.
வில்லனாக நடித்திருக்கும் வயதான நடிகர் தீரஜ் கெர், மெலிந்த அந்தத் தோற்றத்திலும் வில்லத்தனம் காட்ட முடியும் என்று நிரூபித்துள்ளார்.துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டாலும் அவர் அனாயாசமாகப் பேசும் வசனங்கள் அவரது பாத்திரத்தின் நிழல் முகத்தை வெளிப்படுத்துகிறது.
நாயகியின் மனைவிக்கும் பெரிதாகக் காட்சிகள் இல்லை.அறையில் உல்லாசமாக இருக்கும் ஜோடிக்குப் பெரிதாக நடிப்பு வாய்ப்பில்லை. பல காட்சிகளில் பிணமாகவே கிடக்கிறார்கள்.படம் முழுக்க ஆதவா ஈஸ்வராவே ஆக்கிரமித்துக் கொண்டு தெரிகிறார்.
இந்த குண்டுவெடிப்பு, வன்முறை சார்ந்த கதையில் அனாதை இல்லச் சிறுவர்கள் பற்றியும் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டு அனாதையான குழந்தைகள் பற்றியும் காட்டுகிறார்கள்.பெற்றோரை இழந்த ஒரு பெண் குழந்தை “இந்து முஸ்லிம் கிறிஸ்டியன் என்றால் என்ன ?’என்று கேட்பது கலங்க வைக்கும். வீட்டுக்குள்ளேயே பாதிப்படம் நகர்ந்தாலும் வெளிப்புறக் காட்சிகளில் பாதிப் படம் ஓடுகிறது.
இசையமைப்பாளர் ஜித்தின் கே.ரோஷனின் பின்னணி இசை படத்திற்கு. டைட்டில் போட்டதிலிருந்து தன் பணியைத் தொடங்கித் தொடர்ந்து சிறப்பாகப் பங்களித்துள்ளது.
ஒரே அறையில் பல காட்சிகள்,வெளிப்புறங்களில் பல துரத்தல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என்று சம்பவங்கள் நிகழும் இடங்களைச் சரியாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி
எழுதி இயக்கியிருக்கும் கமலநாதன் புவன்குமார், ஸ்லீப்பர் செல்கள் எப்படி உருவாகிறார்கள் எப்படிப்பட்ட பலவீனமானவர்களை அவர்கள் வலையில் விழச் செய்கிறார்கள் என்பவற்றைப் பற்றியெல்லாம் கூறியுள்ளார்.’கம்யூனிட்டியை விட ஹியூமானிட்டி தான் பெரிது’ போன்ற பளிச் வசனங்களும் உண்டு.கடவுளுக்குக் கீழே மனிதர்கள் மட்டும்தான். மதங்கள் வேறுபாடுகள் இல்லை என்ற கருத்து சொல்லப்பட்டுள்ளது.
ஒரே அறையில் முழுப் படத்தை எடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். எனவே ஒரே பின்புலக் காட்சிகள் சற்றே சலிப்பூட்டுகின்றன. காலக் கடிகார யுக்தி போல் திரும்பத் திரும்ப வரும் காட்சிகள் எது கற்பனை, எது நிகழ்காலம் என்பதைப் புரியவிடாமல் குழப்புகின்றன.
ஸ்லீப்பர் செல்கள் மூலம் பழங்கள் ,வாட்டர் பாட்டில்கள் போன்ற எளிமையான பொருள்களுக்குள் குண்டுகளை ஒளியவைத்து சதிசெய்வது பரபர காட்சிகள்.
ஆதவா ஈஸ்வராவின் பாத்திரம் நேர்நிலைப் பாத்திரமா எதிர்மறைப் பாத்திரமா என்று புரிந்து கொள்ள விடாமல் கதையில் இயக்குநர் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் ரசிக்க வைக்கும் சுவாரஸ்யம்.
வன்முறையைப் பற்றிப் பேசும் படம் என்றாலும் குரூரமான காட்சிகளைத் தவிர்த்துள்ளது ஓர் ஆறுதல்.
ஒரு பரபரப்பான ஆக்ஷன் திரில்லரை உருவாக்க நினைத்து , சில பலவீனங்களால் திணறியுள்ளார் இயக்குநர்.சில காட்சிகளில் தெளிவை உண்டாக்கி இருந்தால் படத்தின் உயரம் இன்னும் கூடி இருக்கும்.
மொத்தத்தில், இந்த ‘பாய்’ ஆக்ஷன் திரில்லர் ரசிகர்களுக்குப் பிடிக்கும்.
