Sunday, May 19
Shadow

பைரி – திரைவிமர்சனம் (நல்லதொரு ஆரம்பம் ) Rank 4/5

புதுமுகம் சையத் மஜித், மேக்னா எலன், விஜி சேகர், ஜான் கிளாடி, சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், ஆனந்த் குமார், ராஜன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜான் கிளாடி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “பைரி”..
ஏ வி வசந்த குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அருண் ராஜ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை ஆர் எஸ் சதீஷ் குமார் கவனித்திருக்கிறார்.தயாரித்திருக்கிறார் துரை ராஜ்.

கதையை பார்ப்போம் …

நாகர்கோவில் பகுதியை சுற்றி படத்தின் கதை நகர்கிறது. பேச்சு வழக்கு மொழி, உடல் மொழி என அனைத்தும் அங்குள்ள வட்டாரத்திற்கு ஏற்ப படமாக்கப்பட்டுள்ளது.

படம் ஆரம்பத்திலேயே கதைக்குள் நகர்ந்து விடுகிறது. படத்தின் துவக்கத்தில் வில்லுப்பாட்டு ஒன்று பாடப்படுகிறது. அந்த பாடலுக்குள்ளே படத்தின் கதையும் நகர் படம் ஆரம்பமாகிறது.

புறா ரேஸ் விடுவது தான் அப்பகுதி மக்களுக்கு ஒரு வீர விளையாட்டாக இருந்து வருகிறது. மதுரைக்கு ஒரு ஜல்லிக்கட்டு, விருதுநகருக்கு ஒரு ரேக்ளா ரேஸ் என்பது போல் நாகர்கோவிலுக்கு ஒரு புறா ரேஸ் என்று வீர விளையாட்டாக அதை பார்க்கின்றனர்.

புறா வளர்ப்பை தங்களது உயிரென மதிக்கின்றனர். ராஜலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் நாயகன் சையத் மற்றும் அவரது நண்பர்களும் புறா வளர்ப்பதை தங்களது வாழ்வாக எண்ணி வாழ்ந்து வருகின்றனர்.

நாயகன் சையத்திற்கு அம்மாவாக வருகிறார் விஜி சேகர். ஒரே மகன் என்பதால், பாசத்தை அதிகம் ஊட்டி வளர்த்து அவர் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார்.

புறா ரேஸ் விட்டு, முன்னோர்கள் வாழ்க்கையை சீரழித்துவிட்டதாகவும், தனது மகனை நன்கு படிக்க வைத்து நல்லதொரு வேலைக்கு அனுப்பி வைக்க ஆசைப்படுகிறார் விஜி சேகர்.

அதற்காக, பொறியியல் கல்லூரியில் ராஜலிங்கத்தை சேர்த்து விடுகிறார். கல்லூரி முடிக்கும் போது சில பேப்பர் தோல்வியடைந்து வருகிறார். அந்த பேப்பரை எழுதி முடிக்கும் வரை வீட்டில் புறா வளர்த்துக் கொள்ள அனுமதியை வாங்கிக் கொள்கிறார் ராஜ லிங்கம்.

தொடர்ந்து புறா வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் உடையவரான ராஜலிங்கம், இதனால் அவ்வப்போது பக்கத்து வீட்டு வாலிபர்களுடன் மோதலையும் வளர்த்துக் கொள்கிறார்.

தனது பகுதி இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், தொடர்ந்து அவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார் பண்ணையாராக வரும் ரமேஷ் ஆறுமுகம்.

ஊரில் புறா ரேஸுக்கான நாள் நெருங்குகிறது. அம்மாவின் எதிர்ப்பையும் மீறி புறா ரேஸில் கலந்து கொள்கிறார் ராஜலிங்கம். அதேசமயம், ஊரில் சில பல கொலைகளை செய்து பெரிய ரெளடியாக திரிபவர் வில்லனான சுயம்பு.

இவரும் புறா ரேஸில் கலந்து கொள்கிறார். புறா ரேஸில் ராஜலிங்கத்திற்கும் சுயம்புவிற்கும் நேரடியாகவே மோதல் ஏற்படுகிறது.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

ராஜலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சையத் மஜித், கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமாகவே பொருந்தியிருந்தார்.

ஆரம்பத்தில் இருந்த வேகம் படம் இறுதி வரை கொண்டு வந்து படம் பார்ப்பவர்களை பரபரப்பாகவே வைத்திருந்தார். ஆனால், எல்லா காட்சியிலும் அதே கோபம் இருந்ததை சற்று குறைத்திருக்கலாம்.

தாயாக நடித்திருந்த விஜி சேகர் படத்திற்கு மற்றொரு தூணாக வந்து நிற்கிறார். தன் மகன் நல்லதொரு பணியில் சேர வேண்டும், அவனுக்கான வாழ்க்கை அமைய வேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கும் ஒரு கதாபாத்திரம் தான், அளவாகவும், அப்பகுதியில் இருப்பவர் போல் மிகக் கச்சிதமாக நடித்து அசத்தியிருக்கிறார் விஜி.

ரமேஷ் பண்ணையாராக நடித்திருந்த ரமேஷ் ஆறுமுகம், கேரக்டரை நச்சென செய்து முடித்திருக்கிறார். ஊருக்கு ஒருவர் இவரைப் போல இருந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது என்று அனைவரும் உணரும் வண்ணம் பண்ணையார் கதாபாத்திரத்தை செதுக்கியிருக்கிறார் இயக்குனர்.

நாயகியாக வரும் மேக்னா எலன், தனக்கு கொடுக்கப்பட்டதை அழகாக செய்து முடித்திருக்கிறார். ராஜலிங்கத்திற்கு மாமன் மகளாக வரும் சரண்யா, அளவோடு நடித்து அக்கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். அப்பகுதி பெண்ணாகவே மாறி, உடல் மொழி, பேச்சு மொழி என இரண்டையும் அழகாக திரைக்கு படைத்திருக்கிறார் சரண்யா.

சுயம்பு என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றிய வினு லாரன்ஸூம் தனது கேரக்டரை பூர்த்தியாக செய்திருக்கிறார். நண்பனாக நடித்து அனைவரையும் அசர வைத்து விட்டார் இயக்குனர் ஜான் கிளாடி. இப்படி ஒரு நண்பன் நமக்கு இருக்க வேண்டும் என்று படம் பார்ப்பவர்களை ஏங்கும் அளவிற்கு கதாபாத்திரத்தை செதுக்கியிருக்கிறார் ஜான் கிளாடி.

படத்தின் பின்னணி இசையில் ஆரம்பத்தில் இருந்து அதே இசையை க்ளைமாக்ஸ் வரையிலும் கொண்டு சென்றது சற்று இரைச்சலை கொடுத்துவிட்டது. அதை சற்று கவனித்திருக்கலாம். வில்லுப்பாட்டு, சாமி பாட்டு இரண்டும் ரசிக்கும்படியாக இருந்தது.

தமிழ் சினிமாவிற்கு தரமான ஒரு இயக்குனர் கிடைத்திருக்கிறார் என்பதில் பெருமை கொள்ளலாம். காட்சியமைப்பு, கதைக்களம், வசனங்கள், நடிப்பு என அனைத்திலும் முத்திரை பதித்திருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவின் மெனக்கெடல் ஒவ்வொரு காட்சியிலும் காண முடிந்தது. புறா பறக்கும் எடுக்கப்பட்ட காட்சிகளாக இருக்கட்டும், ஆக்‌ஷன் காட்சிகளிலும், கதையின் வேகத்தையும் நன்கு உணர்ந்து அதை தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். அமல் அப்பாவாக நடித்திருந்த ராஜனும் பாராட்டும்படியான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருந்தார்.

ஒரு படம் அதில் நடித்த ஒட்டுமொத்த நட்சத்திரங்களுக்கும் ஒரு அடையாளமாய் மாறும்படியான ஒரு படைப்பாக வந்திருக்கிறது இந்த “பைரி”

பைரி – 2024ம் தமிழ் சினிமாவின் மிக சிறந்த ஒரு படைப்பில் ஒன்றாக இருக்கும் …