Sunday, May 19
Shadow

க்ளாஸ்மெட்ஸ் – திரைவிமர்சனம்

அங்கையர் கண்ணன், ப்ரானா, குட்டிப்புலி சரவண சக்தி, மயில்சாமி, சாம்ஸ், அபி நக்‌ஷத்ரா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் குட்டிப்புலி சரவண சக்தியின் இயக்கத்தில்  உருவாகியிருக்கும் படம் தான் க்ளாஸ் மேட்ஸ். முகவை பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் அங்கையர் கண்ணன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.ப்ரித்வி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அருண் குமார் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.எம் எஸ் செல்வம் படத்தொகுப்பு செய்திருக்கிறார். ஜெய் கலையை கவனித்திருக்கிறார்.

கதைக்குள் சென்றுவிடலாம்…

இராமநாதபுரத்தை மையப்படுத்தி கதை நகர்கிறது படத்தின் ஆரம்பத்திலேயே இராமநாதபுரத்தின் பெருமைகளை அடுத்தடுத்து அடுக்கியது படம் பார்ப்பவர்களை ஒரு விதமான பாசிடிவ் ஏரியாவிற்குள் அழைத்துச் சென்றது.

அங்கையர் கண்ணன் மற்றும் சரவண சக்தி இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் மது குடிப்பதில் தான் நெருங்கிய நண்பர்களாக திகழ்கின்றனர்.அங்கையர் கண்ணனுக்கு திருமணமாகி சில நாட்களே ஆகிறது. அழகான மனைவியுடன் பொறுப்பான கணவனாக வாழ்ந்து வந்தாலும், குடிப்பதை மட்டும் நிறுத்திக் கொள்ளவே இல்லை.

பணிக்குச் சென்று அன்பாக கவனித்துக் கொள்ளும் மனைவி, பாசம் வைத்திருக்கும் மகள் என தனக்கென ஒரு அழகான குடும்பம் இருந்தும் தினசரி குடிப்பதை மட்டும் நிறுத்திக் கொள்ளவே இல்லை சக்தி சரவணன்.தொடர்ந்து தனது குடும்பத்தில் பல இன்னல்களை இவர்கள் கொடுத்தாலும், இவர்கள் மூலமாக வந்து கொண்டே இருந்தாலும் குடிப்பழக்கத்தை மட்டும் இவர்கள் விடுவதா இல்லை.

இதனால் இவர்கள் குடும்பம் என்னவானது.? குடியை மறந்து தனது குடும்பத்தை கவனித்து வந்த மயில்சாமியை மீண்டும் குடிகாரனாக ஆக்கிவிட்டதன் பிறகு மயில்சாமியின் குடும்பம் என்னவானது.?? என்பதற்கான விடையை இரண்டாம் பாதியில் வைத்திருக்கிறார் இயக்குனர் சக்தி சரவணன்.

நாயகன் அங்கையர் கண்ணன், தனக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதை அளவோடு நடித்துக் கொடுத்திருக்கிறார். அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். குடிப்பது போன்ற காட்சியாக இருக்கட்டும், தனது மனைவி மீது அன்பை வெளிப்படுத்தும் இடமாக இருக்கட்டும், க்ளைமாக்ஸில் கதறி அழும் இடமாக இருக்கட்டும் என பல இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் அங்கையர் கண்ணன்.

நாயகனுக்கு கொடுக்கப்பட்ட அதே பங்களிப்பு சக்தி சரவணனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. தன்னால் முடிந்த நடிப்பை அதிகமாகவே கொடுத்திருக்கிறார்.

முதல் நாள் இரவு திருந்துவது போல் காண்பித்துவிட்டு அடுத்த நாள் இரவு மீண்டும் மதுப் பழக்கத்தை கையில் எடுப்பதுமாய் படம் முழுக்க நீண்டு கொண்டே வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்ன நடந்தா இந்த மது பழக்கத்தை கை விடுவிங்க சொல்லுங்கப்பா என படம் பார்ப்பவர்கள் கேட்கும் அளவிற்கு காட்சிகளை இழுத்துக் கொண்டே சென்று விட்டார்கள்

கதையில் இன்னும் சற்று சுவாரஸ்யத்தை ஏற்றியிருந்திருக்கலாம் என்று தோன்றியது. படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு பலமாக தான் வந்து நின்றது.ஒளிப்பதிவிலும் பெரிதாக எந்த குறையும் இல்லை. எடிட்டிங் இன்னும் சற்று கத்தியை போட்டிருந்திருக்கலாம்.

அபி நக்‌ஷத்ரா, சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அதை அளவாகவும் சரியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்.காமெடி, செண்டிமெண்ட் என வழக்கமான தனது நடிப்பைக் கொடுத்து அசர வைத்திருக்கிறார் நடிகர் சாம்ஸ்.

அனுபவ நடிப்பைக் கொடுத்து அசத்தியிருந்தார் நடிகர் மயில்சாமி. அங்கையர் கண்ணனுக்கு ஜோடியாக நடித்திருந்த ப்ரனா மிக அழகாக நடித்து காட்சிகளில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். தனது கணவன் மீது வைத்திருந்த பாசத்தில் கண்கலங்க வைக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

ஆங்காங்கே மட்டுமே காமெடி வேலை செய்திருக்கிறார். மேடு பள்ளமுமாய் கதை ஏறி இறங்கி சென்றாலும் செல்லும் இடம் நன்றாக இருக்குமாய், கதையின் நோக்கம் பாசிடிவாக இருப்பது படத்திற்கு பலம். க்ளைமாக்ஸ் டச்..

குடியால் குடும்பங்கள் எப்படி சீரழிகிறது என்பதை காட்டியதற்காக இயக்குனருக்கு பாராட்டுகள்.

இப்படத்தினால் இருவர் மதுப்பழக்கத்தை கைவிட்டால் அதுவே இப்படத்தின் வெற்றி.

க்ளாஸ்மெட்ஸ் – மிக்ஸிங் இன்னும் கொஞ்சம் கூட்டியிருக்கலாம்