Monday, May 20
Shadow

டாடா திரை விமர்சனம் ( உணர்வுகள்) Rank 3.5/5

சின்னத்திரையில் கலக்கிவந்த கவின் தற்போது பெரிய திரையிலும் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். முன்னதாக லிஃப்ட் படத்தின் மூலம் தனது இருப்பை பதிவு செய்தவர் தற்போது டாடா படம் மூலம் அதனை மேலும் வலுவாக்கியுள்ளார். கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் டாடா. இப்படம் சாதாரண ஒரு பையனின் கதைதான் ஆனால் அதனை சொன்ன விதத்தில் இயக்குனர் வெற்றிபெற்றுள்ளார்.

கதைப்படி கவினும் அபர்ணா தாஸும் கல்லூரி படிக்கும் போதே காதலித்து வருகின்றனர். காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அபர்ணா கர்ப்பமாகிறார். இதனால் இரண்டு வீட்டிலும் இவர்களை ஒதுக்கி வைத்துவிடுகின்றர். கர்ப்பத்தை கலைத்துவிடுமாறு கவின் சொல்ல அபர்ணா அதனை ஏற்க மறுக்கிறார். வேறு‌வழியின்றி இருவரும் நண்பரின் வீட்டில் தங்குகின்றனர். அங்கு பிரச்சினை வரவே தனியே வீடு எடுத்து தங்குகின்றனர். இப்படியே போய்க்கொண்டு இருக்கும் வாழ்க்கையில் அடிக்கடி ஏற்படும் சண்டையால் இருவருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. ஒருநாள் ஆண் குழந்தையை பெற்றெடுக்கும் அபர்ணா அந்த குழந்தையை விட்டுவிட்டு மருத்துவமனையில் இருந்து அவரது குடும்பத்துடன் சென்றுவிடுகிறார். அந்த குழந்தையை வைத்துக்கொண்டு கவின் என்ன செய்கிறார்? மீண்டும் அபர்ணாவுடன் இணைந்தாரா ? என்பதே டாடா.

அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு சாதாரண கதையை எடுத்துக்கொண்டு அருமையான திரைக்கதை மூலம் ஒரு நல்ல படத்தை கொடுத்துள்ளார். கவின் மற்றும் அபர்ணாவின் நடிப்பு அட்டகாசம். இளம் வயதிலேயே கனமான வேடத்தை ஏற்று அருமையாக நடித்துள்ளார் கவின். வாழ்த்துகள். அபர்ணாவும் தனது பங்கிற்கு நடிப்பில் கலக்கியுள்ளார். மேலும் கவினின் நண்பராக வரும் ஹரீஷ் நல்ல நண்பராக ஸ்கோர் செய்கிறார். கவினின் அப்பாவாக பாக்யராஜ் அம்மாவாக ஐஸ்வர்யா கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளனர். படத்தின் பலமே சீரியஸான காட்சிகளில் ஓவராக சென்ட்டிமென்ட்டால் சொல்லாமல் காமெடி கலந்து சொல்லியிருப்பது ஆறுதல். இரண்டாம் பாதியில் ஐடி அலுவலக நண்பர்களாக வரும் பிரதீப் உள்ளிட்டோரும் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர். அந்த சின்ன பையன் சூப்பர். விடிவி கணேஷ் சில காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைத்துள்ளார்.

இதுபோன்ற படங்களுங்கு பாடல்களும் பின்னணி இசையும் மிகவும் முக்கியம். ஜென் மார்ட்டின் சூப்பரான இசையை கொடுத்துள்ளார். எழிலரசுவின் கேமரா காட்சிகளுக்கு அழகூட்டியுள்ளது. கதிரேஷ் அழகேசனின் எடிட்டிங் படத்தின் நீளத்தை குறைத்துள்ளது. வழக்கமான காதல் கதைதான் என்றாலும் அதிலும் சில புதுமைகளை புகுத்தி திரைக்கதை அமைத்து படத்தை ரசிக்கும் படி கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு லவ் டுடே படம் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது அந்த வகையில் இந்த ஆண்டு டாடா படம் இருக்கும் என்று நிச்சயம் நம்பலாம்.