
காதல் சொல்ல வந்த குழப்பக் குறிப்பே ‘டியர் ரதி’
பெண்களிடம் பேசுவதற்கே பயம் கொண்ட சரவண விக்ரம், அந்த பயத்தால் தொடர்ந்து தோல்வியடைந்த காதல்கள், நண்பரின் “அறிவுரை”யால் பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவது, அங்கே ஹஸ்லி அமானுடன் உருவாகும் ஒருநாள் பயணம் – இந்த எளிய கோட்டில் நகர வேண்டிய கதை, தேவையற்ற பேச்சுகளாலும், திணிக்கப்பட்ட கருத்துகளாலும், திசை தெரியாமல் அலைக்கழிக்கப்படுகிறது.
நாயகன்–நாயகி ஒருநாள் பயணம், மறுபக்கம் நாயகியை தேடும் கூட்டம் என்ற சுவாரஸ்யமான ஐடியா இருந்தும், அதை திரைக்கதையாக மாற்றும் இடத்தில் படம் முழுமையாக தடுமாறுகிறது. எதை சொல்ல வேண்டும், எப்போது சொல்ல வேண்டும் என்ற அடிப்படை தெளிவே இல்லாமல், கதை நகர்கிறது.
நாயகன் சரவண விக்ரம், தொலைக்காட்சி தொடர் அனுபவத்தை முழுவதுமாக திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். படம் முழுவதும் இடைவிடாமல் பேசிக் கொண்டே இருப்பது, ஒரு கட்டத்தில் பார்வையாளர்களையே சோர வைக்கிறது. குறிப்பாக கேமராவை நோக்கி பேசும் காட்சிகளில், “நடிப்பு எங்கே?” என்ற கேள்வி எழாமல் இருக்க முடியவில்லை. வசன உச்சரிப்பு சரியாக இருந்தாலும், உணர்வை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லாத கதாபாத்திரத்தில் சிக்கியிருப்பது அவருக்கு பெரிய குறை.
பாலியல் தொழிலாளி ‘ரதி’ கதாபாத்திரத்தில் ஹஸ்லி அமான், எளிமையான தோற்றத்தாலும், கண்களால் உணர்வுகளை சொல்ல முயற்சிப்பதாலும் கவனம் ஈர்க்கிறார். படத்தில் ஓரளவு நம்பகத்தன்மை இருப்பது இவரது நடிப்பால்தான்.
காமெடி கலந்த வில்லனாக ராஜேஷ் பாலச்சந்திரன் வரதன் கதாபாத்திரத்தில் மிரட்ட முயற்சித்தாலும், அது திரையில் வேலை செய்யவில்லை. “பிளாக் காமெடி” என சொல்லப்படும் காட்சிகள், சிரிப்பை ஏற்படுத்தாமல், அசௌகரியத்தை மட்டுமே உருவாக்குகின்றன. எதற்காக இந்த வில்லன்? எதற்காக இந்த காமெடி? என்ற கேள்விகளுக்கு படமே பதில் சொல்லவில்லை.
புதிய நடிகர்களான சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியம் ஆகியோர் முயற்சி எடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கும் தெளிவான எழுதப்பட்ட கதாபாத்திரங்கள் இல்லை.
லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவு, வண்ணங்கள் மற்றும் சில புதுமையான கோணங்கள் மூலம் படத்திற்கு தரத்தை கூட்ட முயற்சிக்கிறது. ஆனால், காட்சி அழகு மட்டும் ஒரு படத்தை காப்பாற்ற முடியாது என்பதையும் ‘டியர் ரதி’ நிரூபிக்கிறது.
எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பின்னணி இசை மட்டும் சில இடங்களில் காட்சிகளை தாங்கி நிறுத்துகிறது.
படத்தொகுப்பாளர் பிரேம்.பி, கையில் கிடைத்த குழப்பமான திரைக்கதையை ஒழுங்குபடுத்த முயற்சித்திருக்கிறார். ஆனால், வசனங்கள் அளவுக்கு மீறி குவிந்ததால், எடிட்டிங்கிற்கும் இடமில்லாமல் போயிருக்கிறது. படம் எதை மையமாகக் கொண்டது என்பதே தொகுப்பிலும் தெளிவாக இல்லை.
எழுதி இயக்கியிருக்கும் பிரவீன் கே.மணி, காதலை சொல்ல வருகிறேன் என்று தொடங்கி, காமம், பாலியல் தொழில், அதன் வரலாறு, பிரிட்டிஷ் கால சட்டங்கள் என வகுப்பு எடுப்பது போல விவரிக்கிறார். கருத்து ரீதியாக பாராட்டுக்குரிய எண்ணங்கள் இருந்தாலும், அவை திரைக்கதை ஓட்டத்தில் கலக்காமல், நேரடியாக திணிக்கப்பட்டதால் படம் கடுமையாக தொய்வடைகிறது.
காதல் அனுபவிக்க வேண்டிய ஒன்று; பேசிப் புரிய வைக்க முடியாது என்று சொல்லும் இயக்குநர், அதையே படம் முழுவதும் பக்கம் பக்கமாக பேசிக் கொண்டே இருப்பது பெரிய முரண்பாடு. இறுதியில் நாயகி யார், அவரது மனநிலை என்ன, இந்த பயணம் எதற்காக என்பதற்கே தெளிவான முடிவு இல்லை.
சில இடங்களில் ரசிக்கக்கூடிய எண்ணங்கள் இருந்தாலும், அவற்றை ஒருங்கிணைக்கத் தவறியதால் ‘டியர் ரதி’ ஒரு முழுமையான திரைப்பட அனுபவமாக மாறவில்லை.
மொத்தத்தில், நல்ல நோக்கங்களும் குழப்பமான சொல்லாடல்களும் கலந்த, தன்னைத் தானே சிக்கவைத்துக் கொண்ட ஒரு திரைப்படமே ‘டியர் ரதி’.
