Thursday, May 30
Shadow

கண்ணை நம்பாதே திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

இயக்குனர்மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிக்கா சாவ்லா, ஆத்மிகா, மாரிமுத்து மற்றும் பலர் நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காண்லாம்.

பெண்கள் கருத்தரித்திருக்கும் காலத்தில் அவர்களுடைய வயிற்றில் இருக்கும் சிசுவின் ஆரோக்கியத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் இயற்கையாக சுரக்கும் திரவம் ஒன்றை சட்டவிரோதமாக பயன்படுத்துவது தொடர்பான சம்பவங்களைப் பற்றியது.

பூங்கா ஒன்றின் இணையதள காணொளியை பார்த்து ரசித்து தன்னை மறந்து பொதுவெளியில் உதயநிதி ஸ்டாலின் சிரிக்கிறார். அவரின் சிரிப்பாலும், நடவடிக்கையாலும் ஈர்க்கப்படும் ஆத்மிகா அவரை காதலிக்க தொடங்குகிறார். ஆத்மிகாவின் ஆலோசனையின் பெயரில் அவரது வீட்டிலேயே வாடகைக்கு குடி வருகிறார் உதயநிதி. இருவரும் நெருக்கமாக பழகத் தொடங்குகிறார்கள்.

இதனை அறிந்து கொண்ட ஆத்மிகாவின் தந்தை உதயநிதியை கண்டித்து, இன்றே வீட்டை காலி செய்ய வேண்டும் என கூறுகிறார். உதயநிதி, தன் நண்பர் சதீசுடன் தேடி அலைந்து பிரசன்னா தங்கியிருக்கும் வீட்டில் வாடகைக்கு தங்குகிறார். அன்றே உதயநிதி, பிரசன்னா, சதீஷ் மூவரும் மதுபான கடைக்கு செல்கிறார்கள்.

இதில் உதயநிதி மது அருந்தாதவர் என்பதால் அவருக்கு வரும் அலைபேசி அழைப்பை ஏற்று பேசுவதற்காக வெளியே வருகிறார். அதன் போது சாலையில் ஒரு பெண்மணி விபத்தினை ஏற்படுத்துகிறார். அதனை விசாரிப்பதற்காக அந்த பெண்மணிக்கு அருகே செல்கிறார் உதயநிதி.

அந்தப் பெண்மணியோ பதட்டம் காரணமாக விபத்தினை ஏற்படுத்தி விட்டேன். என்னால் தொடர்ந்து வாகனத்தை இயக்க இயலாது. நீங்கள் காரை இயக்கி எம்மை எம்முடைய வீட்டிற்குச் செல்ல உதவ முடியுமா.? என கேட்கிறார். இரவு நேரம்… பெண்மணி… என்பதால் வேறு வழி இல்லாமல் உதவ ஒப்புக்கொள்கிறார்.

மறுநாள் காலை அந்த வாகனத்தை அந்த பெண்மணியிடம் ஒப்படைப்பதற்காக செல்லும்போது, அந்த பெண்மணி காரின் பின்பகுதியில் பிணமாக கிடக்கிறார். அதிர்ச்சி அடையும் உதயநிதி இதன் பின்னணி குறித்து ஆராய தொடங்குகிறார். இவருக்கு உதவியாக புது அறை தோழர் பிரசன்னாவும் உடன் வருகிறார். இவர்கள் கண்டறிந்த உண்மை என்ன? நிஜமான கொலையாளி யார்? என்பதை எளிதில் யூகிக்க முடியாத காட்சி அமைப்புகளுடன் பரபரவென்று தடதடக்கும் திரைக்கதையுடன் பயணிக்கும் படைப்புதான் ‘கண்ணை நம்பாதே’.

முதலில் பாராட்டப்பட வேண்டியவர் இயக்குநர் மு. மாறன். ஒரு க்ரைம் திரில்லருக்குரிய கதையை தேர்வு செய்து, அதனை நான் லீனியர் பாணியிலான திரைக்கதை மூலம் சொல்லி, ரசிகர்களை யோசிக்கவிடாமல் உச்சகட்ட காட்சி வரை அழைத்துச் செல்கிறார். இதனைத் தொடர்ந்து தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கும் உதயநிதி பாராட்டை பெறுகிறார். படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களும் திரைக்கதையுடன் அழுத்தமான பிணைப்பை ஏற்படுத்தி ரசிகர்களை தன்னை மறந்து கரவொலி எழுப்ப செய்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் பிளஸ்:
உதயநிதி, கதையின் மைய புள்ளியான பூமிகா சாவ்லா அற்புதமான நடிப்பு, ஆத்மிகாவின் நடிப்பு, பிரசன்னா, ஸ்ரீகாந்த் வழக்கம்போல் இயக்குநரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவும், பின்னணியிசையும் இயக்குநரின் படைப்பு நோக்கத்தை முழுமையாக உணர்ந்து, தங்களின் பங்களிப்பை நேர்த்தியாக வழங்கியிருக்கிறார்கள்.

படத்தின் மைனஸ்:
படத்தின் மைனஸ் என்று சொல்ல பெரிதாக எதுவும் இல்லை

மொத்தத்தில் கண்ணை நம்பாதே க்ரைம் திரில்லர் ரசிகர்களை கவரும்.