Sunday, May 19
Shadow

“கொலை” – திரை விமர்சனம்! (புதிய அனுபவம்) Rank 3.5/5

விஜய் ஆண்டனி நடித்தகொலை” திரை விமர்சனம்!

விடியும் முன் படத்தின் மூலம் கவனிக்க வைத்த இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள வெளியாகியுள்ள படம் கொலை. இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், ரித்திகா சிங், முரளி சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை பற்றி பார்க்கலாம்.

பிரபல மாடல் அழகியான மீனாட்சி செளத்ரி  பூட்டியிருந்த வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அந்த கொலை வழக்கை பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி ரித்திகா சிங் விசாரிக்கிறார். ஆனால், வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், துப்பறிவாளரான விஜய் ஆண்டனி மீனாட்சி கொலை வழக்கை கையில் எடுக்கிறார். ரித்திகா சிங்கும் மற்றும் விஜய்  ஆண்டனி இணைந்து நடத்தும் விசாரணை பல யூகங்கள் வழியே பயணித்து இறுதியில் கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? என்பதை வித்தியாசமான முறையிலும், விறுவிறுப்பாகவும் சொல்வதே ‘கொலை’.

படத்தின் இயக்குனர் பாலாஜி குமார் ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்தவர் என்பதால் தனது முந்தைய படத்தை போலவே இப்படத்தையும் மிகவும் வித்தியாசமான முறையில் ரசிக்கும் படி இயக்கியுள்ளார். தமிழில் ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை கொடுக்க விரும்பிய இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

ஒரு கொலை, எதற்கு செய்தார்கள், யார் செய்தார் என படிப்படியாக விரியும் திரைக்கதையில் தன்னால் முடிந்த அளவு புதுமைகளை புகுத்தியுள்ளார். விஜய் ஆண்டனி வயதான தோற்றத்தில் புதிதாக நடிக்க முயன்றுள்ளார். விசாரணை காட்சிகளில் முன்னாள் போலீஸ் என்ற தோரணை தெரிகிறது. தன்னால்தான் மகள் விபத்தில் சிக்கினால் என்ற குற்ற உணர்வுடன் வலம் வந்தாலும் கொலை வழக்கை விசாரிக்க சம்மதிக்கிறார்.

ரித்திகா சிங் நிதானமான நடிப்பை அலட்டல் இல்லாமல் கொடுத்துள்ளார். மேலதிகாரியாக ஜான் விஜய் தனது பணியை நன்றாக செய்துள்ளார். மீனாட்சி சௌத்ரி மாடல் அழகி என்பதற்கு பொருத்தமாக இருக்கிறார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். மற்ற கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர். இதுபோன்ற க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு கேமரா மற்றும் பின்னணி இசை மிக முக்கியமான ஒன்று. ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் , இயக்குனருக்கு பக்கபலமாக இருந்து இப்படத்தை டெக்கினிக்கலாக பேசப்படும் படமாக மாற்றியுள்ளார். காட்சிகள் ஒவ்வொன்றும் சிறப்பாக உள்ளது. கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை வித்தியாசமான உணர்வை கொடுத்துள்ளது. பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் கவர்கிறது. ஒரு சீனுக்கும் அடுத்த சீனுக்கும் சின்ன சின்ன வித்தியாசத்தை காட்டியுள்ளார் இயக்குனர். சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் கொலை குறையில்லை.

 

மொத்தத்தில் கொலை நம்மை பிரமிக்கவும் மிரட்டவும் செய்கிறது.