Friday, March 29
Shadow

கொம்புவச்ச சிங்கம்டா திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

நடிகர் சசிகுமார், நடிகை மடோனா செபாஸ்டியன்நடிப்பில் வெளியான ‘கொம்பு வச்ச சிங்கம்டா’படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியில் ஊரே கொண்டாடி, மரியாதை செய்யும் அளவுக்கு செல்வாக்குடன் இருக்கிறார் மகேந்திரன். இவரது ஒரே மகன் சசிகுமார் பெரியாரின் கொள்கையைப் பின்பற்றி சமத்துவம், சகோதரத்துவம் என்று ஊரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற நினைக்கிறார். இதனால் ஊருக்குள் இருக்கும் பல பேரின் பகையைச் சம்பாதிக்க நேர்கிறது. அந்த நேரத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் இரு பெரும் கோஷ்டிகள் மோதுகின்றன. அதில் எதிர்பாராதவிதமாக ஒரு கொலைச் சம்பவம் நிகழ்கிறது. இந்தக் கொலை வழக்கில் சசிகுமார், சூரி உள்ளிட்ட மூன்று பேர் கைதாகிறார்கள். நண்பர்களுக்குள் உருவான பிரச்சினை ஊர்ப் பிரச்சினையாகவும், சாதிப் பிரச்சினையாகவும் உருமாறுகிறது.

இந்தப் பிரச்சினை ஊதி ஊதிப் பெரிதாக்கப்படும் நிலையில் எப்படி அணைக்கப்படுகிறது, கொலையானது யார், கொலைக்கான பின்னணி என்ன போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.

படத்தின் சமூகக் கருத்தைப் பரவலாக்கம் செய்வதற்கு சசிகுமார் சரியாகப் பயன்பட்டிருக்கிறார். திகைப்பு, உற்சாகம், வெட்கம் என எந்த உணர்வையும் கண்டறிய முடியாத அளவுக்கு பொத்தம்பொதுவாக முகத்தை வைத்துக் கொள்கிறார். காதல் காட்சிகளில் செயற்கையாகத் தெரிகிறார். பற்றி எரியும் பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து செயல்படும் வேகத்தில் மட்டும் வழக்கமான நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.

மடோனா செபாஸ்டியன் பாடல்களுக்கு மட்டுமே பயன்பட்டுள்ளார். ஒரே ஒரு முக்கியக் காட்சியில் மட்டும் திருஷ்டிப் பொட்டு போல உதவியுள்ளார். நல்லவரா, கெட்டவரா என்று இனம் கண்டுகொள்ள முடியாத அளவுக்குத் திறமையான நடிப்பால் இந்தர் குமாரும், ஹரீஷ் பெராடியும் கவர்கிறார்கள்.

மென்மையான தன்மையில் இயக்குநர் மகேந்திரனின் நடிப்பு அருமை. சூரியின் காமெடி சுத்தமாக வொர்க் அவுட் ஆகவில்லை. குலப்புள்ளி லீலா, தீபா ராமானுஜம், பிரியங்கா, சென்றாயன், சங்கிலி முருகன், அருள்தாஸ், அபி சரவணன் எனப் பலர் வீணடிக்கப்பட்டுள்ளனர். சமூகக் கருத்துள்ள படத்தில் சமுத்திரக்கனி இல்லாமலா? அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்

படத்தின் பிளஸ்:

சசிகுமாரின் நடிப்பு, திபு நினன் இசை

படத்தின் மைன்ஸ்: 

சாதி பெருமை பேசும் வகையில் இருக்கும் காட்சிகள்

 

மொத்தத்தில் கொம்புவச்ச சிங்கம்டா படத்தை ஒருமுறை பார்க்கலாம்.