இந்திய சினிமாவிலும் சரி தமிழ் சினிமாவிலும் சரி கிரிக்கெட் சம்பந்தமா நிறைய படங்கள் வந்து இருக்கு அதில் பல படங்கள் வெற்றியை தழுவியுள்ளது. அந்த வகையில் இந்த லப்பர் பந்து சிக்ஸ் பறக்குமா இல்லை கிலின் போல்ட் ஆகுமா பார்ப்போம்.
ஹரிஷ் கல்யாண் அட்டகத்தி தினேஷ், சுவாஸ்விகா சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி காளி வெங்கட் பாலா சரவணன் கீதா கைலாசம் தேவதர்ஷினி ஜென்சன் திவாகர் டி.எஸ்.கே மற்றும் பலர் நடிப்பில் சான் ரோல்டான் இசையில் தமிரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் லப்பர் பந்து.
கிரிக்கெட் விளையாட்டில் கெத்து காட்டும் ‘அட்ட கத்தி’ தினேஷ், தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் வேலையை விட கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனால், எந்த ஊரில் கிரிக்கெட் நடந்தாலும் விளையாட கிளம்பி விடுவார். இளைஞர் ஹரிஷ் கல்யாண், சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்தாலும், சாதி பாகுபாட்டால் தனது சொந்த ஊர் கிரிக்கெட் அணியால் நிராகரிக்கப்படுகிறார். இதனால், வாய்ப்பு வழங்கும் அணிகளில் விருந்தாளி வீரராக விளையாடி தனது கிரிக்கெட் தாகத்தை தீர்த்துக் கொள்கிறார்.
இந்த இருவருக்கும் இடையே கிரிக்கெட் மூலம் ஆரம்பிக்கும் ஈகோ மோதல், அவர்களது வாழ்க்கையிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. என்ன தான் பிரச்சனை வந்தாலும் கிரிக்கெட் விளையாடுவதை மட்டும் விடாமல் இருக்கும் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட ஈகோ மோதல் மற்றும் மனிதர்களின் மனதில் இருக்கும் பாகுபாடு, அதே கிரிக்கெட் விளையாட்டு மூலம் எப்படி கலையப்படுகிறது, என்பதை யார் மனதையும் காயப்படுத்தாமல், கதையில் இருக்கும் நியாயத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்வதே ‘லப்பர் பந்து’.
’அட்ட கத்தி’ தினேஷ் தனது வயதுக்கு ஒத்துவராத முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர முயற்சித்திருக்கிறார். அவரது இயல்பான நடிப்பு அவரது முயற்சியை வெற்றியடைய செய்தாலும், ஹரிஷ் கல்யாண் உடன் அவர் நிற்கும் போது, இவருக்கு இது தேவையா? என்ற கேள்வி பார்வையாளர்கள் மனதில் எழுகிறது. இருந்தாலும், மனைவி பிரிவை நினைத்து ஏங்குவது, கிரிக்கெட் விளையாட்டின் மூலம் ஏற்படும் ஈகோவை பல வகையில் வெளிப்படுத்துவது என்று தனது நடிப்பு மூலம் தனது வயதை மறைத்து தனது கதாபாத்திரத்தை ரசிக்க வைத்துவிடுகிறார்.
நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாணின் கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் ஹீரோயிஷம் இல்லை என்றாலும், அந்த கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டு பார்வையாளர்கள் மனதில் நாயகனாக உட்கார்ந்து விடுகிறார். புரட்சிகரமான வசனங்கள் பேசாமலேயே மக்கள் மனதில் இருக்கும் பாகுபாட்டை கலையும் அன்பு, கதாபாத்திரத்திற்கு மிக கச்சிதமாக பொருந்தியிருக்கும் ஹரிஷ் கல்யாண், தனது நடிப்பு மூலம் நியாயம் சேர்த்திருக்கிறார்.
தினேஷின் மனைவியாக நடித்திருக்கும் ’கோரிப்பாளையம்’ புகழ் ஸ்வஸ்விகா, பல இடங்களில் தன்னை சுற்றியிருக்கும் நடிகர்களை தனது நடிப்பு மூலம் ஓரம் கட்டி விடுகிறார். தனது பார்வை மூலமாகவே தனது கோபத்தை வெளிக்காட்டுபவர், தனது வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழி மூலமாக மிரட்டி விடுகிறார்.
ஹரிஷ் கல்யாணின் காதலியாகவும், தினேஷின் மகளாகவும் நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி காதலன் மற்றும் அப்பா இடையே ஏற்பட்ட ஈகோவை புத்திசாலித்தனமாக சமாலிப்பதோடு, கோபத்தில் தனது அம்மாவுக்கு சளைத்தவள் அல்ல என்பதை காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார்.
கிரிக்கெட் விளையாட்டின் மீது பேரார்வம் கொண்டவராக நடித்திருக்கும் காளி வெங்கட், வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பால் கருப்பையா என்ற கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
ஹரிஷ் கல்யாணின் நண்பராக படம் முழுவதும் வரும் பால சரவணன், தனது வசனங்கள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கிறார். குறிப்பாக சாதி பாகுபாடு எந்த ரூபத்தில் இருக்கிறது, என்பதை அவர் விவரித்து கைதட்டல் பெறுபவர், படம் முழுவதும் தனது இருப்பை காட்சிக்கு காட்சி நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.
தினேஷின் நண்பராக நடித்திருக்கும் ஜென்சன் திவாகர் கதையோடு பயணிக்கும் கதாபாத்திரத்தை கலகலப்பாக கையாண்டு சிரிக்க வைக்கிறார். கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக நடித்திருக்கும் கதிருக்கு ஐபிஎல் தொடரின் தமிழ் வர்ணனையாளர் வாய்ப்பு கிடைக்கப்போவது உறுதி. கிக்கெட் போட்டியில் அவர் கொடுக்கும் கமெண்ட்ரி வசனங்கள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக திரையரங்கையே அதிர செய்கிறது.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் கேமரா கிரிக்கெட் போட்டிகளையும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும் மிக சரியான முறையில் இணைத்து ரசிகர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் லப்பர் பந்துக்கு உயிர் கொடுத்து மக்களின் மனங்களோடு உறவாட வைத்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் மதன்.ஜி மற்றும் கலை இயக்குநர் வீரமணி கணேஷ் ஆகியோரது பணி, திரைப்படத்தையும் கடந்து ஒரு வாழ்வியலை மிக இயல்பாக பதிவு செய்வதற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறது.
கிரிக்கெட் விளையாட்டு மற்றும் அதன் மீது இளைஞர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை வைத்துக் கொண்டு மக்கள் மனதில் இருக்கும் ஈகோ மற்றும் பாகுபாட்டை கலைய முயற்சித்திருக்கும் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, அதை கலகலப்பான கொண்டாட்டமாக கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘லப்பர் பந்து’ சிக்சர் பறக்கும்