‘மழையில் நனைகிறேன்’ படத்தின் தலைப்பு கவிதைதனமாக உள்ளது.ஆனால் படம் அப்படி அமைந்துள்ளதா என்று பார்ப்போம்.
அன்சன் பால், ரெபா ஜான், மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், கிஷோர் ராஜ்குமார், சங்கர் குருராஜா, வெற்றிவேல் ராஜா மற்றும் பலர் நடிப்பில் டி.சுரேஷ் குமார் இயக்கதில் விஷ்ணு பிரசாத் இசையில் வெளிவந்து இருக்கும் படம் ‘மழையில் நனைகிறேன்’
பட்டப்படிப்பை முடிக்காமல் வெட்டியாக ஊர் சுற்றி வரும் நாயகன் அன்சன் பால், அமெரிக்காவுக்கு சென்று மேற்படிப்பு படிப்பதற்கான முயற்சியில் இருக்கும் நாயகி ரெபா ஜானை கண்டதும் காதல் கொள்வதோடு, அவர் பின்னாடியே மாசக்கணக்கில் அலைகிறார். ஒரு வழியாக அவரிடம் தன் காதலை சொல்ல, ரெபா அதை மறுத்துவிடுகிறார். ரெபா மறுத்தால் என்ன?, அவர் மனதில் காதல் வரும் வரை காத்திருப்பேன், என்ற முடிவுக்கு வரும் நாயகனின் காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே ‘மழையில் நனைகிறேன்’.
சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அன்சல் பால், நாயகனாக தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். பணக்கார வீட்டு பையனாக ஜாலியான வாழ்க்கையாகட்டும், காதலுக்காக ஏற்றுக்கொள்ளும் கஷ்ட்டமான வாழ்க்கையாகட்டும் இரண்டிலும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ரெபா ஜான், அழகு மற்றும் நடிப்பு என இரண்டையும் அளவாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார்.
நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் மேத்தீவ் வர்கீஸ் மற்றும் அம்மாவாக நடித்திருக்கும் அனுபமா குமார், நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் சங்கர் குரு ராஜா, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் கிஷோர் ராஜ்குமார், வெற்றிவேல் ராஜா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
விஷ்ணு பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் குறையில்லை.
ஜெ.கல்யாணின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்புல்லாக படமாக்கப்பட்டுள்ளது.
விஜி மற்றும் கவின் பாண்டியன் ஆகியோரது வசனங்கள் காதல் காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் இருந்தாலும், “நீ நினச்சா பல கார்களை வாங்கலாம், ஆனால் ஐங்கார் மட்டும் போதும்னு முடிவு பண்ணிட்ட..” என்ற வசனத்தின் மூலம் கைதட்டல் பெறுகிறார்கள்.
கதை எழுதி இயக்கியிருக்கும் டி.சுரேஷ் குமார், மென்மையான காதல் கதையை மிக மென்மையாக கையாண்டிருக்கிறார். காதலர்கள் ஒன்று சேர்வார்களா? என்ற எதிர்பார்ப்போடு பார்வையாளர்களை படத்துடன் பயனிக்க வைத்திருக்கிறார். அதே சமயம், இரண்டாம் பாதியில் இயக்குநரின் திருப்பங்கள் மற்றும் இறுதியில் அவர் என்ன சொல்லப் போகிறார், என்பது யூகிக்கும்படி இருப்பது படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்திருக்கிறது.
காதலர்களுக்கான பிரச்சனைகள் மற்றும் அதைச் சார்ந்த காட்சிகளில் இயக்குநர் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் ரசிகர்கள் காதல் மழையில் நனைந்திருப்பார்கள்.
மொத்தத்தில், ‘மழையில் நனைகிறேன்’ ஈரம் இல்லை