Monday, May 20
Shadow

மெமரீஸ் – திரை விமர்சனம் Rank 3.5/5

மலையாள இரட்டை இயக்குனர்கள் ஷியாம் மற்றும் பிரவீன் இயக்கத்தில் ஷிஜு தமீனின் பிலிம் பேக்டரி – ஷிஜு தமீன் தயாரித்திருக்கும் படம் மெமரீஸ். இந்த படத்திற்கு இசை கவாஸ்கர் அவினாஷ் . இந்த படத்தில் வெற்றி , பார்வதி, ரமேஷ் திலக், ஹரீஷ் பெராடி, ஆர்.என்.ஆர்.மனோகர், சாஜில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் ஆரம்பத்தில் ஹீரோ வெற்றி காவல் நிலையம் சென்று தன்னை யாரோ கொலை செய்ய துரத்துகிறார்கள் என்று கூறுகிறார். அவரை யார் என்று போலீஸ் விசாரித்தால் எனக்கு பழசு எல்லாம் மறந்துவிட்டது என்கிறார். அவர் சொல்லும் கதையை கேட்ட போலீஸ் நீ நான்கு கொலை செய்த குற்றவாளி என்று அவரை கைது செய்கின்றனர். உண்மையில் வெற்றி யார்? நான்கு கொலையை செய்தது யார்? வெற்றிக்கு என்ன ஆனது? என்பதே மெமரீஸ்.

இது ஒரு சைக்காலஜி த்ரில்லர் படம். இதுபோன்ற படங்கள் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு புரியும் வகையில் இருந்தால்தான் அவர்களால் படத்தை ஒன்றி பார்க்க முடியும். ஆனால் குழப்பமான திரைக்கதையால் நம்மை சோதிக்கிறது.

மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கும் வெற்றி, உருவத்தில் வித்தியாசத்தை காட்டியிருப்பது போல், நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். குறிப்பாக வெற்றி யார்? என்ற உண்மையான கதையில் அவருடைய நடிப்பு பாராட்டும்படி உள்ளது. ஆனால் தொடர்ந்து க்ரைம் கதைகளில் நடிப்பதால் ஒரே மாதிரி நடிப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. மிஸ்டர் வெற்றி நீங்கள் ஒப்புக்கொள்ளலைனாலும் அதுதான் நெசம்.

ஒரே சம்பவத்தை பல்வேறு நபர்களின் கதாபாத்திரங்களின் வழியாக நமக்கு சொல்லப்படுகிறது . படம் முடிந்து வெளியே வரும்போது யாரு யாரை கொலை செய்தார்கள் என ரசிகர்கள் குழம்புவது உறுதி.

நாயகியாக நடித்திருக்கும் பார்வதி கதையில் ஒரு கதாபாத்திரமாக வந்தாலும் தனது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் டயானாவும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ரமேஷ் திலக், ஹரீஷ் பெராடி, ஆர்.என்.ஆர்.மனோகர், சாஜில் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் கதாபாத்திரம் திரையில் என்னென்னமோ செய்கிறது. இறுதியில் நமக்கு புரிகிறதா என்றால் கடினம்தான். இதுபோன்ற கதைகளுக்கு திரைக்கதை மிக முக்கியம் ஆனால் இதில் அதில் சற்று சறுக்கியுள்ளனர் இயக்குனர்கள்.
கவாஸ்கர் அவினாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை. பாடல்கள் வேகத்தடை. படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், இப்படி ஒரு கதையை புரிந்துக்கொண்டு படத்தொகுப்பு செய்ததற்கு பாராட்டு. அஜயன் பாலாவின் வசனங்கள் படத்துக்கு ப்ளஸ்.
ஷியாம் மற்றும் பிரவீன் ஆகியோர் எழுதி இயக்கியிருக்கிறார்கள். எளிமையான கதையை குழபங்கள் நிறைந்த திரைக்கதையாக்கி, அதை தெளிவாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.

முன்னரே சொன்னதுபோல் ஒரே கதையை பல்வேறு கதாபாத்திரங்களின் வழியாக சொன்னது பார்வையாளர்களுக்கு சலிப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். இருப்பினும், வெற்றி யார்? என்ற கேள்வி படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்று ரசிக்க வைக்கிறது. இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் உழைத்திருந்தால் நல்ல ஒரு த்ரில்லர் படமாக வந்திருக்கும். தற்போது குழப்பமே மிஞ்சி இருக்கிறது.