Sunday, October 12
Shadow

‘வீர தமிழச்சி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

‘வீர தமிழச்சி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

மகிழினி கலைக்கூடம் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ் நடித்திருக்கும் ‘வீர தமிழச்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டனர். விழாவில் ராஜகுமாரன், விஜய் ஸ்ரீ, தயாரிப்பாளர் அன்புசெல்வன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இந்த படத்தில் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, மறைந்த மாரிமுத்து, எழுத்தாளர்-நடிகர் வேல்ராமமூர்த்தி, கே.ராஜன், மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு சங்கரலிங்கம் செல்வகுமார், இசை ஜுபின். தயாரிப்பாளர்கள் சாரதா மணிவண்ணன் மற்றும் மகிழினி.

விழாவில் பேசுகையில் தயாரிப்பாளர் மணிவண்ணன், “தமிழ் பெண்களின் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும்” என்றார்.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “கட்டிட தொழிலாளியாக இருந்து இயக்குநராக உயர்ந்த சுரேஷ் பாரதியின் உழைப்பை பாராட்ட வேண்டும். ஹீரோயின் மையக் கதையம்சம் கொண்ட இப்படம் சிறப்பாக இருக்கும்” என்றார்.

சிறு பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புசெல்வன், “இப்படம் வெற்றி பெற வேண்டும். சிறுபட தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக ஊடகங்கள் உதவ வேண்டும்” எனக் கூறினார்.

இயக்குநர் ஷரவண சுப்பையா, “பெண்கள் பழிக்கு பழி தீர்க்கும் போராட்டத்தை மையமாகக் கொண்ட இப்படம், சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்” என்றார்.

இயக்குநர் ராஜகுமாரன், “பெண்களின் வலிமையை வெளிப்படுத்தும் விதத்தில் கதாநாயகி சுஷ்மிதா சுரேஷ் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார்” என பாராட்டினார்.

நடிகை சுஷ்மிதா சுரேஷ், “வீர தமிழச்சியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெருமை. ஸ்டண்ட் காட்சிகளில் சிரமங்கள் இருந்தாலும் மகிழ்ச்சியுடன் செய்தேன். இந்தப் படம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளிப்படுத்தும்” என்றார்.

இசையமைப்பாளர் ஜுபின், “திரைப்படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. சுஷ்மிதா சுரேஷின் ஆக்ஷன் காட்சிகள் விஜயசாந்தியை நினைவூட்டுகின்றன” என்றார்.

இயக்குநர் சுரேஷ் பாரதி, “கட்டிட தொழிலாளியாக இருந்து இன்று இயக்குநராக உயர்ந்திருக்கிறேன். இந்தப் படம் பெண்களின் பாதுகாப்பைச் சுட்டிக்காட்டும் விழிப்புணர்வு படம். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. நிச்சயமாக வெற்றி பெறும்” என்றார்.

இயக்குநர் பேரரசு, “வீர தமிழச்சி என்பது வன்முறையால் மட்டுமல்ல, அநீதிக்கு எதிராக எழும் பெண்ணின் குரலே உண்மையான வீர தமிழச்சி” எனக் குறிப்பிட்டார்.