Sunday, May 19
Shadow

நானே வருவேன் – திரைவிமர்சனம் (Rank 3.5/5)

 

எப்படி இருக்கிறது நானே வருவேன்: விமர்சனம்!

செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகரான அறிமுகமான தனுஷ் அதன் பிறகு தனது அண்ணனின் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களில் நடித்தார். இந்த படங்கள் எல்லாம் இருவருக்குமே வெற்றிப் படமாக அமைந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் என்றதுமே எதிர்பார்ப்பு எகிறியது. மேலும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை என்றதுமே எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்பில் இன்று வெளியாகியுள்ளது நானே வருவேன். பொன்னியின் செல்வன் நாளை வெளியாக உள்ள நிலையில் எந்த வித விளம்பரமும் இல்லாமல் வெளியாகியுள்ளது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். பொன்னியின் செல்வன் வெளியாக உள்ள நிலையில் நாம் விளம்பரம் செய்தால் எடுபடாது என்பதை அறிந்த அவர் விளம்பரம் இல்லாததை விளம்பரமாக பயன்படுத்திக் கொண்டார். படம் எப்படி இருக்கிறது என்பதை இப்போது பார்ப்போம்.

இப்படத்தில் தனுஷ் இரட்டையராக பிறந்த அண்ணன், தம்பி அண்ணன் கொஞ்சம் சைக்கோ குணம் கொண்டவர் அப்பாவையே கொலை செய்த படுபாவி. தம்பியையும் கொல்ல துடிக்கிறார். இதனால் பயந்துபோன அம்மா, அண்ணன் தனுஷை ஊரை விட்டு எங்கேயோ விட்டுச் சென்று வந்துவிடுகிறார். ஆண்டுகள் கழிகிறது‌. இப்போது தம்பி தனுஷுக்கு திருமணம் ஆகி மனைவி, மகள் என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்த சந்தோஷத்தில் இடி விழுவது போல் மகள் திடீரென தனக்குத் தானே பேசிக்கொண்டு இருக்கிறார். படிப்பிலும் கவனம் செலுத்துவதில்லை. ரூமுக்குள் யாருடனோ பேசிக்கொண்டு இருப்பதை கேட்டு கதவை திறந்து பார்த்தால் யாரும் இல்லை. இதனால் மனநல மருத்துவரான பிரபுவிடம் தனது மகளை அழைத்துச் சென்று காட்டுகிறார். அங்கு தனக்கு மட்டும் ஒரு உருவம் தெரிவதாகவும் அது என்னை என்ன எல்லாமோ செய்ய சொல்வதாகவும் மகள் சொல்ல தனுஷும் பிரபுவும் அதிர்ச்சி அடைகிறார். இறுதியில் யார் அந்த உருவம்? அதற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? அண்ணன் தனுஷ் என்ன ஆனார் என்பதை தனது பாணியில் சொல்லியுள்ளார் செல்வராகவன்.

செல்வராகவன் படங்களில் தனுஷ் நடிக்கிறார் என்றாலே எதிர்பார்ப்பு அதிகரித்துவிடும் அதிலும் இதில் இரண்டு தனுஷ் என்றால் சொல்லவா வேண்டும். சாதுவான குடும்பத் தலைவனாகவும் அன்பான தந்தையாகவும் தனுஷ் அற்புதப்படுத்தியுள்ளார். தன் கண்முன்னே மகளுக்கு ஏற்படும் அமானுஷ்யங்களை பார்த்து துடிப்பதாகட்டும் மகளுக்காக யாரை வேண்டுமானாலும் கொல்லுவேன்‌ என்று பேசுவதாகட்டும் நடிப்பில் அசுரனத்தனம்தான். அதுவும் வில்லன் தனுஷ் வெறித்தனம். சிறுவயதிலேயே அடித்து துரத்தி விடப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தால் அரக்கனாக மாறிய கதாபாத்திரத்தில் நிஜ அரக்கனாகவே தெரிகிறார். இவருக்கு ஜோடி எல்லி அவ்ராம் புதுவரவு. மனைவியாக வரும் இந்துஜா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நன்றாக செய்துள்ளார். மனநல மருத்துவராக வரும் பிரபு வழக்கமான பணியை செய்துள்ளார். யோகிபாபு இருந்தும் காமெடி இல்லை. படத்திற்கு அது தேவையும் இல்லை. தனுஷின் மகள் மற்றும் மகன்களான நடித்திருந்த சிறுவர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்‌. அதேபோல் சிறுவயது தனுஷாக நடித்த இருவரும் நன்றாக நடித்துள்ளனர். செல்வராகவன் மற்றும் தனுஷ் இணையும் படத்திற்கு எப்படி இப்படி இசை அமைக்கிறாரோ என்று தெரியவில்லை. பின்னணி இசை மிரட்டல்‌. படம் முடிந்து வெளியே வந்த பிறகும் வீரா சூரா பாடல் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. பாடல்கள் பிரமாதம். ஓம் பிரகாஷின் கேமராவில் வடமாநில இடங்கள் அழகாக படமாக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான காட்சிகள் வீட்டுக்குள்ளேயே எடுக்கப்பட்டு இருந்தாலும் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டு மணி நேரம்தான் படம் எதற்கு எடிட்டர் பிரச்சன்னாவிற்கு நன்றி. முதல் பாதி ஹாலிவுட் படத்தை பார்த்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் பாதி வழக்கமான செல்வராகவன் படமாகி விட்டது. பழி வாங்கும் கதையை சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்து கொடுத்துள்ளார். கமர்ஷியல் படங்களை விடுத்து இதுபோன்ற படங்களில் தனுஷ் நடித்து வருவது வரவேற்கத்தக் க விஷயம். மொத்தத்தில் இருவரின் கூட்டணியில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங். ஆனால் படம் ரசிக்கும் படி உள்ளது.

மொத்தத்தில் நானே வருவேன் வரவேற்கலாம்