Sunday, May 19
Shadow

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே விமர்சனம் Rank 3/5

னக்குள் ஒருவன் என்ற படத்தினை இயக்கிய பிரசாத் ராமரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே”.

இப்படத்தில் செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முதல் முறையாக பிரபல பாடகர் பிரதீப் குமார் இசையமைத்திருக்கிறார்.

பிரதீப் குமாரே இப்படத்தினை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

கதைக்குள் பயணப்பட்டு விடலாம்….

மதுரையை மையப்படுத்தி கதைக்களம் ஆரம்பிக்கிறது. தனது நண்பர்களுடன் சிகரெட் பிடித்துக் கொண்டு ஊரை சுற்றி பொழுதை கழித்து வரும் நாயகன் தான் செந்தூர் பாண்டியன். பேஸ் புக் தளத்தில் இருக்கும் பெண்களுக்கு மெசேஜ் அனுப்பி அவர்களை தனது வலைக்குள் விழ வைப்பது இவரது வழக்கம்.

அப்படியாக மாயவரத்தில் இருக்கும் நாயகி ப்ரீத்தி கரணுடன் பேஸ் புக் மூலமாக நட்பு ஏற்படுகிறது. ப்ரீத்தி கரணுக்கு பிறந்தநாள் என்பதால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க தனது நண்பனுடன் பைக்கில் மதுரையில் இருந்து மாயவரத்திற்குச் செல்கிறார் செந்தூர் பாண்டியன்.

நாயகி ப்ரீத்தி கரணுடன் எப்படியாவது உல்லாசமாக இருந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் செல்கிறார் செந்தூர் பாண்டியன். சென்ற இடத்தில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

கதைக்கு என்ன மாதிரியான ஹீரோ தேவைப்படுகிறார் என்பதை அறிந்து அப்படியான ஒருவரை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். நாயகன் செந்தூர் பாண்டியன் மதுரை மண்ணின் உடல் மொழியை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஒரு சில இடங்களில் மூக்குடைக்கப்பட்டு நிற்கும் காட்சியாக இருக்கட்டும், தனது நண்பனுடன் யதார்த்தமாக பேசுவதாக இருக்கட்டும் என பல இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகி ப்ரீத்தி கரண், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார் காட்சிகளில் அளவாகவும் நடித்திருக்கிறார். நிறைய காட்சிகள் சிங்கிள் ஷாட்களாக நகர்வது படத்திற்குள் நம்மை எளிதில் கடத்திச் சென்று விடுகிறது.

செந்தூர் பாண்டியனின் நண்பனாக வந்த சுரேஷ் மதியழகன், ஆங்காங்கே யதார்த்தமாக அடிக்கும் காமெடிகள் நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது. மற்றபடி படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் மிக பொருத்தமாகவே நடித்துள்ளனர்.

கிராம இளைஞர்கள் மத்தியில் நடக்கும் நிகழ்கால கடந்த கால நினைவுகளை பல இடங்களில் நினைவிற்கு கொண்டு வந்து சென்றிருக்கிறார் இயக்குனர்.

உதய் தங்கவேலின் ஒளிப்பதிவு அதற்கு பக்கபலமாக வந்து நின்றிருக்கிறது. பிரதீப் குமாரின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் கதைக்கேற்ற பயணமாக உறுதுணையாக நின்றிருக்கிறது.

18+ படம் என்பதால், பல வசனங்கள் நேரடியாகவே படம் பார்க்கும் ரசிகர்களை வந்து சேர்ந்திருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட கருத்து ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி நிறுத்துவதாக அமைந்தது பெரும் பலம்.

வசனங்கள் கைதட்டும் படியாக இருந்தது.

மொத்தத்தில்,

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே – 18+ தான்.. ஆனாலும் பார்க்க வேண்டிய படம் தான்