Thursday, April 18
Shadow

‘பேய் இருக்க பயமேன்’ திரைப்பட விமர்சனம்


பேய் இருக்கும் வீடு ஒன்றில் புதிதாக திருமணமான தம்பதியினர் குடியேற, அங்கிருக்கும் பேய்கள் தம்பதினரை வீட்டை விட்டு
துறத்துவதற்காக, அவர்களுக்கு பலவித தொல்லைகளை கொடுத்து மிரட்டுகிறது. அந்த பேய்களை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை
மேற்கொள்ளும் தம்பதியினருக்கு, பேய்கள் என்றால் என்ன? என்ற புரிதல் கிடைக்க, அதன் மூலம் அவர்கள் பேய்களுக்கு பலவித
கஷ்ட்டங்களை கொடுக்கிறார்கள். இறுதியில் அந்த வீட்டில் இருந்து வெளியேறியது தம்பதியினரா அல்லது பேய்களா, என்பதை
நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள்.

தம்பதியாக ஹீரோ கார்த்தீஸ்வரனும், ஹீரோயின் காயத்ரி ரமாவும் கச்சிதமாக பொருந்துகிறார்கள். விருப்பம் இல்லாத திருமணத்தால்,
எலியும், பூனையுமாக அவ்வபோது சண்டை போட்டுக்கொள்ளும் கணவன், மனைவி நகைச்சுவை கலாட்டா ரசிக்க வைக்கிறது. ஒரு
கட்டத்தில் பேய்களே பயந்து போகும் அளவுக்கு இவர்கள் கொடுக்கும் டார்ச்சர்கள் அனைத்தும் இனிப்பு வகைகள். ஹீரோவாக
நடித்திருக்கும் கார்த்தீஸ்வரன் காமெடி கலந்த நடிப்பால் கவர, அவருடன் போட்டி போடும் புது மனைவி வேடத்தில் நடித்திருக்கும்
ஹீரோயின் காயத்ரி ரமாவும் நடிப்பில் அசத்துகிறார்.

போலி சாமியாராக வரும் கோதை சந்தானம், ஆவி ஆராய்ச்சியாளராக வரும் முத்துக்காளை, நிஜமான சாமியாராக வரும் நெல்லை
சிவா, பேய்களாக நடித்திருக்கும் அர்ஜுன், நியதி என படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களது வேலை சரியாக
செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அபிமன்யுவும், இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளினும் கதைக்கு ஏற்ப பணிபுரிந்துள்ளார்கள். படத்தொகுப்பாளர் ஜிபி
கார்த்திக் ராஜா, கத்திரிக்கு கூடுதல் வேலை கொடுத்திருக்கலாம்.

பேய் படங்கள் என்றாலே, அதில் பேய்களின் பின்னணியும், பழிவாங்கும் படலமும் இருப்பது தான் வழக்கம். ஆனால், அந்த வழக்கமான
பாதையில் பயணிக்காமல் வித்தியாசமான கோணத்தில் யோசித்திருக்கும் இயக்குநர் சி.கார்த்தீஸ்வரன், பேய் என்றால் என்ன? பேய்
பயத்தை எப்படி போக்குவது? போன்ற விஷயங்களை காமெடியுடன் கலந்து கொடுத்திருக்கும் முறை ரசிக்க வைக்கிறது.

முதல் பாதி படம் ரசிகர்களை சற்று கோபப்படுத்தினாலும், பேய் பயத்தை எப்படி போக்குவது, என்ற விளக்கத்தை கொடுத்தப் பிறகு
திரைக்கதை வேகம் எடுப்பதோடு, படம் சுவாரஸ்யமாக நகரவும் தொடங்குகிறது.

மொத்தத்தில், குறைகள் சில படத்தில் இருந்தாலும், இறுதியில் நிறைவான ஒரு பொழுதுபோக்கு படம் பார்த்த திருப்தியோடு, பேய்
பயத்தை போக்கிய ஒரு புத்தகம் படித்தது போன்ற உணர்வையும் படம் கொடுக்கிறது.