Monday, May 20
Shadow

கலைஞனுக்கு மரணமில்லை… இயக்குனர் டி.பி.கஜேந்திரன்க்கு பூச்சி முருகன் புகழாரம்!

இன்று உடல்நிலை சரியில்லாமல் காரணமாக காலமான இயக்குனர் டி.பி. கஜேந்திரன் பற்றி நடிகர் சங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அதோடு குடிசை மாற்று வாரிய தலைவராக பதவி வகிக்கும் பூச்சி முருகன் அவரின் முகநூல் பக்கத்தில் அவரை பற்றிய ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதை பார்ப்போம்.

 

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி. இயக்குநர், நடிகர் டி. பி. கஜேந்திரன் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார் என்று தகவல் வந்தது. அன்று இரவே சென்று சந்தித்தேன். ஒரு குழந்தையை போல் அமைதியாக அமர்ந்திருந்தார். அவரை அவரது மகள் முத்துலட்சுமி தாயைப் போல கவனித்துக் கொண்டு இருந்தார். அவரிடம் அதிகம் நினைவு இல்லை. நான் தான் பூச்சி முருகன் என்றேன். பூ…ச்…சி… ஆங்… என்பது தான் அவரது பதில். அவரது நிலை என்னை கலங்கடித்தது. கழகத் தலைவர் மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்களின் கல்லூரித் தோழர். இருவரது நட்பு பற்றி நன்றாகத் தெரியும். அவரை சந்தித்துவிட்டு திரும்பும் வழியில் சந்திப்பு பற்றி தளபதிக்கு தகவல் தெரியப்படுத்தினேன். சில நிமிடங்களில் அழைத்தார். டி.பி.கஜேந்திரன் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தவர் ‘நாளைக்கு அவரை பார்க்க போகலாம்’ என்றார். சட்டசபை, கொரோனா தடுப்பு பணிகள் என்று பரபரப்பாக இருக்கும் சூழலில் எப்படி வருவார்? என்று நினைத்தேன். ஆனால் சொன்னபடியே மறுநாள் மாலையே வந்தார். தன்னை பார்க்க தளபதி வரப் போகிறார் என்று சொன்னதும் கஜேந்திரன் அவர்களிடம் உண்டான உற்சாகத்தையும் உத்வேகத்தையும் எந்த ஒரு மருத்துவர் பார்த்தாலும் இது மருத்துவ அதிசயம் என்றே ஆச்சரியப்பட்டிருப்பார். அத்தனை மாற்றங்கள் அவரிடம். முதல் நாள் பார்த்தவரா இவர்? என்று நானே அசந்து போனேன். கல்லூரித் தோழரை சந்திக்க இந்த சட்டை தான் போடுவேன் என்று அடம் பிடித்து போட்டுக் கொண்டார். பண்டிகைக்கு தயாராகும் சிறுவனைப் போல உற்சாகமாக இருந்தார். தளபதி அவர்களும் அவரும் கல்லூரி நினைவுகளை பகிர்ந்துகொள்ள இருவரும் அந்த காலகட்டத்துக்கே சென்றனர். அமைச்சர் மகேஷ் அவர்களும் உடன் இருந்தார். அவரது தந்தையும் இந்த நட்பு வட்டத்தில் ஒருவர். கிளம்பும்போது ’என்ன வேண்டும்?’ என்றார் தளபதி. ’ஒன்றும் வேண்டாம். இந்த நண்பனை பார்க்க நீங்கள் வந்ததே போதும்’ என்று நெகிழ்ந்தார் கஜேந்திரன். அடுத்த சில நாட்கள் ஒரே நாளில் 4 வீடியோ பேட்டிகள் தரும் அளவுக்கு தெம்பானார். நான் படம் இயக்கியே தீருவேன் என்று சொல்லி மிடில் கிளாஸ் மாதவன் பார்ட் 2 வுக்கான பணிகளை தொடங்கினார். ஆனாலும் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. அடிக்கடி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படு்வதும் மீண்டு வருவதுமாக இருந்தார். கடந்த வாரம் நடிகர் சங்கத்தில் அவர் பெயரை பார்த்தபோது விரைவில் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இன்று காலை அவர் காலமானார் என்று தகவல் வர அதிர்ச்சி ஆனேன். கழகத் தலைவரின் வீட்டிலேயே ஒரு துக்கம். இருந்தாலும் நண்பனைக் காண உடனடியாக கிளம்பி விட்டார். உடன் இருந்தபோது தளபதி அவர்கள் உணர்ச்சிமயமாக இருந்ததை உணர முடிந்தது. அடுத்து மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கும் அஞ்சலி செலுத்தி திரும்பினோம்.

ஓர் உண்மையான கலைஞன் தன் இறுதி மூச்சு வரை இயங்கிக் கொண்டிருக்கவே விரும்புவான். முத்தமிழறிஞர், நடிகர் திலகம், என் தந்தை எஸ்.எஸ்.சிவசூரியன் என பலரிடம் இதை உணர்ந்திருக்கிறேன். அடுத்து டி.பி.கஜேந்திரன் அவர்களிடமும் இதை உணர்ந்தேன். அவரது மிடில் கிளாஸ் மாதவன் ஒரு படம் போதும். நூற்றாண்டுகளையும் தலைமுறைகளையும் கடந்தாலும் அவர் நினைவு கூரப்படுவார்.