Wednesday, May 29
Shadow

ராங்கி – திரைவிமர்சனம் (பிரமிப்பு) Rank 4.5/5

தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடைவெளிக்கு பின் மீண்டும் பொன்னியின் செல்வன் படம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் தடம் பதித்த திரிஷக்கு மேலும் ஒரு பலம் ராங்கி திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மை அழகிலும் நடிப்பிலும் சுண்டி இழுக்கும் திரிஷா

தனது அண்ணன் மகளுக்கு ஏற்பட்ட உள்ளூர் பிரச்சனையை தீர்க்கும் நடவடிக்கையில் இறங்கும் ஆன்லைன் பத்திரிகை நிருபரான திரிஷா, உலக அளவிலான பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார். அந்த பிரச்சனை என்ன? அதில் இருந்து திரிஷா மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதை காதலோடு உலக அரசியலை சேர்த்து சொல்வது தான் ‘ராங்கி’.

தையல் நாயகி என்ற கதாபாத்திரத்தில் பத்திரிகை நிருபராக நடித்திருக்கும் திரிஷா, மேக்கப் இல்லாமல் இயல்பாக தோன்றினாலும் பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்கிறார். அழகால் ரசிகர்களை கிரங்கடித்த திரிஷா, இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளின் மூலம் மிரள வைக்கிறார்.

யாருக்கும் அடங்காத குணம், தைரியமான பேச்சு, பயம் அறியா முகம் என பல காட்சிகளில் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கும் திரிஷா, ஆலிமின் கவிதையை கேட்டு வெட்கப்படும் போதும், தன் மனதில் காதல் மலர்ந்ததை கண்களினால் வெளிப்படுத்தும் போதும், 20 வருடங்கள் அல்ல 40 வருடங்கள் ஆனாலும் முன்னணி நடிகைகளின் இடத்தில் சிம்மாசனம் போட்டு உர்கார்ந்திருப்பார்.

கதையை நகர்த்தி செல்லும் சுஷ்மிதா என்ற பள்ளி மாணவி வேடத்தில் நடித்திருக்கும் அனஷ்வர ராஜன், சோசியல் மீடியாவின் மோகத்தால் வாழ்க்கையை இழக்கும் பெண்களுக்கான எச்சரிக்கையாக வலம் வருகிறார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது, என்று தெரியாமல் அப்பாவித்தனமாக பயணிக்கும் அந்த கதாபாத்திரத்தில் அளவாக நடித்து கவர்கிறார்.

ஆலிம் என்ற வேடத்தில் போராளியாக நடித்திருக்கும் உஸ்பெகிஸ்தான் நடிகர் சிறப்பாக நடித்திருந்தாலும், அனைத்தையும் இழந்து போராடும் ஒரு நபர் போராட்டக்களத்தில் கூட காதலும், கைபேசியும் என்று இருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், அதற்காக இயக்குநர் கொடுத்திருக்கும் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இருப்பதால், அது குறையாக தெரியவில்லை.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இயக்குநர் ஜான் மகேந்திரன், சில காவலர்களால் அத்துறைக்கு ஏற்படும் களங்கம்.

ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார். உஸ்பெகிஸ்தானின் மலைகள் சூழ்ந்த பகுதிகளை வியக்கும் வகையில் படமாக்கியிருப்பவர், ஆக்‌ஷன் காட்சி நடுவே, காதல் உணர்வுகளை ரசிகர்கள் மனதில் கடத்தும் வகையில் காட்சிகளை கையாண்ட விதம் நன்று.

சி.சத்யாவின் இசை காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. கபிலனின் வரியில் “பனித்துளி…” பாடல் காதல் உணர்வுகளை அழுத்தமாக சொல்வதோடு, திரும்ப திரும்ப கேட்க வைக்கும் இனிமையான பாடலாக இருக்கிறது.

உள்ளூர் பிரச்சனையை மையமாக எடுத்துக்கொண்டு உலக பிரச்சனை பற்றி பேசியிருக்கும் இயக்குநர் சரவணன், தனது கூர்மையான வசனங்கள் மூலம் தனது சமூக கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

”தீவிரமாக தொழில் செய்பவன் தொழிலதிபர், தீவிரமாக அரசியல் பேசுபவன் அரசியல்வாதில், தீவிரமாக நியாயம் கேட்பவன் மட்டும் தீவிரவாதியா?”, “நாம் ஜெயிச்சா தான் போராளி, தோற்றால் தீவிரவாதி”, “உரிமையை கூட தாழ்மையுடன் கேட்பதா?” என்று வசனங்கள் மூலம் சமூக குறைகளை இயக்குநர் சரவணன் சுட்டிக்காட்டிய விதம் நன்று.

சமூக பிரச்சனை பற்றி பேசியிருக்கும் சரவணன், ”எல்லா நாடுகளிலும் ஆண்கள் நல்லா தான் காதலிக்கிறார்கள், ஆனால் தொடர்ந்து காதலிக்க மாட்றாங்க” என்று திரிஷாவின் மூலம் பேசியிருக்கும் வசனம் மூலம் பெண்களின் குமுறல்களை வெளிக்காட்டியிருக்கிறார்.

நாட்டில் நடக்கும் குற்ற செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டும், என்று சொல்லியிருக்கும் இயக்குநர் சரவணன், தற்போதைய பத்திரிகையாளர்கள் அப்படிப்பட்ட பணிகளை செய்வதில்லை என்று கவலைப்பட்டிருக்கிறார். சென்னையில் கஞ்சா வியாபாரம் குறித்து செய்தி வெளியிட்டதால், கொலை செய்யப்பட்ட நிருபர் போல் பலர் இன்னமும் சமூக விரோதிகளால் தாக்குதலுக்கு ஆளாகி வருவதை சரவணன் மறந்தது ஏன்? என்று தான் தெரியவில்லை.

படத்தில் ஏகப்பட்ட வசனங்கள் மியூட் பண்ணப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு காவல்துறையின் உடையில் இருக்கும் பெயர் நீக்கம், உலக அரசியல் பேசும் வசனங்கள் நீக்கம் என்று படம் பல தடைகளை கடந்து வந்திருப்பது பல காட்சிகளில் தெரிகிறது. ஆனாலும், இயக்குநர் தான் சொல்ல வந்ததை மிக அழுத்தமாகவும், அழகாகவும் சொல்லியிருக்கிறார்.

“எங்கள் நாட்டில் வளம் இல்லாமல் இருந்திருந்தால், நானும் என் நாட்டு தலைவரும் கொல்லப்பட்டிருக்க மாட்டோம், உங்கள் நாட்டிலும் வளம் இருக்கிறது, எச்சரிக்கையாக இரு சுஷ்மிதா” என்று ஆலிம் பேசும் இறுதி வசனம் உலகில் நடக்கும் போர்களுக்கான உண்மை பின்னணியை சொல்கிறது.

மொத்தத்தில், உலக மொழியான காதல் மூலம் பேசப்பட்டு இருக்கும் படம் ராங்கி