Monday, May 20
Shadow

ரன் பேபி ரன் – திரை விமர்சனம். (ரேங்க் 2.5/5)

ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள திரைப்படம் ரன் பேபி ரன்.

வங்கி அதிகாரியான ஆர்ஜே பாலாஜிக்கும் இஷா தல்வாருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இருவரும் காரில் சென்றுகொண்டு இருக்கும் போது எதிர்பாராத விதமாக ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களது காரில் ஏறிக் கொள்கிறார். தொடர்ந்து வீடு வரை வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆர்ஜே பாலாஜியிடம் உதவி கேட்கிறார். முதலில் மறுக்கும் அவர் பின்னர் ஒப்புக்கொள்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக ஆர்ஜே பாலாஜியின் வீட்டுக்குள்ளேயே ஐஸ்வர்யா ராஜேஷ் செத்துக்கிடக்கிறார். இதனால் அதிர்ச்சியாகும் ஆர்ஜே பாலாஜி தனது போலீஸ் நண்பர் விவேக் பிரசன்னாவின் யோசனைப்படி உடலை புதைக்க முடிவெடுக்கிறார். அதனை தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளில் ஆர்ஜே பாலாஜி சிக்கிக் கொள்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷை கொலை செய்தது யார்? ஆர்ஜே பாலாஜியை சூழ்ந்திருக்கும் பிரச்சினை என்ன என்பதே ரன் பேபி ரன்.

ஆர்ஜே பாலாஜி. காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வந்தவர் முதல் முறையாக சீரியஸ் கதையை தேர்வு செய்துள்ளார். படம் முழுவதும் அவரது வழக்கமான காமெடிகள் இல்லை எப்போதும் ஒருவிதமான குழப்பமான முகபாவனையை வைத்துக்கொண்டு நடித்துள்ளார். நல்ல முயற்சி. படம் தொடங்கியவுடனே கதை ஆரம்பித்து விடுகிறது. முதல்பாதி என்ன நடக்கிறது என்று தெரியவதற்குள்ளேயே முடிந்துவிடுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் வழக்கம்போல் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். நண்பராக வரும் விவேக் பிரசன்னாவின் நடிப்பும் அருமை. ஸ்மிருதி வெங்கட், ராஜ் ஐயப்பன், பக்ஸ் , ஜோ மல்லூரி என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். இரண்டாம் பாதி கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது. கிளைமாக்ஸ் திருப்தியில்லை. இதுபோன்ற கிளைமாக்ஸ் ஏற்கனவே பல படங்களில் பார்த்து கடந்து போனதுதான். த்ரில்லர் படங்களுக்கு ஒளிப்பதிவு தான் முக்கியம் அந்த வகையில் யுவா நன்றாக செய்துள்ளார். மதனின் கத்தரிக்கு இரண்டாம் பாதியில் வேலை இருந்தும் அதை கண்டுகொள்ளவில்லை.
சாம் சிஎஸ் இசையில் பாடல்கள் சிறப்பாக இல்லை. பின்னணி இசையும் இரைச்சல். மொத்தத்தில் பரபரவென்று த்ரில்லர் படம் கொடுக்க முயற்சித்துள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள். ஆனால் இது பத்தாது.