Sunday, May 28
Shadow

ருத்ரன் – திரை விமர்சனம்! (Rank 2/5)

 

 

ருத்ரன் திரை விமர்சனம்!

பல்வேறு கட்ட பிரச்சினைகளை கடந்து ராகவா லாரன்ஸ் நடித்து வெளியாகியுள்ள ருத்ரன் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

ராகவா லாரன்ஸ் படித்துவிட்டு ஐடி அலுவகத்தில் வேலை செய்கிறார். அப்பா, அம்மா என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். பிரியா பவானி சங்கரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். சரத்குமார் கொலை கும்பல் தலைவன் மற்றும் கட்டப்பஞ்சாயத்து தலைவனாக இருக்கிறார். இந்நிலையில் அப்பா நாசர் இறந்துவிட அவர் வாங்கிய கடனுக்காக வெளிநாடு சென்று உழைக்கிறார் லாரன்ஸ். இந்த நிலையில் அம்மாவும் இறந்து விடுகிறார். ஆனால் அம்மா தானாக சாகவில்லை சரத்குமார் தான் கொலை செய்து உள்ளார் என்பதை அறியும் அவர் இறுதியில் எப்படி வழி வாங்கினார்? அம்மாவை சரத்குமார் கொன்றது எதுக்காக? என்பதே ருத்ரன்.

ருத்ரனாக ராகவா லாரன்ஸ் இதுவரை பார்த்த அவரது படங்களின் மேனரிஸத்தை அப்படியே இதிலும் நகல் எடுத்துள்ளார். பேய் மட்டும் தான் இல்லை இருந்து இருந்தால் இதுவும் காஞ்சனா படம்தான். காதலில் உருகுவது, கோபத்தில் எதிரிகளை போட்டு பந்தாடுவது என ஆக்ஷனின் காமெடி செய்துள்ளார். அதர பழசான கதைக்கு அதற்கும் முந்தைய ஏவாள் காலத்து திரைக்கதை அமைத்து படம் பார்க்க வந்தவர்களை நெஞ்சில் கடப்பாரையை சொறுகி உள்ளனர். முதல் பாதியில் ஒரு 500 பேரை லாரன்ஸ் கொலை செய்கிறார். இரண்டாம் பாதியில் ஒரு 1000 பேரை போட்டு தள்ளுகிறார். படம் பார்த்து வெளியே‌ வரும்போது நம் தலையை தொட்டு பார்த்துக் கொள்வது நல்லது. பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை இரைச்சல். எடிட்டர் முடிந்தவரை படத்தை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். பிரியா பவானி சங்கர் வழக்கமான கதாநாயகியாக வந்து செல்கிறார். இரண்டாம் பாதியில் இவருக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. காளி வெங்கட், இளவரசு ஆகியோர் கொடுத்த வேலையை நன்றாக செய்துள்ளனர். நாசர் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் அப்பா அம்மாவாக தங்களுக்கு கொடுத்த பணியை நிறைவாக செய்துள்ளனர். அம்மா சென்ட்டிமென்ட் ஏற்கனவே பல படங்களில் பார்த்த மசாலாதான்.

மொத்தத்தில் இன்னுமா இப்படி படம் எடுக்கிறீங்க என்று படக்குழுவினரை பார்த்து கேட்க தோன்றுகிறது.. இது 2023 கொஞ்சம் பாத்து பண்ணுங்க ப்ளீஸ்.u