Sunday, May 19
Shadow

கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள “சர்தார்” திரை விமர்சனம்! (Rank 4/5)

இரும்புத் திரை, ஹீரோ படங்களை இயக்கிய பிஎஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, லைலா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்து தீபாவளியை ஒட்டி இன்று வெளியாகியுள்ள திரைப்படம் சர்தார்.

தண்ணீரை தனியார்மயமாக்குதல் பற்றியும் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்துவைத்து விற்பதால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பதையும் உளவாளி கதையில் நுழைத்து பரபர ஆக்ஷன் படமாக கொடுத்துள்ளார். காவல்துறை ஆய்வாளரான கார்த்தி தன்னிடம் வரும் வழக்குகளை திறமையாக முடித்து வைக்கிறார். கூடவே நாலு பேருக்கு உதவி செய்தால் நாற்பது பேருக்கு தெரிய வேண்டும் என்று அதில் தன்னை விளம்பரமும் செய்துகொள்கிறார். இவருக்கும் வழக்கறிஞரான ராஷி கண்ணாவுக்கும் காதல். இந்நிலையில் உளவுத்துறை சம்பந்தமான கோப்பு ஒன்று திருடுபோகிறது. இந்த வழக்கு கார்த்தியிடம் வருகிறது. யார் அந்த கோப்பை திருடியது என்று கதை தொடங்குகிறது. இதற்கு முன்னர் 1988ல் இந்திய பாதுகாப்பு ஆலோசகரை இந்திய உளவாளியான கார்த்தி சுட்டுக் கொல்கிறார். இதனால் கார்த்தி 32 ஆண்டுகள் சிறையில் இருக்கிறார். இந்நிலையில் திடீரென சிறையில் இருந்து தப்பிச் செல்கிறார். எதற்காக இத்தனை‌ ஆண்டுகள் கழித்து கார்த்தி தப்பிச் சென்றார்? உளவுத்துறை கோப்பை திருடியது யார்‌? என்பதை பரபர ஆக்ஷனுடன் சொல்லியுள்ளார் இயக்குனர்.

கார்த்தி உளவுத்துறை உளவாளியாக வயதான கெட்டப்பில் கவனம் ஈர்க்கிறார். வயதான தோற்றத்திற்கே உண்டான கைநடுக்கத்துடன் இருப்பது எதிரி நாட்டுக்குள் சென்று தனது டார்கெட்டை முடிப்பது எதிரிகளை அடித்து துவம்சம் செய்வது என தூள் கிளப்பியுள்ளார். ரெஜிஷா விஜயனுடன் காதலில் உருகுகிறார். தாய் நாட்டுக்காக தேசத் துரோகி பட்டத்தை சுமந்து வருடக்கணக்கில் சிறையில் வாடும் நபரின் உடல் மொழியை அப்படியே கொண்டு வந்துள்ளார். மகனாக வரும் கார்த்தி அதே இளமைத் துள்ளலுடன் வருகிறார். குட்டிப்பையன் ரித்விக் க்யூட். நீண்ட இடைவெளிக்குப் பிறகு லைலா தனது பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். ராஷி கண்ணா, முனீஸ்காந்த் படத்திற்கு பலம். ஜிவி.பிரகாஷின்‌‌ பின்னணி இசை சில இடங்களில் சிறப்பு. பாடல்கள் வேகத்தடை. ஜார்ஜ் வில்லியம்ஸின் கேமிரா சண்டைக்காட்சிகளில் பரபரக்கிறது. திலிப் சுப்பராயனின் சண்டைக்காட்சிகள் விறுவிறுப்பை கூட்டியுள்ளன.

இன்றைய காலகட்டத்தில் தண்ணீருக்காக உலக நாடுகள் சண்டையிட்டுக்கொள்கின்றன. தனியார் மயமாகும் தண்ணீரால் ஏற்படும் அபாயத்தை தனது திரைக்கதையின் மூலம் நல்லதொரு கருத்துள்ள படமாக கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர். ஆனால் படத்தின் நீளம் மற்றும் ஹீரோயிசத்தனமாக இரண்டாம் பகுதி சோதிக்கிறது. நல்ல கதையை நல்ல திரைக்கதையாக மாற்றுவதில் இம்முறையும் கொஞ்சம் தடுமாறியுள்ளார் மித்ரன். திரைக்கதையில் கொஞ்சம் உழைத்திருந்தால் சர்தார் இன்னும் சாதித்திருப்பார்.