சட்டம் என் கையில் திரைவிமர்சனம்!
நடிகர் சதீஷ் நடித்துள்ள! சட்டம் என் கையில் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
கதையின் ஆரம்பத்திலேயே சதீஷ் சற்று பதற்றத்தோடு ஏற்காடு மலையில் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தில் வரும் ஒரு இளைஞன் மீது கார் மோதி விடுகிறது. இதனால் பதற்றமடையும் சதீஷ் அந்த உடலை காரின் பின்புறம் போட்டுவிட்டு பயணிக்கிறார். அப்போது அவர் குடித்துவிட்டு கார் ஓட்டியதாக போலீஸ் கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறது. அதேநேரம் ஏற்காட்டில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அந்த கொலையை சதீஷ் மீது போட நினைக்கிறார் போலீசான பாவல் நவநீதன். இறுதியில் என்ன ஆனது என்பதே சட்டம் என் கையில்.
சதீஷ் முதல் முறையாக இப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் இருந்து சைலன்டாக காய் நகர்த்தி தனது காரியத்தை சாதிக்கும் கதாபாத்திரம். தனது நகைச்சுவையை மூட்டை கட்டி வைத்துவிட்டு கதைக்கு என்ன தேவையோ அதனை மட்டும் செய்துள்ளார். அதுதான் இப்படத்திற்கு பலமாக உள்ளது. அதேபோல் சப் இன்ஸ்பெக்டராக வரும் அஜய் ராஜ் மற்றும் எஸ்எஸ்ஆக வரும் பாவல் நவநீதன் இடையேயான ஈகோ மோதல் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.
ஒரே இரவில் அதுவும் பெரும்பாலான காட்சிகள் போலீஸ் ஸ்டேஷனில் நடப்பது போல கதை அமைத்துள்ளார் இயக்குனர். நல்ல திரைக்கதை இருந்தால் சுவாரஸ்யமான கதை பண்ணலாம் என்பதற்கு இப்படம் உதாரணம். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை த்ரில் கலந்து சொல்லியுள்ளனர். ரித்திகா பரிதாபம் வரவைக்கிறார். அஜய் ராஜ், பாவலின் ஈகோ கடைசி வரை சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.
பின்னணி இசை, கேமரா ஒர்க் அனைத்தும் ஒரு சிறந்த த்ரில்லர் படத்துக்கான பணியை சிறப்பாக செய்துள்ளன. கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ரசிக்கும் படி உள்ளது. மொத்தத்தில் சட்டம் என் கையில் – நீதி . ரேட்டிங் 3.5/5