மாவீரன் திரைவிமர்சனம்
சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிப்பில் மாவீரன்
இந்த படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நாயகியாக அதிதி படத்தில் வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நீண்ட இடைவெளிக்கு பிறகு சரிதா இந்த படத்தில் நடித்திருக்கிறார் கொக்கு வித் கோமாளி புகழ் மோனிஷா யோகி பாபு அருவி மதன் தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர் இவர்களுடன் விஜய் சேதுபதியின் குரலும் இந்த படத்தில் நடித்துள்ளது. பரத் சங்கர் இசையில் அஸ்வின் மடோன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மாவீரன்
சிக்ஸர் அடித்தாரா சிவகார்த்திகேயன் – “மாவீரன்” திரை விமர்சனம்!
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் மாவீரன். மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
சென்னையில் குடிசைப் பகுதியில் தனது அம்மா, தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். செய்தித்தாளில் தினந்தோறும் வரும் மாவீரன் என்ற கதைக்கு படம் வரைந்து கொடுக்கிறார். ஆனால் இவர் அங்கு வேலை செய்யவில்லை வேறு ஒருவருக்கு எழுதி கொடுக்கிறார். எதையும் எதிர்க்கும் தைரியம் இல்லாத அட்ஜெஸ்ட்மென்ட் செய்து வாழ நினைப்பவர். ஒருநாள் அவர்களது வீட்டை இடிக்க போவதாக கூறி மக்கள் அனைவரையும் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றுகின்றனர். ஆனால் அப்பகுதி அமைச்சர் மிஷ்கின் செய்த ஊழலால் குடியிருப்பு தரமற்றதாக கட்டப்பட்டள்ளது தெரியவருகிறது. ஆனால் அதனை எதிர்த்து கேட்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார் சிவகார்த்திகேயன். செய்தித்தாளில் வேலை செய்யும் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயன் திறமையை கண்டு அவருக்கு மாவீரன் கதையை எழுதும் வேலை வாங்கி தருகிறார். ஒருநாள் அமைச்சரின் ஆட்களால் சிவகார்த்திகேயன் குடும்பத்திற்கு பிரச்சினை வருகிறது. கோழையான சிவகார்த்திகேயனை அம்மாவே கேவலமாக பேசியதால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயல்கிறார். அப்போது அவருக்கு ஒரு குரல் கேட்கிறது. அது சொன்னபடி அமைச்சரை எதிர்க்கிறார் இதனால் சிவகார்த்திகேயனை கொல்ல அமைச்சர் துடிக்கிறார். இறுதியில் சிவகார்த்திகேயன் நிலை என்ன ஆனது? குரல் கேட்க காரணம் என்ன? கோழை மாவீரன் ஆனானா? என்பதே மாவீரன் படத்தின் கதை.
மடோன் அஸ்வின் தான்சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்பதை இப்படத்திலும் காட்டியுள்ளார். முதல் பாதி அழகாக காமெடியாக நகர்த்தியுள்ளார். அரசியல்வாதிகளை சாமானியன் எதிர்த்து கேட்கும் கதையில் அழகான ஃபேண்டஸி அம்சத்தை இணைத்து அருமையான படத்தை கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு எது வரும் என்பதை உணர்ந்து கதை அமைந்துள்ள இயக்குனருக்கு வாழ்த்துகள். சிவகார்த்திகேயன் பயந்து நடுங்கும் கோழையாக சுயநலம் கொண்டவனாக, மனம் திருந்தி மக்களுக்காக போராடும் மாவீரனாக சிறப்பாக நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி அசரீரியாக குரல் கொடுத்து அதகளம் செய்துள்ளார். சிவகார்த்திகேயன் மேல் இருந்து கேட்கும் குரலை கேட்டு அதற்கு தகுந்தபடி நடக்கும் காட்சிகளில் திரையரங்குகளில் சிரிப்பு வெடி. யோகி பாபு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரிக்க வைத்துள்ளார். இந்திக்காரன் என காட்ட தனது பெயரை குமார் என்று எழுதி மேலே கோடு போடும் காட்சி ரகளை. சரிதா மற்றும் தங்கையாக நடித்துள்ள மோனிஷா இருவரும் கதையின் ஓட்டத்திற்கு உதவியுள்ளனர். அதிதி ஷங்கர் தன்னால் முடிந்த அளவு உதவியுள்ளார். தேவையில்லாத காட்சிகள் இல்லாதது ஆறுதல். சுனில் புதுவிதமான கதாபாத்திரம். தற்போது உள்ள அரசியல்வாதிகள் யாருக்கும் சுயபுத்தி இல்லை என்பதை சுனில் கதாபாத்திரம் உணர்த்துகிறது அதை அவர் அருமையாக செய்துள்ளார். மிஷ்கின் ஊழல் அரசியல்வாதியாக பிரமாதப்படுத்தியுள்ளார். முதல் பாதியில் அதிகமாக வராவிட்டாலும் இரண்டாம் பாதியில் மிரட்டியுள்ளார்.
பரத் சங்கரின் இசையில் பாடல்கள் நன்று. பின்னணி இசையில் சிறப்பாக செய்துள்ளார். அருவி மதன், திலீபன் போன்றோரின் நடிப்பு நன்று. முதல் பாதியை காமெடியாக நகர்த்திய இயக்குனர் இரண்டாம் பாதியில் சற்று தடுமாறியுள்ளார் என்றே சொல்லலாம். திரும்ப திரும்ப குரல் கேட்பது, வில்லனிடம் ஹீரோ அடங்கி போவது, கிளைமாக்ஸ் காட்சி உள்ளிட்டவை சற்று சோர்வை ஏற்படுத்துகிறது. படத்தின் நீளம் சற்று அதிகம். ஆனால் இவை எல்லாத்தையும் மறக்கடிக்கிறது இயக்குனரின் திரைக்கதை. ஃபேண்டஸி கலந்த ஆக்ஷன் படமாக கொடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜெயித்தை கொடுத்துள்ளார். வீரமே ஜெயம். ரேட்டிங் – 4/5