
திரைப்பட விமர்சனம்: ‘தடை அது உடை’ – யூடியூப்பின் இரு முகங்களை வெளிச்சமிடும் கதை!
மூன்று நெருங்கிய நண்பர்கள் செங்கல் சூளையில் வேலை பார்த்து வரும் சாதாரண இளைஞர்கள். ஆனால், சமூக ஊடக காலத்தில் அனைவரும் போல், யூடியூப்பின் மூலம் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற கனவு இவர்களுக்கும் இருக்கிறது. அந்த ஆசையில் மூவரும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனலை தொடங்குகிறார்கள். சில நாட்களிலேயே அவர்கள் வீடியோக்கள் வைரலாகி, யூடியூப்பில் பிரபலங்களாக மாறுகிறார்கள்.
ஆனால் அந்த வெற்றி நீடிக்கவில்லை. திரைப்பட உலகில் அடியெடுத்து வைக்க முயன்ற இவர்களின் முதல் முயற்சி மிகப் பெரிய தோல்வியிலும் நஷ்டத்திலும் முடிகிறது. அதோடு, எதிர்பாராத பிரச்சனையிலும் சிக்கி விடுகிறார்கள். அதன் பின்னர் இவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பது தான் ‘தடை அது உடை’ திரைப்படத்தின் மையக்கரு.
இந்தக் கதையைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், நகரப் பகுதிகளில் மட்டுமல்லாமல், கிராமங்களிலும் யூடியூப் ஒரு புதிய கனவாக மாறி வரும் உண்மையையும் படம் வெளிப்படுத்துகிறது. யூடியூப்பின் பிரபலத்துடன் வரும் மறுபக்கம் — அதாவது அதன் ‘disadvantage side’ — என்பதையும் படம் நன்கு பதிவு செய்திருக்கிறது.
இயக்குனர், சமூக ஊடகத்தின் தாக்கம் எவ்வளவு ஆழமாக நம்மை பாதிக்க முடியும் என்பதைச் சிந்திக்க வைக்கும் விதத்தில் காட்சிகளைக் கட்டமைத்துள்ளார். மூன்று இளைஞர்களின் நட்பு, கனவு, வீழ்ச்சி ஆகியவற்றை நம்பத்தகுந்த வகையில் சொல்லி, இறுதியில் ஒரு வலுவான செய்தியையும் மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்.

