Thursday, May 30
Shadow

திருச்சிற்றம்பலம் – திரைவிமர்சனம் (Feel Good Movie) Rank 4/5

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் படத்திற்கு பிறகு மித்ரன் ஜவஹர் மற்றும் தனுஷ் மீண்டும் இணைந்துள்ள படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் வெளிவந்துள்ள படம். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம். கர்ணனுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் தனுஷ் படம் என்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம். இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை பார்க்கலாம்.

தனுஷ் அவருடைய அப்பா பிரகாஷ்ராஜ் மற்றும் தாத்தா பாரதிராஜா உடன் வாழ்ந்து வருகிறார். அப்பா பிரகாஷ்ராஜ் போலீஸ் இன்ஸ்பெக்டர். பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு எதிர்பாராத கார் விபத்தில் தனுஷின் அம்மா ரேவதி மற்றும் தங்கை இறந்துவிடுகின்றனர். தனுஷும், பிரகாஷ்ராஜும் காயத்துடன் உயிர் பிழைக்கின்றனர். அம்மா மற்றும் தங்கையின் மரணத்திற்கு அப்பா தான் காரணம் என்று அவருடன் பேசாமல் இருக்கிறார் தனுஷ். அதே குடியிருப்பில் இருக்கும் நித்யா மேனனும் தனுஷும் சிறுவயது முதலே நண்பர்களாக பழகி வருகின்றனர். நித்யா மேனன் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார். நம்ம நாயகன் பழம் என்று அழைக்கப்படும் திருச்சிற்றம்பலம் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். அப்பா பிரகாஷ்ராஜுக்கும் தனுஷுக்கும் அடிக்கடி வீட்டில் சண்டை நடக்கிறது. அதனை தாத்தா பாரதிராஜா தடுத்து நிறுத்தி இருவரையும் சமாதானம் செய்து வைக்கிறார். ஒருநாள் தனது கல்லூரி தோழி ராஷி கண்ணாவை பார்க்கும் தனுஷ் அவரை காதலிக்கிறார். காதலுக்கு நித்யா மேனன் ஐடியா கொடுக்க ஆனால் ராஷி கண்ணா அதனை மறுக்கிறார். இதனால் சூப் பாய் ஆகும் தனுஷ் நித்யா மேனனிடம் புலம்பித் தவிக்கிறார். ஊருக்கு திருமணத்திற்கு செல்லும் தனுஷ் அங்கு பிரியா பவானி சங்கரை பார்த்து காதலில் விழுகிறார். ஆனால் அதுவும் கைகூடவில்லை. இதனிடையே அப்பா பிரகாஷ்ராஜுக்கு பக்கவாதம் வந்து அவர் படுக்கையில் விழுகிறார். இறுதியில் அப்பாவின் அன்பை தனுஷ் புரிந்து கொண்டாரா? தனுஷின் காதல் என்ன ஆனது என்பதுதான் திருச்சிற்றம்பலம்.

படத்தில் மிகப் பெரிய ப்ளஸ் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இருவரும்தான். தனுஷ் நடிப்பை பற்றி சொல்லவேண்டியது இல்லை. இருவரது கெமிஸ்ட்ரி நன்றாக இப்படத்தில் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அதே‌போன்று பாரதிராஜாவின் அனுபவ நடிப்பு படத்தை இன்னும் கொஞ்சம் அழகாக மாற்றுகிறது. ராஷி கண்ணா இக்காலத்திய மாடர்ன் பெண்ணாக வந்து தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். பிரியா பவானி சங்கருக்கு கேமியோ ரோல். அவரும் அதனை சிறப்பாக செய்துள்ளார்.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு பளிச்சென்று உள்ளது. அனிருத்தின் பாடல்கள் வழக்கம் போல் ப்ளஸ்தான். இளையராஜா பாடல்கள் அங்கங்கே வந்துபோகின்றன. அவை வரும் இடங்களில் எல்லாம் மனதிற்கு இதமாக உள்ளது. நித்யா மேனன் நடிப்பு இப்படத்திற்கு மிகப் பெரிய ஃப்ளஸ். தனுஷுக்கு இணையான நடிப்பை வழங்கியுள்ளார்.

படம் தொடங்கியது முதல்காட்சிகள்மிகவும் விறுவிறுப்பாக  நகர்வது நம் வாழ்கையில் நாம் சந்தித்த பல நிகழ்வுகள் நம்மை நினைவுபடுத்துகிறது . இடைவேளைக்குப் பிறகு காட்சியமைப்பு மேலும் நம்மை கவர்கிறது   சில காட்சிகள் தனுஷின் முந்தைய படங்களை நியாபகப்படுத்துகிறது.  சண்டைக்காட்சிகள் இல்லாதது தனுஷ் ரசிகர்களுத்து சற்று வருத்தமே. மொத்தத்தில் நல்ல ஒரு ஃபீல் குட் படத்தை தர முயற்சித்துள்ளனர். அதை மிகவும் சிறப்பாக செயல்படுத்தியுள்ளார் இயக்குநர் மித்திரன் ஜவகர். தனுஷ்க்கு நிச்சயம் மிக பெரிய வெற்றி படமாக அமையும்.