Thursday, April 18
Shadow

திருவின் குரல்” திரை விமர்சனம்! (Rank 3/5)

அருள்நிதியை நம்பி போலாமா? – “திருவின் குரல்” திரை விமர்சனம்!

இயக்குனர் பிரகாஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் திருவின் குரல். அருள்நிதி படம் என்றாலே த்ரில்லர் படமாகத்தான் இருக்கும் போய் பார்க்கலாம் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதாக என்று பார்க்கலாம்.

சிவில் இன்ஜினியரிங் படித்துள்ள அருள்நிதி வாய் பேச முடியாதவர் காதும் கொஞ்சம் கேட்காது. கோபக்காரர். அப்பா பாரதிராஜாவுடன் சேர்ந்து ஒரு கட்டிட ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். நடுத்தரமான குடும்பம். அத்தை மகளான ஆத்மிகாவுக்கும் அருள்நிதிக்கும் கல்யாண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கட்டிட விபத்தில் தலையில் அடிபட்டு பாரதிராஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அங்கு லிப்ட் ஆபரேட்டாராக இருக்கும் அஸ்ரப் உடன் மோதல் ஏற்படுகிறது. கோபத்தில் அவரை அருள்நிதி அடித்து விடுகிறார். அஸ்ரப் அங்கு வேலை பார்க்கும் 3 நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேரங்களில் பணத்திற்காக கொலை , கொள்ளை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தன்னை அடித்த அருள்நிதியை பழிவாங்க நினைக்கும் அந்த கும்பல் என்ன செய்தது? அருள்நிதி அந்த கும்பலில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? என்பதே திருவின் குரல்.

அருள்நிதி வழக்கம்போல் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்துள்ளார். வாய்‌பேச முடியாதவராக நன்றாக நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் கோபம் கொண்டு அனைவரையும் அடுத்துத் துவக்கிறார். ஆத்மிகாவுக்கு படத்தில் அதிகம் வேலை இல்லை. பாரதிராஜா தேர்ந்த நடிகராக நெகிழ்வான நடிப்பை கொடுத்துள்ளார். அரசு மருத்துவமனையில் நோயாளிகள் படும் அவஸ்தையை கண்முன் கொண்டு வந்துள்ளார். வீட்டுக்கு கூட்டிட்டுப் போய்டுடா என்று அவர் அழுகும் போது கண்கள் கலங்குகிறது. கதைக் களமே அரசு மருத்துவமனையில் தான் என்றாலும் இப்படிப்பட்ட ஆட்கள் அங்கு இருப்பார்களா என்று கேட்கத் தோன்றுகிறது. மெயின் வில்லனாக அஸ்ரப் மிரட்டியுள்ளார். அவருடன் வரும் வார்டு பாய் ஜீவா, பிணவறை மேன் மகேந்திரன், செக்யூரிட்டி பாய் ஹரிஷ் அனைவருமே வில்லத்தனத்தில் கொடூரம் காட்டியுள்ளனர். சிறுமி மோனிகா நடிப்பும் அருமை. சின்டோ பொடுதாஸின் ஒளிப்பதிவு ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்கிறது. சாம் சிஎஸ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் அவரது பாணி இதிலும் தெரிகிறது. மெதுவாக தொடங்கும் கதை அப்படியே வேகம் எடுக்கும் என்று நினைத்தால் அங்கேயே தான் நிற்கிறது. கிளைமாக்ஸ் காட்சி நான் மகான் அல்ல படத்தை நினைவூட்டுகிறது. மொத்தத்தில் வித்தியாசமான ஆக்ஷன் படத்தை கொடுக்க நினைத்த இயக்குனர் திரைக்கதையில் இன்னும் உழைத்திருந்தால் நல்ல படமாக வந்திருக்கும். இப்போது பரவாயில்லை என்று மட்டுமே சொல்ல வைக்கிறது.