Sunday, May 19
Shadow

தக்ஸ் – திரைவிமர்சனம் (Rank 3/5)

குமரி மாவட்டத்தின் தக்ஸ் திரை விமர்சனம்!

பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கியிருக்கும் இரண்டாவது படம் தக்ஸ். முதல் படத்தை காதல் படமாக இயக்கியவர் இம்முறை ஒரு ஆக்ஷன் படத்துடன் வந்து இருக்கிறார். ஜெயிலில் இருந்து தப்பிக்க நினைக்கும் குற்றவாளிகளின் கதையாக தக்ஸ் படம் உருவாகியுள்ளது.

ஹிர்து ஹாரூன் தனது காதலிக்கு தொல்லை கொடுத்த ஒருவனை கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்கிறார். எப்படியாவது சிறையில் இருந்து தப்பித்துவிட்டு காதலியுடன் வெளிநாடு செல்ல வேண்டும் என்பது இவரின் திட்டம். இதற்கு சிறையில் இருக்கும் சக கைதிகளின் உதவியை நாடுகிறார். சிறையில் இருக்கும் பாபி சிம்ஹா, முனீஷ்காந்த் உள்ளிட்ட கைதிகள் சம்மதிக்கின்றனர். இறுதியில் எல்லோரும் சிறையில் இருந்து தப்பித்தார்களா என்பதே தக்ஸ்.

புதுமுகம் ஹிர்து ஹாரூன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இயல்பாக நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார். காதலியாக அனஸ்வரா நல்ல அறிமுகம். ஃபிளாஷ்பேக் காட்சிகளை குறைத்துள்ளது நன்று. சிறை அதிகாரியாக ஆர்கே.சுரேஷ் விரைப்பாக இருக்கிறார். பாபி சிம்ஹா நாயகனின் திட்டத்துக்கு உடன்படும் நபராக நடித்துள்ளார். முனீஷ்காந்த் உள்ளிட்டவர்களின் நடிப்பு இயல்பாக உள்ளது. குறிப்பாக அந்த இரட்டையர். படம் முழுக்க சிறைக்குள்ளேயே நடப்பதால் ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்படுகிறது. அத்தனை போலீஸ்காரர்கள் உள்ள சிறையில் பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டி தப்பித்தது எல்லாம் நம்பும்படியாக இல்லை. ஒருவருக்கு கூடவா தெரியாமல் போய்விடும். நம்பகத்தன்மையற்ற காட்சிகள் படத்தை ரசிக்க வைக்கவில்லை.

பிரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. சண்டைக் காட்சிகள் இயல்பாக எடுக்கப்பட்டுள்ளன. சாம் சிஎஸ் இசையில் இரண்டு பாடல்கள் அருமை. பின்னணி இசையும் ஓகே தான். கடைசிவரை எந்தவித டிவிஸ்ட் இல்லாமல் செல்லும் திரைக்கதை ஒன்றவில்லை. ஒருமுறை பார்க்கலாம்.